எம்மில் பலரும் அலுவலகத்தில் பணியாற்றும் போதும் சரி அல்லது வீட்டில் இருக்கும் போது சரி தாகம் எடுத்தால் உடனே ப்ரிட்ஜிலிருந்து ஜில்லென்று இருக்கும் குளிர்ந்த நீரை அருந்துவோம். ஆனால் இப்படி தாகம் எடுக்கும் போது குளிர்ந்த நீரை அருந்தக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

அதற்கு முன் தாகம் எப்போது ஏற்படுகிறது? ஏன் ஏற்படுகிறது என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியானது வெப்பம், குளிர்ச்சி என வித்தியாசமான பருவ நிலைகளை எதிர்கொள்கிறது. அதிலும் கோடைக் காலங்களில் அதிகமாக வெப்பமடைவதால், எமக்கு அதிகமாக தாகம் எடுக்கின்றது. அதன் காரணமாக அதிகமான தண்ணீரைப் பருகுகிறோம்.

அதே சமயத்தில் எம்முடைய உடலானது புறச்சூழலில் நிலவும் பருவநிலைச் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாது உடல் வெப்பநிலையை உடல் உள்உறுப்புகள் சீராகவே வைத்திருக்கின்றன.இதன் காரணமாகவே கோடைக்காலத்தில் அதிகப்படியான வெப்பம் தோலின் மீது விழும் போது, அதன் மூலமாக அதிகப்படியான நீர் வியர்வையாக வெளியேற்றப்படுகின்றன. உடலில் இருக்கும் நீரின் அளவு ஒரே மாதிரியாய் இருந்தால் எமக்கு தண்ணீரின் நினைவே இருக்காது. நீரின் அளவு 2.5 சதவீதம் குறைந்தால், உடனே உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருப்பதற்காக மூளை நரம்பு செல்களுக்குக் கொடுக்கும் உணர்வு (செய்தி) தான் ‘தாகம்’.

அதே போல், தாகம் எடுக்கின்ற போது குளிர்ந்த நீர், குளிர்ந்த பானங்களைப் பருகக்கூடாது. ஏனெனில் குளிர்ந்த பானங்களில் இரசாயனப்பொருட்கள் கலந்து இருப்பதால் உடலுக்கு நல்லதல்ல. அறை வெப்பநிலையில் நீரின் மூலக்கூறுகள் இயல்பான நிலையில் இருக்கும். ஆனால் இயல்பான நிலையில் இருக்கும் நீரை குளிர்விக்கின்றபோது நீரின் மூலக்கூறுகள் மிக நெருக்கம் அடைந்து தன்னுடைய ஆற்றலை வெளியேற்றிவிடுகின்றன. இப்படி ஆற்றல் குறைந்த குளிர்ச்சியான நீரை பருகுகின்றபோது உடல் உள்ளுறுப்புகள் தன் அதிகப்படியான அளவில் ஆற்றலை செலவழித்து அந்தக் குளிர்ந்த நீரை இயல்பான நிலைக்குக் கொண்டுவருகின்றன. இப்படி உள்ளுறுப்புகள் இயங்கும் போது  தாகம் எடுப்பது குறைந்துவிடும். இதனால் மனிதனின் உடல் வெப்பநிலை சீராக இல்லாமல் போகக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டு சளி, காய்ச்சல் போன்ற தொல்லைகள் உருவாகின்றன. எனவே தாகம் எடுப்பது மனித உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. ஆகவே, எப்போதெல்லாம் தாகம் எடுக்கிறதோ தண்ணீரைப் பருகுங்கள். ஆனால் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் குளிர்ந்த நீரையும், குளிர் பானங்களையும் உறுதியாக தவிர்த்திடுங்கள்.

டொக்டர் பாலகிருஷ்ணன்

தொகுப்பு அனுஷா.