பொலன்னறுவைக் காட்டில் உலகிலேயே மிகப் பெரிய தூபி : 625 அடி உயரம் ; கட்டியது தமிழர்களே ! - வரலாற்று ஆய்வாளர் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அதிர்ச்சி தகவல் 

Published By: Nanthini

27 Mar, 2023 | 05:26 PM
image

(மா.உஷாநந்தினி)

'உலகிலேயே மிகப் பெரிய பௌத்த தூபி'  இலங்கையில் இருக்கிறது, அதுவும் அதை கட்டியவர்கள் 'தமிழர்கள்' என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா என வியப்பை ஏற்படுத்தியிருக்கும் வரலாற்று ஆய்வாளர் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம், கூடவே இத்தூபி சார்ந்த சில வரலாற்றுக் குறிப்புகளையும் சந்தேகங்களையும் முன்வைக்கிறார்.

அந்த மாபெரும் தூபியின் சிதைவுகளுக்குள் மறைந்து கிடக்கும் தமிழர்களின் வரலாறு மீண்டும் தூசுதட்டப்படுவதாகவே இத்தூபி பற்றிய தரவுகளை இங்கே நோக்க வேண்டியிருக்கிறது.

"பொலன்னறுவையில், அடர்ந்த காட்டுக்குள் பல நூற்றாண்டு காலமாக இந்த தூபி மக்களின் கண்களுக்கு தென்படாமல் மறைக்கப்பட்டிருந்தது.

இப்போது அந்த தூபியின் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று ஆரம்பித்தவர்,

"இத்தூபி பற்றிய குறிப்புகள் சூளவம்சத்தில் கூறப்பட்டுள்ளன. அதில் இது 'தமிழ தூபி' - தமிழர் தூபி என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழர்களால் கட்டப்பட்டது என்பதால் தான் இது 'தமிழர் தூபி' என அழைக்கப்படுவதாக சூளவம்சம் தெரிவிக்கிறது.

அந்த குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டே தூபியை கண்டுவிட வேண்டுமென முன்னரும் இரண்டு, மூன்று முறை நான் பொலன்னறுவைக்கு சென்றிருந்தேன். எனினும், என்னால் அந்த தூபி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும், முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து பயணித்தேன்.

அதன் பயனாகவே, அண்மையில் இத்தூபியை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது..." என்ற ஆய்வாளர், உலகின் மிகப் பெரியது என கூறப்படும் தமிழர் தூபியின் தோற்றத்தை பற்றி விவரிக்கத் தொடங்கினார்.

தூபியின் அமைப்பும், புனரமைப்பு பணிகளும்

"அந்த வனாந்தரத்துக்குள் போகும்போது  கண்ணுக்குத் தெரியாதளவிலேயே குறிப்பிட்ட ஓரிடத்தில் தூபி அமைந்திருந்தது.

கிட்டத்தட்ட 500 அடி உயரமான தூபியின் பகுதிகள் உடைந்து, தற்போது அதன் எஞ்சிய செங்கல் சிதைவுகள் 100 அடி உயரமளவே காணப்படுகின்றன.

இந்த 100 அடி உயரம் வரையே புனரமைப்பு பணியாளர்கள் வட்ட வடிவிலான தூபியை கட்டியிருக்கின்றனர்.

அது மட்டுமல்ல, தூபியின் 100 அடி உயரத்துக்கு மேலும் கூட ஒரு சமதளம் காணப்படுகிறது. அங்கே செல்வதற்கு செங்கல்லாலான படிகள் உள்ளன.

படிகளின் வழியே சென்று பார்த்தபோது, அந்த மேல்தளம் கிட்டத்தட்ட ஒரு கிரிக்கெட் மைதானத்தை விட பெரிய, வட்டமான நிலப்பரப்பாக இருப்பதை கண்டேன். அங்கும் பெரிய மரங்கள் வளர்ந்துள்ளன.

இந்த தூபியின் புனர்நிர்மாண வேலையை விரைவில் முடிக்க வேண்டும் என்பதற்காக அந்த வட்டமான இடத்தின் நடுவிலும் ஒரு சிறிய தூபியை அமைத்திருக்கிறார்கள். அத்தோடு இந்த தூபி கட்டப்படும் வேலையும் கைவிடப்பட்டுள்ளது.

எனவே, 100 அடி உயரத்துக்கு ஒரு தூபியும், அதற்கு மேலே பரந்ததொரு சமதளமும் காணப்படுகிறது என்றால், இந்த 'தமிழ தூபி'யின் மொத்த உயரம் எத்தனை பிரம்மாண்டமானது என்பதை நாம் ஓரளவு கணிக்கலாம்.

உண்மையில், இந்த தூபியின் மொத்த உயரம் 625 அடிகள் ஆகும்.

உலகின் மிகப்பெரிய தூபிகளாக கூறப்படுபவை, இலங்கையில் உள்ள ஜேதவனராம தூபி மற்றும் தாய்லாந்தில் உள்ள நகோன் பதோம் தூபி (nakhon pathom) ஆகிய இரண்டு தூபிகளே ஆகும்.

ஜேதவனராம தூபியின் சுற்றளவு 174 மீற்றர், உயரம் 121 மீற்றர்; நகோன் பதோம் தூபியின் சுற்றளவு 235 மீற்றர், உயரம் 120 மீற்றர் ஆகும்.

ஆனால், இந்த 'தமிழ தூபி'யின் சுற்றளவு 600 மீற்றர், உயரம் 192 மீற்றர் என்றால், ஜேதவனராம தூபி, நகோன் பதோம் தூபியை விட உயரத்திலும் சுற்றளவிலும் உலகிலேயே மிகப் பெரிய தூபி, இந்த தமிழர் தூபியே என உறுதியாக கூறலாம்.

சுமார் 25 வருடங்களுக்கு முன் இந்த தூபி ஜப்பான் நாட்டின் உதவியுடன் புனரமைக்கப்படுவதற்காக நடப்பட்ட அடிக்கல் ஒன்றையும் அங்கே நான் பார்த்தேன்.

அதன் பின்பு ஒரு காலகட்டத்தில் அந்த புனரமைப்புப் பணிகளும் கைவிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், கடந்த நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு மீண்டும் தூபியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பமாகி, அவ்வேளை காடாக கிடந்த அப்பகுதி துப்புரவு செய்யப்பட்டு தூபியின் ஒரு பகுதி மட்டும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகிறது.

தூபி கட்டப்பட்டதன் காரணமும், வரலாற்றுக் குறிப்புகளும்

இந்த தூபி கட்டப்பட்டதன் வரலாறு குறித்தும்  சூளவம்சத்தில் கூறப்பட்டுள்ளது.

பொ.ஆ 11ஆம் நூற்றாண்டில் 1153 - 1186 வரையான 33 ஆண்டுகளும் பொலன்னறுவையை தலைநகராக கொண்டு இலங்கையை ஆட்சி செய்த முதலாம் பராக்கிரமபாகு மன்னன் தென்னிந்தியாவுக்கு படையெடுத்துச் சென்று, பாண்டிய நாட்டை வெற்றி கொண்டு, அங்கிருந்து சுமார் 12 ஆயிரம் தமிழ்ப் படையினரை சிறைப்பிடித்து இலங்கைக்கு அழைத்து வந்தானாம்.

அத்தமிழ் படையினர் பொலன்னறுவையில் தங்கவைக்கப்பட்ட இடத்தில், அவர்களை கொண்டே இலங்கையில் மிகப் பெரிய தூபியொன்றை கட்ட வேண்டும் என கருதி, இந்த மாபெரும் தூபியை மன்னன் கட்டுவித்ததாக  சூளவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு தமிழர்கள் கட்டியதால் தான் இது 'தமிழ தூபி' என அழைக்கப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த தூபியை பற்றி நான் அப்பகுதிவாழ் மக்களிடம் விசாரித்தபோது,

'பராக்கிரமபாகு தன்னிடம் தோல்வியடைந்த தென்னிந்தியாவை சேர்ந்த தமிழ் படையினரை சிறைக்கைதிகளாக அழைத்துவந்து, பொலன்னறுவையில் தங்கவைத்த இடத்தில், அவர்களை கொண்டே இந்த தூபியை கட்டினான்' என அவர்கள் கூறினர்.

அத்தோடு, இந்த தூபியின் உச்சியில் நின்று பார்த்தால், தென்னிந்தியாவிலிருந்து படைகள் வருகின்றனவா, இல்லையா என்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கவேண்டும் என்பதற்காகவே இந்த தூபியை இந்தளவு உயரமாக கட்டியுள்ளான் எனும் கர்ண பரம்பரைக் கதையும் அங்குள்ள மக்களால் கூறப்படுகிறது.

சந்தேகங்களும், கேள்விகளும்...

இந்த தூபி கட்டப்பட்டது குறித்து எனக்கு சில சந்தேகங்களும், கேள்விகளும் எழுகின்றன.

* நான் ஆராய்ந்து பார்த்த வகையில், இது 'தமிழ் பௌத்தர்கள்' கட்டிய தூபியாகத்தான் இருக்க வேண்டும்.

பராக்கிரமபாகு மன்னன் சிறைப்பிடித்து வந்த 12 ஆயிரம் தமிழ்ப் படையினரும், இங்கே பௌத்த மதத்தை தழுவியவர்களாக அல்லது பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்டவர்களாக அல்லது பௌத்த மதத்துக்கு மாற்றப்பட்டவர்களாக கூட இருந்திருக்கலாம்.

அந்த வகையில், அவர்கள் 'தமிழ் பௌத்தர்'களாகி இந்த தூபியை கட்டியிருக்கலாம். அதனாலேயே இது 'தமிழ தூபி' என பெயரிடப்பட்டிருக்க வேண்டும்.

* அடுத்து, பொலன்னறுவையில் சோழர்களின் ஆட்சி நிலவிய காலத்தில் அங்கே 'தமிழ் பௌத்தர்கள்' அதிகமாக வாழ்ந்துள்ளனர்.

தமிழ் பௌத்தர்கள் வசித்த 'பெரியகுளம்' (இப்போது வெல்கம் விகா‍ரை என அழைக்கப்படுகிறது) பகுதியில் 'ராஜராஜ பெரும்பள்ளி' எனும் பௌத்த பள்ளியை சோழர்கள் கட்டியுள்ளனர்.

தமிழ் பௌத்தர்களின் வழிபாட்டுக்காக இப்பள்ளியை சோழர்கள் கட்டியிருக்கிறார்கள். அப்படியிருக்க, பொலன்னறுவையில் இருந்த தமிழ் பௌத்தர்களுக்காக ஏன் இந்த 'தமிழர் தூபி'யை சோழர்கள் கட்டியிருக்கக்கூடாது?

எனவே, சோழர்கள் எனும் தமிழர்கள் கட்டியதால் தான் இது 'தமிழர் தூபி' என குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

* அக்காலத்தில் இலங்கையின் சிங்கள மன்னர்கள் தமிழர்ளோடு பகை, படையெடுப்புகள், என்றிருந்த சூழலில், இலங்கையில் கட்டப்படும் ஒரு மிகப் பெரிய தூபிக்கு எப்படி 'தமிழர்'களை குறிக்கும் ஒரு பெயரை சூட்டியிருப்பார்கள்.

அதேசமயம், அந்த தூபிக்கு வேறொரு பெயரைத்தான் வைத்திருப்பார்கள். ஆனால், சூளவம்சத்தில் இது 'தமிழ தூபி' என குறிப்பிடப்பட்டுள்ளது.  

எனவே, இது 'தமிழ் பௌத்தர்கள்' கட்டிய தூபியாகத்தான் இருக்க வேண்டும்.

* இன்னுமொரு முக்கியமான விடயம் என்னவென்றால், பொலன்னறுவையில் பல்வேறு காட்டுப் பகுதிகளில் இருக்கும் கல் விகாரை, லங்காதிலக விகாரை, கிரி விகாரை, திவங்க சிலைமனை போன்ற சில விகாரைகள் காடுகளில் இருந்தபோதும், அவை பின்னர் துப்புரவு செய்யப்பட்டு, மக்கள் பார்வைக்கு வெளிப்படுத்தப்பட்டு, புனரமைக்கப்பட்டன.

அது முடியுமெனில், உலகிலேயே மிக பெரிது என கணிக்கத்தக்க இலங்கையில் கட்டப்பட்டுள்ள இந்த 'தமிழர் தூபி' மட்டும் ஏன் இத்தனை ஆண்டுகளாக வெளிப்படுத்தப்படவில்லை? புனரமைக்கப்படவில்லை?

இதற்கு காரணம், இது தமிழர்களுடைய தூபி என்பதாகவும் இருக்கலாம்.

இதுபோன்று எழக்கூடிய சந்தேகங்களும் மர்மங்களும், இத்தூபி தமிழ் பௌத்தர்களால் தான் கட்டப்பட்டிருக்க வேண்டும் எனும் கருத்தினை எனக்குள் வலுவாக விதைக்கிறது" என அவர் தெரிவித்ததோடு கட்டவிழ்க்கப்பட வேண்டிய புதிர்முடிச்சுகளையும் இனங்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட மக்கள் மீது பிரயோகிக்கப்படும் நவீன...

2024-07-24 17:25:21
news-image

அகதிமுகாமில் எழுதப்பட்ட திகில் கதை :...

2024-07-24 17:41:11
news-image

அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை உறுதிப்பாட்டுக்கு அவசியமானது

2024-07-24 11:57:14
news-image

ஆதாமின் பாலத்தை வெளிச்சம் போட்டுக் காண்பித்த...

2024-07-24 11:09:06
news-image

Factum Special Perspective: மோடியின் மொஸ்கோ...

2024-07-22 17:09:20
news-image

மகிந்த – மைத்ரி : சிறப்புரிமையும்...

2024-07-22 16:33:01
news-image

நாட்டின் கடனை தேயிலை மூலம் செலுத்தும்...

2024-07-22 13:10:51
news-image

பெருந்தோட்டப் பகுதிகளில் மாடி லைன்களுக்குப் பிறகு ...

2024-07-22 13:07:49
news-image

தொன்மங்களைப் பறிக்கும் பௌத்தம் : பகுதி...

2024-07-21 18:30:48
news-image

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் புதிய அத்தியாயம்

2024-07-21 18:30:04
news-image

உலகின் நான்காவது பொருளாதார சக்தியாக ரஷ்யா

2024-07-22 12:34:09
news-image

பொது வேட்பாளரை எதிர்க்கிறதா இந்தியா?

2024-07-21 18:28:46