பெண்களை வலுப்படுத்துவதற்காக மாபெரும் வர்த்தகக் கண்காட்சி

Published By: Ponmalar

29 Mar, 2023 | 03:11 PM
image

பெண்களை வலுப்படுத்துவதற்காக வர்த்தகக் கண்காட்சி மற்றும் புத்தாக்க நிகழ்வுகள் திருகோணமலை மாவட்ட செயலாளர் வி.எச்.என்.ஜயவிக்ரம தலைமையில் (23)  மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகம், திருகோணமலை மாவட்ட செயலகம், ஜி.ரி. செட் ஜெர்மன் கார்ப்பரேஷன் மற்றும் Nucleus மன்றம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த “அவள் தேசத்தின் பெருமைக்குறியவள்” எனும் தொனிப்பொருளிலான சர்வதேச மகளிர் தினம் - 2023 மாவட்ட நிகழ்வுக்கு இணைவாக நடாத்தப்பட்ட இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹமத் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

அங்கு அமைக்கப்பட்ட 68 விற்பனைக் கூடாரங்களில் விஷேட வேலைத்திட்டங்களாக டிஜிட்டல் வலயம், ICT தொழில் வங்கி மற்றும் தொழில் வழிகாட்டுதல்கள், ICT பாடநெறிகள் மற்றும் Webinars, டிஜிட்டல் வங்கிச் சேவைகள், இலத்திரனியல் விளையாட்டுக்கள், கண்காட்சிக் கூடாரங்கள், சுயதொழில் உற்பத்திப்பொருட்கள் போன்றன அமையப்பெற்றதுடன் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் வளர்ந்தோர்களுக்கான விஷேட வேலைத்திட்டங்கள், ICT துறையில் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பு தொடர்பாக பெற்றோரை தெளிவூட்டல், ICT துறையின் புதிய பரிணாமம் மற்றும் அதற்குரிய பாடநெறிகள், பிள்ளைகளின் நிகழ்நிலை, சமூக ஊடகங்கள் வாயிலாக இடைஞ்சல்களுக்கு உட்பட்டவர்களுக்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், பாதுகாப்பான முறையில் இணையத்தளத்தை கையாளுதல் மற்றும் சைபர் குற்றங்கள் தொடர்பில் அறிவூட்டல் போன்ற கூடாரங்களும் அமைக்கப்பட்டிருந்தது.

இதில் மத்திய மாகாணத்தை சேர்ந்த 30 இற்கும் மேற்பட்ட தொழில் முயற்சியாளர்களும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டத்திலுள்ள தொழில் முயற்சியாளர்களும் பங்கு கொண்டனர்.

இந்த வர்த்தகக் கண்காட்சி, புத்தாக்க நிகழ்வுக்கான நிதியுதவியை சுவிஸ்லாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளின் தூதரலாயம் வழங்கியிருந்தன. IT4 Girls என்ற வேலைத் திட்டத்தை நிறைவு செய்த 24 யுவதிகளுக்கும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சேர்ந்த சுயதொழில் முயற்சியாளர் யுவதிகளுக்கும் சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.  

இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துக்கோரல, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன், மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி.திசாநாயக, கிழக்கு மாகாண பேரவைச் செயலக செயலாளர் எம்.எம்.நஸீர் மற்றும் மாகாண திணைக்களங்களின் செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், மாகாண ஆணையாளர்கள் உள்ளிட்ட பல உயரதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக, பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், வளர்ந்தோர்கள், சுயதொழிலில் ஈடுபடுகின்றவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு நன்மைகளை அடைந்துள்ளமையும் விஷேட அம்சமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right