அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் ஃபோர்ட் லோடர்டேல் விமான நிலையத்தில்,  அமெரிக்க முன்னாள் இராணுவ வீரராகக் கருதப்படும் இளைஞர் ஒருவர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் எண்மர் காயங்களுக்கு உள்ளாகினர்.

குறித்த விமான நிலையத்துக்கு வந்த இந்த இளைஞர், தனது பயணப் பொதியில் இருந்து துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கழிவறைக்குச் சென்றிருக்கிறார். அங்கே துப்பாக்கியை இயக்குவதற்கத் தயார் செய்த அவர், வெளியே வந்ததும், பயணப் பொதிகளைப் பெற்றுக்கொள்ளும் மண்டபத்தில் நின்றிருந்தவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். இதனால் கலவரமடைந்த பயணிகள் அல்லோல கல்லோலத்தின் மத்தியில் பாதுகாப்புத் தேடி ஓடினர்.

திடீரென நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் ஐவர் ஸ்தலத்திலேயே பலியாகினர். மேலும் எண்மர் படுகாயமடைந்தனர். எனினும், சுதாகரித்துக்கொண்ட பொலிஸார் மின்னல் வேகத்தில் இயங்கி துப்பாக்கிதாரியை மடக்கிப் பிடித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எஸ்டீபன் சண்டியாகோ என்றும் இவரிடம் அமெரிக்க இராணுவ அடையாள அட்டை காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

2007 முதல் 2016 வரை அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றிய இந்த இளைஞர், சிறந்த வீரருக்கான பல பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றவர். கடந்த நவம்பர் மாதம் தனது மூளையை யாரோ கட்டுப்படுத்துவதாகக் கூறிய இவர் மனநல ஆலோசனை பெற அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.