இந்தோனேசியாவில் தான் திருமண செய்யாத ஆணொருவருடன் மிகவும் நெருக்கமாக காணப்பட்டமைக்காக பெண்ணொருவருக்கு பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படித் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேற்படி தண்டனை நிறைவேற்ற காட்சியை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் சர்வதேச ஊடகங்களில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.

பண்டா ஏக் பிராந்தியத்தைச் சேர்ந்த நூர் எலிதா என்ற மேற்படி பெண் சக பல்கலைக்கழக மாணவர் ஒருவருடன் இவ்வாறு நெருக்கமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் அந்த குறிப்பிட்ட மாணவரை திருமணம் செய்யாத நிலையில் காதலித்து வந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

மேற்படி பிராந்தியத்தில் நடைமுறையிலுள்ள மத சட்டத்தின் பிரகாரம் திருமணம் செய்யாத நிலையில் ஆணும் பெண்ணும் நெருங்கிப் பழகுவது கடும் தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபவர்களுக்கு பொது இடத்தில் பிரம்படி தண்டனை வழங்கப்படுவது வழமையாகும்.

இந்நிலையில் பிராந்திய மத சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்கு உள்ளான நூர் எலிதா, பெய்துரஹுமிம் பள்ளிவாசல் வளாகத்துக்குள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

இதனையடுத்து அங்கு கூடியிருந்த பெருமளவு மக்கள் மத்தியில் மண்டியிட்டு அமர்ந்திருக்க பணிக்கப்பட்ட நூர் எலிதாவுக்கு முகமூடி அணிந்திருந்த ஒருவர் பிரம்பால் அடித்து தண்டனையை நிறைவேற்றுகிறார்.

இதன்போது நூர் எலிதா வலி தாங்காது கதறி அழுகிறார்.

அவருக்கு சுமார் 5 தடவைகள் பிரம்பால் அடித்து தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

இந்த தண்டனை நிறைவேற்றத்தின் இறுதியில் நூர் எலிதா வலி தாங்காது தரையில் விழுந்துள்ளார். தொடர்ந்து அவர் அங்கிருந்தவர்களால் அம்புலன்ஸ் வண்டியில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அதேசமயம் அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக காணப்பட்ட ஆணுக்கும் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான ஏனைய நால்வருக்கும் தொடர்ந்து பிரம்படித் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மேற்படி பிரம்படி தண்டனை வழங்கும் நிகழ்வானது பண்டா ஏக் பிராந்திய மேயர் ஸெய்னல் அறிபின் முன்னிலையில் இடம்பெற்றது.

அந்த நிகழ்வின் ஆரம்பத்தில் தண்டனை நிறைவேற்றத்துக்கான பிரம்பொன்றை கையேற்ற மத பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், இந்தத் தண்டனை நிறைவேற்றங்களை ஏனையவர்கள் ஒரு பாடமாக எடுக்க வேண்டும் என கூடியிருந்தவர்களுக்கு அறிவுறுத்தினார்.

பண்டா ஏக் பிராந்தியம் விசேட தன்னாட்சிப் பிராந்தியமாக பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்துஅந்தப் பிராந்தியத்தில் 2003 ஆம் ஆண்டில் கடுமையான மதச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.