ஏற்க மறுக்கும் ‘மலையகம் 200’

Published By: Digital Desk 5

29 Mar, 2023 | 04:25 PM
image

(அ.நிவேதா)

‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதிலும் கூன்,குருடு,செவிடு இன்றி பிறத்தல் அரிதிலும் அரிது’  என்பது ஆன்றோர் வாக்கு. அவ்வாறு உடலளவில் குறைகளின்றி பிறந்த எம்மவர்கள் மட்டும் இன்னும் அங்கீகரிக்கப்படாத சமூகமாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்ற நிலைமை மாறுமா என்பதை ஆராய்வதாகவே இந்த கட்டுரை அமைந்துள்ளது. 

இந்திய வம்சாவளிகள் இலங்கைக்கு வந்து 200 வருடங்களை பூர்த்தியானதை நினைவூட்டும் வகையில் கடந்த 22ஆம் திகதி பொகவந்தலாவை டின்சின் தோட்ட தொழிலாளர்கள் கறுப்புபட்டி அணிந்து எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது "பெருந்தோட்ட மக்களுக்கு காணி, வீட்டுரிமை வழங்குங்கள், மக்களை ஏமாற்றும் பொய் பிரச்சாரங்கள்  வேண்டாம் என மக்கள் கோஷம் எழுப்பியிருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. இதுபோன்று மலையகத்தின் பல பகுதிகளில் பெருந்தோட்ட மக்கள் தமது உளகுமுறல்களை கறுப்புபட்டி அணிந்து துக்க தினமாக நினைவுகூர்ந்து வருகின்றனர். 

சுமார் 200 வருடகால வரலாற்றை கொண்ட மலையக மக்களின் வாழ்வில் எதிர்பார்க்கும் மாற்றங்கள் கூடிய விரைவில் கைக்கூட வேண்டும் என்பதே ஒவ்வொரு மலையகத்தாரினதும் அவா.  ஆனால் சொல்லொணா துன்பங்களையும் தனது சக்திக்கு மிஞ்சிய சவால்களையும் சந்தித்துவரும் எம்மவர்களுக்கு விரல்விட்டு எண்ணக்கூடிய அபிவிருத்திகள் கூட இந்த 200 வருடக்கால வரலாற்றில் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை என்பதே நிதர்சனம். 

இதற்கு ஒருவிதத்தில் ஆரம்ப காலங்களில், நாடற்றவர் என்ற வரையறை காரணமானாலுமே கூட, ஆண்டாண்டு காலமாக எமது சமூகத்தை பொறுப்பேற்ற ஆட்சியாளர்களின் அசமந்தபோக்கே இதற்கு மிகப்பிரதான காரணம்.   அதிலும் எம்மை இலங்கைக்கு தரைவார்த்து கொடுத்த தாய்தேசம் இன்றளவிலும்கூட தமது தொப்புள்கொடி உறவுகள் குறித்து போதுமான அக்கறை கொள்ள தவறிவிட்டது என்பதே அப்பட்டமான உண்மை.

இது இவ்வாறு இருக்க, பிழைப்புக்காக தொழில் தேடி வந்த எமது சமூகம் இன்றுவரை வசிப்பதற்கு ஒரு சொந்த நிலமின்றி பரிதவிக்கின்றனர். சேவை என்ற பெயரில் ஆட்சியிலிருக்கும் அரசியல்வாதிகள் மேலோட்டமான கண்ணாம்பூச்சி ஆட்டங்களை விளையாடி வருகின்றமை மலையத்தைச் சார்ந்த படித்த சமூகத்தினர் நன்கு அறிவார்கள்.

ஆனால் இதில் வேடிக்கை என்னவெனில், இளைய சமூதாயத்தினரை பகடைகாய்களாக கொண்டே அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தமது காய்நகர்த்தல்களை முன்னெடுத்து வருகின்றனர்.  சுமார் இரண்டு நூற்றாண்டுகளை கடந்துவிட்டபோதிலும் கூட இன்றும் அதே லயன் அறைகளில் வாழும் எம்மவர்களுக்கு சொந்த வீடு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. 

மலையகத்தில் 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து 2023 வரை இலங்கை மற்றும் இந்திய வீடமைப்பு திட்டத்தின்கீழ் கிட்டத்தட்ட 7300 தனி வீடுகள் மாத்திரமே பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.  ஆனால் ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்ற பழமொழியை தாரக மந்திரமாகக் கொண்ட அரசியல்வாதிகள் மேற்கூறியவாறு, குறிப்பிடத்தக்க சேவைகளை மாத்திரம் தமது மேடைப்பேச்சிக்களின்போது உதாரணம் காட்டிவருவது நகைப்புக்குரியது. 

200 வருடகாலம் என்பது சற்றும் எதிர்பார்க்க முடியாத மிகப்பெரிய வரலாற்று தடம். அதிலும் எம்மவர்கள் கடந்துவந்த பாதை இன்னமும் அப்படியே செப்பனிடப்படாமலுள்ளது என்பது வேதனைக்குரியது.  வசிப்பதற்கு ஒரு சொந்த வீடே இல்லையெனும்போது அடுத்தக்கட்ட தேவைகள் குறித்து சிந்திக்கவோ அல்லது போராடவோ திராணியற்றவர்களாக எம்மவர்கள் அடங்கிவிட்டனர். 

மலையக மக்களுக்கு தனி வீடு மட்டுமா மிகப்பிரதான தேவை என்றால் நிச்சயமாக இல்லை. ஒரு மனிதனுக்கு இருக்க இடமும் பசிக்கு உணவும் அத்தியாவசியமானது. அதிலும் சொந்த வீடு வேண்டும் என்ற பிரச்சினை ஒருபுறமிருக்க பசிக்கு புசிக்க அன்றாடம் போதுமான ஊதியமும் தொழில் வாய்ப்பும் இன்றி அல்லல்படுகின்றனர்.

குறிப்பாக தோட்ட தொழிலாளர் வர்க்கத்தினரே இங்கு சொல்லொணா துன்பங்களை சந்திக்கின்றனர். உலக  சந்தையில் ‘சிலோன் டீ’ என்றாலே அதற்கு தனி இடமுண்டு. இந்நிலையில் 200 வருடங்களாக தேயிலை துறைக்கு தமது உழைப்பை  உரமாக கொடுத்த மக்களுக்கு இன்னமும் போதுமான ஊதியம் இல்லை என்பதே எம்மவர்கள் மீதான அடக்கு முறைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

இதற்கிடையில் மலையகத்தை பிரதிபலித்து ஆட்சிக்கு வந்த அரசியல்வாதிகள் இந்த ‘ஆயிரம்’ என்ற ஒற்றை வார்த்தையை கொண்டு மக்களை தமது அரசியல் நகர்வுக்கு ஏற்றாற்போல பயன்படுத்திக்கொள்கின்றனர்.  இந்த அரசியல் நாடகமானது இன்று நேற்று நடந்தேறிய விடயமன்று, மாறாக காலாகாலமாய் நடந்தேறிவரும் தொடர் நாடகமொன்று. இதற்கிடையில் பொய்யான வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாத திட்டங்களும் எம்மவர்களை சிதறடித்துவிட்டன. 

ஆனால் இனியும் இந்த நாடகங்களை அரங்கேற்ற முடியாது. மலையக மக்கள் விழித்துக்கொண்டனர். குறிப்பாக இன்று மலையகத்தில் படித்த இளந்தலைமுறையினர் குரல் எழுப்ப ஆரம்பித்துவிட்டனர். இளைய தலைமுறையினரின் எதிர்ப்பு எப்படிப்பட்டது என்பதை கடந்த ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சியின்போது உலகமே கண்டுவியந்தது.

எனவே இனியும் தோட்டக்காட்டான்களை ஏமாற்றலாம் என்ற எண்ணம் எவருக்குமே வரக்கூடாது. குறிப்பாக பெருந்தோட்ட மக்கள் என்ற பதம் மாற்றப்பட்டு ‘தேயிலை உற்பத்தியாளர்கள்’  என்ற கெளரவம் எம்மவர்க்கு கொடுக்கப்பட வேண்டுமென்பதே ஒட்டுமொ்தத மலையகத்தாரினதும் அவா. 

கடந்துவந்த 200 வருட கால வரலாற்றை திரும்பிப் பார்க்கையில் ஏமாற்றம் ஒன்றே எமக்கு கிடைத்த கூலி எனும்போது இனி மலையகத்திற்கு அரசியல் வேண்டாம், தலைவர்கள் வேண்டாம் என்பதே எம்மவரின் தீர்மானமாக மாறியுள்ளது. இந்த 200 வருடங்களில் அடிப்படை வசதிகளைக்கூட  முழுமையாக ஏற்படுத்திக்கொடுக்க தவறிய தலைமைகள் உண்மையிலேயே வெட்கி தலைகுனிய வேண்டும். 

இதற்கிடையில் மாற்றத்தை நோக்கிய மலையகத்தின் புதிய பாதை இனி ஆரம்பமாக வேண்டும். 200 வருடங்களாக மலையகத்தார் முதுகெலும்பற்றவர்களாக வாழ்ந்தது போதும். இனியாவது அடக்கு முறைக்கு எதிராக குரல் எழுப்ப ஆயத்தமாக வேண்டும். அதற்கு மலையகத்தின் இளந்தலைமுறையினரின் அணிதிரள்வே மாற்றத்தை நோக்கிய மலையகத்தின் புதிய பாதையின் விடியலாக அமையும்.

எமது நாட்டின் தற்போதைய பொருளாதார ஸ்திரமற்ற தன்மைக்கு மத்தியில் மலையகத்தில் அதிகரித்துள்ள பட்டினி அதிகரிப்பை கட்டுப்படுத்த மாற்று வாழ்வாதார முறைமையின் அவசியத்தை எமது தலைமைகள் உணர வேண்டும். அதேபோல மாற்று வாழ்வாதார முறைக்கு உடனடி ஏற்பாடுகளும் அவசியமாகும். ஆங்காங்கு திட்டங்களை ஆரம்பித்துவிட்டு ஓய்து விடாமல் தொடர்ச்சியாக ஒவ்வொரு திட்டங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும். 

வெறுமனே வாக்குறுதிகள் அளிப்பதைவிடுத்து சரியான அடித்தளங்களை மலையகத்தின் 200 ஆவது வருடத்திலாவது முறையாக செப்பனிட்டு அதற்கான அடுத்தக்கட்ட நகர்வுகளையும் முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் இந்திய அரசாங்கத்தின் தலையீட்டை மலையக மக்கள் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டு அரசாங்கம் எம்மவர்களின் வாழ்வாதார அபிவிருத்திக்கு வழிவகுக்க வேண்டும். மலையகம் என்பது இலங்கையின் மற்றுமொரு மிகப்பெரிய பொக்கிஷம் என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு இந்திய அரசாங்கத்தோடு கைகோர்த்து செயற்பட ஆயத்தமாக வேண்டும். 

இலங்கையின் அமைவிடத்தை அடிப்படையாக கொண்டு வல்லரசு நாடுகள் காலத்திற்கு தகுந்தாற்போல காய்நகர்த்தல்களை முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில் இந்திய அரசாங்கம் தமது தொப்புள் கொடி உறவுகளின் வாழ்க்கைத்தர அபிவிருத்திக்காக முன்வர வேண்டுமென்பதே ஒவ்வொரு மலையகத்தினரினதும் வேண்டுகோள்.

காரணம் 200 வருடங்களாகியும் எமக்காக சிந்திக்க தவறிய இலங்கை அரசாங்கத்தை, நம்பி இனியும் போராடுவதைவிடுத்து எங்கிருந்து எமது பயணம் ஆரம்பமானதோ அங்கிருந்தே எமக்கான குரல் எழும்ப வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.

பொறுப்புவாய்ந்தவர்கள் என்ற ரீதியில் மலையக அரசியல் தலைவர்கள் இந்த விடயத்தில் தலையீடு செய்ய வேண்டும். முடியாத பட்சத்தில் வீதிக்கு இறங்கி போராடுவதன் ஊடாக எமது தேவைகளை நிறைவேற்ற மலையகம் தயாராகிவிட்டது என்பதை ஒவ்வொருவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். 

அதேவேளை மலையகத்தின் 200 வருடகால வரலாற்றை நினைவுகூறும் முகமாக எவ்வித பிரமாண்டமான கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அவை அனைத்தும் வீண் செலவீனம் என்பதை ஏற்று மாறாக மலையகத்தில் தலைத்தூக்கியுள்ள பட்டினி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுமானால் பெரும் பாக்கியமே. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செங்கோல் ஏந்திய இந்திய புதிய பாராளுமன்றம்...

2023-06-02 14:15:30
news-image

மகனை கண்டுபிடிக்க உதவுங்கள் - உடலையாவது...

2023-06-03 15:10:40
news-image

கொழும்பு மத்தி வீதியோர வியாபாரிகளின் பொருளாதார...

2023-06-02 21:15:04
news-image

திடீரென ஏற்பட்ட வீழ்ச்சி

2023-06-02 10:19:49
news-image

'லிபரேஷன் ஒபரேஷன்' : 36 ஆண்டுகளுக்கு...

2023-06-02 09:16:45
news-image

வீழ்ச்சியடையும் சுகாதார துறையுடன் போராடும் பொதுமக்கள்

2023-06-01 15:31:15
news-image

இலங்கை பல்கலைக்கழகங்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட ...

2023-06-01 14:44:30
news-image

சிரிப்பதற்கு உரிமையில்லை

2023-05-31 16:56:52
news-image

நான்கு தசாப்தம் கடந்தும் நெஞ்சில் கொழுந்து...

2023-05-31 16:00:00
news-image

கிழக்கு கரையில் இருந்து எங்களது குரல்

2023-05-31 14:24:50
news-image

Factum Perspective: தாய்லாந்து தேர்தல் -...

2023-05-31 11:43:39
news-image

புத்தகங்களையும் விட்டு வைக்காத சிங்கள பேரினவாதம்

2023-05-31 10:18:04