வெளிநாடுகளுக்கு  வேலைவாய்ப்பை தேடி சென்று துன்புறுத்தலுக்கு இலக்காகும் நபர்கள்  தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம்  செலுத்த வேண்டும் என சுதந்திரத்திற்கான மகளிர் அமைப்பு வேண்டுகோல் விடுத்துள்ளது. மருதானை சன சமூக நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடமபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அதன் செயலாளர் ஹேமமாலி அபேரத்தின மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த காலத்தில் வெளிநாடுகளுக்கு சென்று துன்புறுத்தலுக்கு உள்ளாகி பலர் நாடு திரும்பியிருக்கின்றார்கள். அவர்களில் சிலர் பணிபுரிந்த நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகி இறந்து சடலமாகவும் திரும்பியுள்ளனர். 

நாட்டுக்கு வருவாயை அதிகமாக ஈட்டித்தரும் ஒரு துறையாக இது அமைந்திருப்பினும் இவ்வாறு வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புகளுக்காக செல்லும் பணியாளர்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நடைமுறைகளை கையாள்கின்றது என்பது கேள்விக்குறியே.

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிநாடுகளில் தங்கியிருந்து தொழில் புரிவோர் குறித்த தகவல்களை வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் திணைக்களம் இதுவரையில் வெளியிடவில்லை. குறித்த அமைச்சினால் 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் 2 இலட்சத்து 45 ஆயிரத்து 550 பேர் வேலைவாய்ப்புக்களுக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.

அவ்வாறு சென்றவர்களில் 34 வீதமானவர்கள் பெண்களே ஆவர். இத்தொகையில்   61 வீதமானவர்கள் வீட்டுப் பணிப்பெண்களாக சென்றுள்ளனர். வெளிநாட்டு  வேலைவாய்ப்புக்களுக்காக சென்றுள்ளவர்களில் 93 வீதமானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கே சென்றுள்ளனர். சவுதி அரேபியா கட்டார் போன்ற நாடுகளுக்கு அதிகமானோர் சென்றுள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதேவேளை சட்டவிரோதமாக 1 இலட்சத்து 16 ஆயிரத்து 866 பேர் பயணித்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் திணைக்களத்தினூடாக பதிவு செய்யப்படாமல் இயங்கும் தனியார் நிறுவனங்களின் ஊடாக   சட்டவிரோதமாக ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 441 பேரும் பயணித்துள்ளனர்.  தொழில் புரியும் நாடுகளில்  துன்புறுத்தலுக்கு இலக்கானவர்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பேற்கும் போது சட்ட விரோதமாக பதிவு செய்யப்படாமல் இயங்கும் வேலைவாய்ப்புக்கள் நிறுவனத்தின் ஊடாக பயணித்தவர்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பேற்காது. 

கடந்த 2015 ஆம் ஆண்டை பொருத்தவரையில் கொழும்பு  மாவட்டத்திலிருந்து 31440 பேர் சென்றுள்ளனர். நூடளாவிய ரீதியில்  1006 வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இவற்றில் 546 நிறுவனங்கள் பொழும்பு மாவட்டத்துக்குள் பதிடூவு செய்யப்ட்டுள்ளது. கடந்த காலங்களில் வெளிநாடுகளுக்கு சென்று துன்புறுத்தலுக்கு இலக்கானவர்களின் செய்த முறைப்பாடுகளுக்கு அமைவாக 8366 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் 312 மரணங்கள் சம்பவித்திருக்கின்றன. 

தொடர்ந்தும்  நாட்டில் பலர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று பல இன்னல்களை  எதிர்நோக்குகின்றனர் அவர்கள் தொடர்பான தகவல்களை பெற்று அரசாங்கத்தினால்  விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

 வெளிநாடுகளில் இறந்தவர்களது சடலங்கள் 3 மாதங்கள் கழித்தே நாட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன. சடலங்களை விரைவாக கொண்டுவருவதற்கும் அவர்கள் அங்கு எதிர் நோக்கும் பிரச்சிணைகளுக்கும் தகுந்த தீர்வினை முன்வைக்கவேண்டும்.  ஆதற்கு உள்நாட்டில் தொழில் வாய்ப்புக்களை உறுவாக்கி பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றார்.