பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக வலுவான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிர் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

ஹம்பந்தோட்டை துறைமுகம் மற்றும் சீன வர்த்தக வலய விவகாரம் உள்ளிட்ட நாட்டில் முன்னெடுக்கப்படும் புதிய அரசியலமைப்பு நடவடிக்கைகள் போன்ற பல விடயங்களை உள்ளடக்கிய நம்பிக்கையில்லா பிரேரணையே முன் வைக்கப்பட உள்ளது.

இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிர் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துரையாடியுள்ளனர். நல்லாட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களின் ஆதரவுகளை பெற்றுக்கொள்வதற்கு இந்த சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதற்கான அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் அனைத்து மட்டத்திலும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

நல்லாட்சி அரசாங்கத்தின் எந்தவொரு செயற்பாடுகளும் வெளிப்படை தன்மை அற்றதாகவும் நம்பிக்கையற்றதாகவுமே காணப்படுகின்றது. குறிப்பாக ஹம்பந்தோட்டை துறைமுகம் தொடர்பான சீன ஒப்பந்தம் வெளிப்படுத்தப்பட வில்லை. ஒப்பந்தம் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்ற நிலையில் மறுப்புறம் ஒப்பந்தம் உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாக கூறுகின்றனார். எனவே முரண்பாடான வெளிப்படையற்ற செயற்பாடுகள் நாட்டை ஆபத்தான பாதையிலேயே வழி நடத்தும்.

எனவே கூட்டு எதிர் கட்சி இந்த ஆண்டை முக்கியமானதும் தீர்க்கமானதுமான ஆண்டாக கருதி பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. மக்கள் மத்தியிலும் அரச எதிர்ப்புகள் அதிகரித்துள்ளது. இவ்வருடம் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதால் கூட்டு எதிர் கட்சி நாடளாவிய ரீதியில் பரந்து செயற்பட உள்ளது. பிரதமரின் நடவடிக்கைகள் தொடர்பில் எவ்விதமான நம்பக தன்மையும் அற்ற நிலையில் நம்பிக்கையில்லா பிரேரனையை முன் வைப்பதே அவருக்கு பாரியதொரு நெருக்கடியாக அமையும் . எனவே இது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.