நாடு முழுவதும் 16 காட்சியறைகளைக் கொண்டு இயங்கி வரும் இலங்கையின் முன்னணி ஆடை விற்பனையகத் தொடரான Fashion Bug, தொடர்ச்சியான 5ஆவது வருடமாக நாடு முழுவதையும் சேர்ந்த பாடசாலைகள் மத்தியில் ஏற்பாடு செய்திருந்த “ரூ சித்தம்” எனும் ஓவிய போட்டியில் வெற்றியீட்டியிருந்த திறமையான மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கியிருந்தது.

Fashion Bug இனால் முன்னெடுக்கப்படும் பிரதான சமூக பொறுப்புணர்வு செயற்திட்டமான சிசு திரிமக நிதியம் என்பதன் மூலமாக, குறைந்த நிதிவசதிகள் படைத்த மாணவர்கள் இந்த புலமைப்பரிசில் திட்டங்களுக்காக தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு நிதியுதவிகளை வழங்கியிருந்தது.

இதன் மூலம் அந்த மாணவர்களுக்கு தமது குடும்பத்தின் வறிய நிலைகளிலும் தமது கல்விச் செயற்பாடுகளை முன்னெடுகக்கூடிய வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த புலமைப்பரிசில்களை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வழங்கியிருந்ததுடன்,

இந்நிகழ்வின் போது Fashion Bug இன் பணிப்பாளர் திரு. ஷபீர் சுபியன், பதில் பொது முகாமையாளர் கலாநிதி. எஸ்.எச்.எம்.ஃபராஸ் மற்றும் சந்தைப்படுத்தல் உதவி முகாமையாளர் திரு.எஸ்.எம்.ஃபஹாம் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். 

இரத்தினபுரி சுமன பெண்கள் பாடசாலையின் கவிஷ்கா தெவ்மினி சமரதுங்க மற்றும் கேகாலை கன்னியர் மடத்தின் கௌஷி செனுரி ஆகியோர் இந்த புலமைப்பரிசில்களை பெற்றுக் கொண்டனர். நாட்டின் மேலும் பல மாணவர்களுக்கு இந்த வாய்ப்பை பெற்றுக் கொடுக்க Fashion Bug எதிர்பார்த்துள்ளது.

“ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும். துரதிர்ஷ்டவசமாக, பலருக்கு வெவ்வேறு காரணங்கள் காரணமாக குறைந்தளவு வாய்ப்புகள் அல்லது போதியளவு வசதிகள் இன்றிய நிலை காணப்படுகிறது.

குறிப்பாக குடும்பங்களில் நிலவும் நிதிப் பிரச்சினைகள் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவ்வாறான சிறுவர்களுக்கு உதவ வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும். இந்த செயற்பாட்டின் மூலமாக அவர்களுக்கு தமது கனவுகளை எவ்வித தடைகளுமின்றி நிஜமாக்கிக் கொள்வதற்கு வாய்ப்பை வழங்கும் வகையில் அமைந்திருக்கும்.

அத்துடன் சமூகத்தின் சிறப்புக்கும் பங்களிப்பு வழங்கும் வகையில் அமைந்திருக்கும்” என Fashion Bug இன் பணிப்பாளரும் சிசு திரிமக நிகழ்ச்சித்திட்டத்தின் ஸ்தாபகருமான திரு. ஷபீர் சுபியன் தெரிவித்தார்.

உலக சிறுவர் தினத்தில் முன்னெடுக்கப்பட்ட “ரூ சித்தம்” எனும் சித்திரப் போட்டியில் 50000க்கும் அதிகமான ஆக்கங்கள் 220க்கும் அதிகமான பாடசாலைகளிலிருந்து கிடைத்திருந்தன. இதிலிருந்து 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் மூன்று வயது பிரிவுகளிலிருந்து ஆக்கத் திறமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

Fashion Bug இனால் முன்னெடுக்கப்படும் விருதை வென்ற சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டமாக சிசு திரிமக ஊடாக 20க்கும் மேற்பட்ட பாடசாலைகளின் 7000க்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்துள்ளனர். 120க்கும் மேற்பட்ட பாடசாலைகளை தற்போது இது சென்றடைந்துள்ளதுடன், 100000க்கும் மேற்பட்ட மாணவர்களையும் உள்வாங்கியுள்ளது.  

Fashion Bug இன் பதில் பொது முகாமையாளர் கலாநிதி. எஸ்.எச்.எம். ஃபராஸ் கருத்து தெரிவிக்கையில்,

“பாடசாலை மாணவர்களுக்காக ஒப்புநோக்கல் ஆலோசனை வழங்கல் நிகழ்ச்சித்திட்டத்தை முதன் முதலில் அறிமுகம் செய்வதையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறோம். முதலாவது திட்டத்தை கண்டியில் அண்மையில் பூர்த்தி செய்திருந்தோம்.

கண்டியின் பிரதான 10 பாடசாலைகளைச் சேர்ந்த 100 க.பொ.த உயர் தர மாணவர்களுக்காக இந்த திட்டத்தை முன்னெடுத்திருந்தோம். 2016 இல் கல்வி அமைச்சுடன் இணைந்து இந்நடவடிக்கை சகல மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படும்” என்றார்.

1994ஆம் ஆண்டு தனது செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக 4 பங்காளர்களுடன் ஆரம்பித்திருந்த Fashion Bug, ஆரம்பத்தில் 15 ஊழியர்களை மட்டுமே கொண்டிருந்தது. இன்று 16 காட்சியறைகளைக் கொண்டுள்ளதுடன், இவற்றில் 1250க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் முன்னணி ஆடை அலங்கார விற்பனையகமாக திகழும் இந்த நிறுவனம், “வாழ்க்கைக்கு புது வடிவம்” எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக தனது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.