சட்டபூர்வமற்ற நாணயமான 'கிறிப்டோ' நாணயத்திட்டத்தில் முதலிட வேண்டாம் - இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Published By: Nanthini

30 Mar, 2023 | 09:49 PM
image

(நா.தனுஜா)

கிறிப்டோ முதலீடுகளை அடிப்படையாகக் கொண்டு, நாடளாவிய ரீதியில் நிதியியல் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 'கிறிப்டோ நாணயங்கள்' இலங்கையில் சட்டபூர்வமான நாணயம் அல்ல என்பதுடன், நாட்டில் அவற்றின் பயன்பாட்டுடன் தொடர்புடைய ஒழுங்குமுறைப்படுத்தலும் பாதுகாப்புச் செயன்முறைகளும் நடைமுறையில் இல்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

எனவே, இணையத்தளம் மற்றும் ஏனைய வழிமுறைகளின் ஊடாக வழங்கப்படும் கிறிப்டோ நாணயத்திட்டத்தில் முதலிட வேண்டாம் என்றும் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை எச்சரித்துள்ளது.

'கிறிப்டோ' என அழைக்கப்படும் மறைக்குறி நாணயங்கள் தொடர்பில் பொதுமக்களால் எழுப்பப்படும் கேள்விகளை கருத்திற்கொண்டு, அது பற்றி விளக்கமளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மத்திய வங்கி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. 

'கிறிப்டோ' நாணயம் தொடர்பில் அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

'கிறிப்டோ' நாணயம் என்பது நாடொன்றில் அதிகார சபையினாலன்றி, தனியார் நிறுவனங்களினால் உருவாக்கப்படுகின்ற மெய்நிகர் நாணய வகையொன்றாகும். 

கிறிப்டோ வர்த்தகமானது சில நிறுவனங்களால் இலாபகரமான முதலீடொன்றாக பெரிதும் ஊக்குவிக்கப்படுகின்றது. 

இருப்பினும், பொதுமக்கள் தாம் மேற்கொண்ட கிறிப்டோ முதலீடுகளின் விளைவாக பாரிய நட்டத்துக்கு முகங்கொடுத்துள்ளமையையும், சில சந்தர்ப்பங்களில் கிறிப்டோவுடன் தொடர்புடைய திட்டங்களின் ஊடாக முன்னெடுக்கப்படும் நிதியியல் மோசடிகளால் பாதிக்கப்படுவதையும் அண்மைய காலங்களில் எமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் ஊடாக அறியமுடிகிறது.

கிறிப்டோ நாணயத்தை பயன்படுத்துவோருக்கு ஏற்படக்கூடிய நிதியியல், தொழிற்பாட்டு, சட்ட மற்றும் பாதுகாப்புசார் இடர்நேர்வுகள் குறித்து ஏற்கனவே 2018, 2021, 2022ஆம் ஆண்டுகளில் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். 

உலகளாவிய ரீதியில் கிறிப்டோ நாணய வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்கள் அண்மையில் முறிவடைந்துள்ளன.

எனவே, இலங்கையை பொறுத்தமட்டில் 'கிறிப்டோ நாணயங்கள்' சொத்து வகுப்பொன்றாக அங்கீகரிக்கப்படாத, ஒழுங்குமுறைப்படுத்தப்படாத முதலீட்டு சாதனங்கள் என்பதை பொதுமக்களுக்கு நினைவுறுத்துகின்றோம்.

மேலும், 'கிறிப்டோ நாணயங்கள்' இலங்கையில் சட்டபூர்வமான நாணயம் அல்ல என்பதுடன், நாட்டில் அவற்றின் பயன்பாட்டுடன் தொடர்புடைய ஒழுங்குமுறைப்படுத்தலும் பாதுகாப்புச் செயன்முறைகளும் நடைமுறையில் இல்லை. 

மத்திய வங்கியின் வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் பிரகாரம், கிறிப்டோ நாணயக் கொள்வனவின்போது பற்று அட்டை மற்றும் கடனட்டை போன்ற இலத்திரனியல் அட்டைகளை பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. 

கிறிப்டோ நாணயம் முறைசாரா வழிகளூடாக தொழிற்படுவதனால், அது தேசிய பொருளாதாரத்துக்குப் பங்களிப்பதில்லை என்பதுடன் நாட்டின் பெறுமதிமிக்க வெளிநாட்டு நாணயத்தையும் இழக்க நேரிடுகிறது.

கிறிப்டோ முதலீடுகளை அடிப்படையாகக் கொண்டு, பெருமளவான நிதியியல் மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துவருவது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கின்றோம்.

அதுமாத்திரமன்றி, கடுமையாக பாடுபட்டு உழைத்த பணத்தை பாதுகாக்குமாறும், இணையத்தளம் மற்றும் ஏனைய வழிமுறைகளின் ஊடாக வழங்கப்படும் கிறிப்டோ நாணயத்திட்டத்தில் முதலிடாமல் இருக்குமாறும் பொதுமக்களுக்கு வலுவாக அறிவுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கஷ்டப்பட்டு பெற்ற வெற்றியைப் பாதுகாக்க செப்டம்பர்...

2024-09-17 10:56:53
news-image

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் பின்னர் வன்முறை...

2024-09-17 11:01:23
news-image

சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழு -...

2024-09-17 10:59:15
news-image

தேர்தல் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்களை மீறும் ஊடக...

2024-09-17 10:56:15
news-image

நிற பேதங்கள், கட்சி பேதங்கள் இன்றி...

2024-09-17 10:27:36
news-image

வெல்லவாய பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில்...

2024-09-17 10:22:19
news-image

தவறாக வழிநடத்தி அரகலய போராட்ட காணொளிகளை...

2024-09-17 09:51:43
news-image

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை...

2024-09-17 10:44:57
news-image

சம்மாந்துறையில் சகோதரர்களுக்கிடையில் துப்பாக்கி சூடு :...

2024-09-17 07:40:15
news-image

இன்றைய வானிலை

2024-09-17 06:10:26
news-image

 நாட்டை மீண்டும் இருளில் தள்ளும் வரிசை...

2024-09-17 02:24:56
news-image

ஜனாதிபதி எப்போதும் தேர்தலுக்காக அன்றி நாட்டு...

2024-09-17 02:18:58