டொக்டர். பார்த்திபன்
இன்றைய திகதியில் உலகில் பிறக்கும் ஐம்பது குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிசம் பாதிப்பிற்கு உள்ளாகுவதாகவும், தென் கொரியா, ஜப்பான், தாய்லாந்து, கம்போடியா உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளில் முப்பத்தி மூன்று பிள்ளைகளில் ஒருவருக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படுவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
கடந்த 15 ஆண்டுகளில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் உடலியக்க குறைபாடுகளில் ஆட்டிசம் முதன்மையான இடத்தை பிடித்திருப்பதாகவும் ஆய்வாளர்கள் கவலையுடன் குறிப்பிடுகிறார்கள். மேலும் ஆட்டிசம் பாதிப்பு குறித்து படித்தவர்களிடத்திலும் கூட முழுமையான விழிப்புணர்வு ஏற்படவில்லை என இத்துறை மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில் “ஆட்டிசம் பாதிப்பிற்குள்ளான குழந்தைகளை மிக இளம் வயதிலேயே அதாவது ஆட்டிசம் பாதிப்பின் தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால்.., ஒருங்கிணைந்த கூட்டு சிகிச்சை மூலம் அவர்களுக்கு முழுமையான நிவாரணமளிக்க முடியும்” என டொக்டர். பார்த்திபன் தெரிவிக்கிறார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து பேசுகையில், '' ஆட்டிசம் தொடர்பாக சிகிச்சை என்பது பெற்றோர்களின் கையில் தான் பாரிய பங்களிப்பு இருக்கிறது. பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் குறைபாட்டை மிக விரைவில் கண்டறிந்து, அதனை மருத்துவரிடம் எடுத்துரைத்து, பாதிப்பின் வீரியத்தை அறிந்துகொண்டு, அவர்களுக்கான சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
பிறந்த ஒரு வயது முதல் இரண்டு வயதிற்குள்ளாகவே அவர்களின் பாதிப்பினை துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை வழங்கத் தொடங்கினால்.., அவர்கள் விரைவில் ஒருங்கிணைந்த கூட்டு சிகிச்சை மூலம் நல்ல பலனை பெற்று, இந்த சமூகத்தில் ஏனைய பிள்ளைகளைப் போல்.. இயல்பாக தங்களின் மனித வளத்தை வழங்க தொடங்குவார்கள்.
ஆனால் நடைமுறையில் பெற்றோர்கள், தங்களது குழந்தைகளின் இந்த குறைபாட்டை மனதளவில் ஒப்புக்கொள்வதில்லை. மேலும் அவர்களுடைய உறவினர்களும், உடன் பிறந்தவர்களும், தாமதமாகத்தான் பேசத் தொடங்கினார்கள்... என்ற முன்னுதாரணத்தை எடுத்துரைத்து, சிகிச்சை பெற பாரிய தயக்கம் காட்டுவர்.
மேலும் வேறு சில பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுக்கு இத்தகைய பாதிப்பு எதுவும் இல்லை என்பதில் உறுதியாக இருப்பார்கள். அத்துடன் குறைபாடு இருந்தால், அதனை ஏற்றுக் கொள்ளவோ ஒப்புக் கொள்ளவோ மறுப்பு தெரிவிப்பர்.
பெற்றோர்களின் இந்த மனநிலை இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை கூட நீடிக்கும். அதன் பிறகு அக்கம் பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பாடசாலையில் பயிலும் சக மாணவர்கள், ஆசிரியர்கள்.. என தொடர்ச்சியாக பலரும் அவர்களது பிள்ளை பற்றிய.. பிள்ளையின் செயல்களைப் பற்றிய... பிள்ளையின் இயல்பற்ற நடவடிக்கையை பற்றி... எடுத்துரைக்கும் போது தான், அவர்களால் ஓரளவிற்கு தங்களது பிள்ளைக்கு ஏதேனும் சிறிய அளவில் குறைபாடு இருக்கிறது என்பதனை சலனமான மனதுடன் ஒப்புக் கொள்வர்.
குழந்தையின் சிகிச்சைக்கு நல்ல பலன் அளிக்கக்கூடிய ஒரு வயது முதல் இரண்டு வயது வரையிலான காலகட்டம், பெற்றோர்களின் தாமதமான நடவடிக்கையால் எதிர்பார்த்த பலனை வழங்குவதில்லை என்ற கசப்பான உண்மையை பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
சில பிள்ளைகள் இரண்டு ஆண்டுகளுக்கு கழித்து பேச தொடங்கினாலும், அவர்களுக்கு பிறந்த ஒரு வருடத்தில் இத்தகைய சிகிச்சை வழங்கினால், எத்தகைய பக்கவிளைவையும் ஏற்படுத்தாமல்.. அவர்களது பேச்சு விரைவில் உண்டாவதற்கான வாய்ப்பு இத்தகைய சிகிச்சையின் மூலம் உருவாக்கப்படுகிறது.
அதனால் பிரச்சனையற்ற குழந்தைகளுக்கும் இத்தகைய சிகிச்சைகள் வழங்குவதால்.., அவர்களுடைய வளர்ச்சியில் வேகம் ஏற்படுமே தவிர, எந்தவித எதிர் நிலையான பக்க விளைவுகளும் ஏற்படாது.
குழந்தைகளை பாதிக்கக்கூடிய முக்கியமான குறைபாடுகளில் ஒன்றான ஆட்டிசத்தைக் கடந்து, பிள்ளைகளை ADHD எனும் பாதிப்பிற்கு ஆளாகுவதாகவும் கண்டறிந்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஆட்டிசம் பாதிப்பை போல் பாரிய சிக்கல் இல்லாவிட்டாலும், கவனம் செலுத்துவதிலும்.. ஒருமுகமான கவனத்துடன் செயல்படுவதிலும் தடையும், தாமதமும் ஏற்படும்.
மேலும் பல பிள்ளைகள் கற்றல் திறன் குறைபாடு என சுட்டிக்காட்டப்படும் டிஸ்லெக்சியா எனும் பாதிப்பிற்கும் ஆளாகிறார்கள். இவர்கள் தோற்றத்திற்கு இயல்பானவர்கள் போல் இருந்தாலும், பேசுவதற்கும், பழகுவதற்கும் இயல்பானவர்கள் போல் இருந்தாலும், கற்கும் திறனில் குறைபாட்டை கொண்டிருப்பர்.
சில பிள்ளைகள் நன்றாக படிப்பார்கள். ஆனால் பெருபேறுகள் கிடைப்பதிலும், தேர்வில் சித்தி அடைவதிலும் பின்னடைவை எதிர்கொள்வார்கள். மேலும் வேறு சில பிள்ளைகள் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் என சில பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், கணித பாடத்தில் பாரிய குறைபாட்டை கொண்டிருப்பர்.
இதற்கு பாரம்பரிய மரபணு குறைபாடு, டவுன் சிண்ட்ரோம் எனப்படும் நோய்க்குறி.. என சில காரணங்களால் அவர்கள் இத்தகைய பாதிப்பிற்கு முகம் கொடுக்கிறார்கள்.
தற்போது மேம்படுத்தப்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்கள் காரணமாக குழந்தை பிறந்த ஆறாவது மாதத்திலேயே.. அக்குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு இருந்தால், அதனை தொடக்க நிலையிலேயே கண்டறிய முடியும்.
பேச்சுப்பயிற்சி, ஒக்குபேஷனல் பயிற்சி, ஊட்டச்சத்து குறைபாடு களைவதற்கான சிகிச்சை, இயன்முறை பயிற்சி.. போன்ற சிகிச்சைகளை மிகக் குறைந்த வயதிலேயே வழங்கி அவர்களின் வளர்ச்சியை.. மற்ற பிள்ளைகளின் வளர்ச்சியை போல் சமச்சீரானதாக மாற்ற இயலும்.
மிகக் குறைவான வயதில் இத்தகைய குறைப்பாடை கண்டறியப்பட்டால், அதற்காக வழங்கப்படும் சிகிச்சையின் கால அளவும் குறைவாக இருக்கும். அதற்கான பலனும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும்.
ஆனால் பெற்றோர்களின் தாமதம் காரணமாக மூன்று வயதிற்கு மேல் பிள்ளைகளுக்கு குறைபாட்டினை கண்டறிந்து, அதற்காக சிகிச்சை பெற. வருகை தருகையில்... அவர்களுக்கான சிகிச்சை காலகட்டம் அதிக கால அவகாசத்தை கொண்டதாக இருக்கும். மேலும் அத்தகைய சிகிச்சைகளின் ஊடாக பெரும் பலன்களும் குறைவாகவே இருக்கும்.
மேலும் இத்தகைய பாதிப்புள்ள குழந்தைகளின் நோய் எதிர்ப்பு திறன் என்பது இயல்பான அளவைவிட மிக குறைவாகவே இருக்கும் என்பதால், பெற்றோர்கள் இதனை துல்லியமாக அவதானித்து, உரிய காலகட்டத்தில் இதற்கான சிகிச்சையை அளிக்க முன்வர வேண்டும்.
அதனுடன் இத்துறை மருத்துவர்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து, பிள்ளைகளுடன் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும். இதன் மூலம் பிள்ளைகளின் ஆரோக்கியம் மேம்படும். ஆட்டிசம் தொடர்பான சிகிச்சைகளை எளிதாக உட்கிரகித்து அதிலிருந்து விரைவில் மீண்டும் இயல்பான குழந்தைகளைப் போல் அவர்கள் உருவாவார்கள்.
அதே தருணத்தில் பெற்றோர்கள், தங்களுடைய பிள்ளைகளுக்குரிய பாதிப்பின் தன்மையை கண்டறிந்து சிகிச்சை பெற தொடங்கினால்.., அதனை முழுவதுமாகவும், தொடர்ச்சியாகவும் பெற வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் இடைநிறுத்தம் செய்தல் கூடாது. அது பாதிப்பின் தன்மையை அதிகப்படுத்தி விடும். மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 0091 98411 27599 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
சந்திப்பு : புகழ்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM