அமெரிக்காவின் கனெக்டிகட் நகரில் வாழும் 23 வயது இளம் யுவதியொருவரின் உடலினுள் மற்றொரு எலும்புக் கூட்டுத் தொகுதி வளர்வதால் நகர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

ஜெஸ்மின் ஃப்ளொய்ட் என்ற இந்தப் பெண் பிறந்த ஐந்தாவது மாதத்தில், ‘மென்னிக்குயின்’ நோய் என்று அழைக்கப்படும் ‘ஃபைப்ரோடிஸ்ப்ளேசியா ஒஸிஃபிக்கன்ஸ் ப்ரோக்ரெஸ்ஸிவா’ (Fibrodysplasia Ossificans Progressiva) என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடலினுள் உள்ள தசைகள் மற்றும் தசைநார்கள் மெல்ல மெல்ல எலும்பாக உரு மாறுவதே இந்த நோயின் பண்பு. இதனால், எலும்புக் கூட்டை ஒட்டிய தசைநார்கள் எலும்பாக உரு மாறி உடலினுள் இரண்டாவது எலும்புக் கூட்டுத் தொகுதியாக உருவெடுக்கும்.

இருபது இலட்சம் பேரில் ஒருவருக்கே இந்த நோய் உண்டாகும் என்றும் இதுவரை உலகில் 700 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் தெரியவருகிறது.

இதற்கான சிகிச்சைகள் நோயை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்பதால், இதுவரை இந்த நோய்க்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஜெஸ்மின் 45 வயது வரையே உயிர்வாழ்வார் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதற்கிணங்க, நகர முடியாத நிலைக்கு ஜெஸ்மின் தற்போது தள்ளப்பட்டுள்ளார். அவரது இடுப்பு வரையான தசை நார்கள் தற்போது எலும்பாக உருமாறியிருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.