(நா.தனுஜா)
இலங்கை அரசாங்கம் செயற்திறன்மிக்க மறுசீரமைப்புச் செயன்முறையில் கால்பதித்திருப்பதுடன் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியளிப்பினைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான முன்கூட்டிய நடவடிக்கைகள் அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது.
அதன்படி நாட்டின் பொருளாதாரம் வலுவடைவதைக் காண்பிக்கின்ற நேர்மறையான சமிக்ஞைகள் ஏற்கனவே தென்பட ஆரம்பித்திருக்கின்றன என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் திறைசேரியின் செயலாளர் என்போர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.
அதுமாத்திரமன்றி நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் அதேவேளை, சர்வதேச நாணய நிதியச்செயற்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்யும் நோக்கில் தற்போதைய மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயற்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதகாலத்தில் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை கடந்த 20 ஆம் திகதி அனுமதியளித்துள்ளது.
அதனையடுத்து வியாழக்கிழமை (30) இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு மெய்நிகர் முறைமையின் ஊடாக கடன்வழங்குனர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இலங்கை விளக்கமளித்தது.
அதனைத்தொடர்ந்து மேற்படி செயற்திட்ட விளக்கமளிப்பு சந்திப்புக்குத் தலைமைதாங்கிய இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். அவ்வறிக்கையில் அவர்கள் மேலும் கூறியிருப்பதாவது:
சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டமானது கொள்கை அமுலாக்கம் தொடர்பில் தெளிவான வழிகாட்டலை வழங்குவதுடன் இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, வளர்ச்சியை மீளுறுதிப்படுத்துவதற்கு அவசியமான உந்துதலையும் அளிக்கின்றது.
அதன்படி இலங்கையின் பேரண்டப்பொருளாதார நிலைவரம் குறித்து விளக்கமளிப்பதுடன் சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டத்தின் முக்கிய கூறுகள் மற்றும் குறிக்கோள்கள் பற்றியும், கடன்கொடுனர்கள் விவகாரத்தில் முன்னெக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் நாம் மெய்நிகர் முறைமையின் ஊடாக முதலீட்டாளர்களுக்குத் தெளிவுபடுத்தினோம்.
இலங்கை அரசாங்கம் செயற்திறன்மிக்க மறுசீரமைப்புச்செயன்முறையில் கால்பதித்திருப்பதுடன் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியளிப்பினைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான முன்கூட்டிய நடவடிக்கைகள் அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது.
சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டத்தின் பிரகாரம் வரிசார் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல், பொதுப்படுகடன்களின் நிலையான தன்மையை உறுதிசெய்தல், விலையுறுதிப்பாட்டை மீள நிலைநாட்டல், வெளிநாட்டுக்கையிருப்பை மீளக்கட்டியெழுப்பல், ஊழல்மோசடிகளின் விளைவாக ஏற்படும் பாதிப்புக்களைக் குறைத்தல், நிதியியல் முறைமை உறுதிப்பாட்டைப் பாதுகாத்தல், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் போன்றவற்றை முழுமையாக அடைந்துகொள்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
நாட்டுமக்களே அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய தரப்பினர் என்பதுடன் சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டத்தின் விளைவாகப் பாதிக்கப்படக்கூடிய சமூகப்பிரிவினரைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் விசேட அவதானம் செலுத்தியுள்ளோம்.
இவற்றின் விளைவாக ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கத்தின் வேகம் குறைந்து, சுற்றுலாத்துறை மூலமான வருவாய்கள் நியாயமான மட்டத்துக்குத் திரும்புவதுடன் நாட்டின் பொருளாதாரம் வலுவடைவதைக் காண்பிக்கின்ற நேர்மறையான சமிக்ஞைகள் ஏற்கனவே தென்பட ஆரம்பித்திருக்கின்றன.
அதன்படி நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் அதேவேளை, சர்வதேச நாணய நிதியச்செயற்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்யும் நோக்கில் எமது மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயற்படுத்துவோம்.
வரி மறுசீரமைப்புக்களுக்கு மத்தியில், அனைத்தையும் உள்ளடக்கிய படுகடன் செயற்திட்டமொன்று இல்லாவிடின் நாட்டின் படுகடன்கள் ஸ்திரமற்றவையாகவே காணப்படும். இவ்வாறானதொரு பின்னணியில் திரவத்தன்மையை இலக்காகக்கொண்ட உள்நாட்டுப் படுகடன் செயற்திட்டத்துக்கான தெரிவுகள் தொடர்பில் அதிகாரிகள் ஆராய்ந்துவருகின்றனர்.
அதுமாத்திரமன்றி மீள்கொடுப்பனவு இயலளவு மேலும் சிதைவடைவதைத் தவிர்க்கும் நோக்கில் நிதியியல் உறுதிப்பாட்டையும் பேணுகின்றனர். அந்தவகையில் வெளிப்படைத்தன்மையுடனும், நியாயமான விதத்திலும் எமது அனைத்துக் கடன்வழங்குனர்களுடனான இணக்கப்பாட்டினைத் துரிதப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM