உக்ரைனில் ரஷ்ய ஜனாதிபதி ; ரஷ்யாவில் சீன ஜனாதிபதி! கைதாவாரா புட்டின்?

Published By: Nanthini

27 Mar, 2023 | 12:57 PM
image

குமார் சுகுணா

ஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கைதுசெய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அவர் உக்ரைனுக்கு விஜயம் செய்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அவரது உக்ரைன் விஜயம் தொடர்பில் பல செய்திகள் கசிந்துள்ளன.

அத்தோடு சீனாவின் ஜனாதிபதி மீண்டும் பதவியேற்றுள்ள நிலையில் தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை ரஷ்யாவுக்கு மேற்கொண்டுள்ளதோடு புட்டின் மீதான பிடியாணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் பார்ப்போமானால், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைய உக்ரைன் கடந்த வருடம் முடிவெடுத்தது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளுடனும் உக்ரைன் நெருக்கம் காட்டியது. 

இந்த நடவடிக்கைகளால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, உக்ரைன் மீது போர் அறிவிப்பை வெளியிட்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 2022 பெப்ரவரி 24ஆம் திகதி உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கையை தொடங்கினார். 

ஆரம்பத்தில் ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி உக்ரைனுக்கு கலக்கத்தை தந்தன. உக்ரைன் முழுவதையும் ரஷ்யா பிடித்துவிடும் என்ற நிலை உருவானது. சர்வதேச நாடுகளிடம் உக்ரைன் ஜனாதிபதி உதவி கோரினார். ஆனால், ஆரம்பத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு உதவாமல் வேடிக்கை பார்ப்பது போல இருந்தது.

இருப்பினும், சில மாதங்களுக்கு பின் உக்ரைனுக்கு பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் உதவிகள் கிடைத்தன. அமெரிக்க ஜனாதிபதி பைடன் அண்மையில் உக்ரைனுக்கு விஜயம் செய்திருந்தார். தற்போது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள், மேலும் சில நட்பு நாடுகளின் உதவியுடன் உக்ரைன் உத்வேகத்துடன் பதில் தாக்குதல் நடத்தி ரஷ்யாவுக்கு பதிலடியை தந்து வருகிறது. ஓராண்டுக்கு மேல் உக்ரைன் - ரஷ்ய போர் நடைபெற்று வருகின்றது. 

இந்நிலையில் இந்த போரின் மூலம் பல்வேறு போர்க்குற்றச் செயல்கள் நடைபெறுவதாகக் கூறி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 

அதனை தொடர்ந்து இது தொடர்பான வழக்கு விசாரணையும் நடைபெற்று வந்தது. இந்த விசாரணையின் முடிவில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மற்றும் அந்நாட்டின் குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையர் மரியா அலெக்ஸீவ்னா லவோவா-பெலோவா ஆகியோரை கைதுசெய்ய பிடியாணை பிறப்பித்துள்ளது.

இந்த போரினால் சட்டவிரோதமாக பெருமளவு  மக்கள், குழந்தைகளை நாடு கடத்தி இடமாற்றம் செய்யும் சூழல் உருவானது. உக்ரைன் குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொறுப்பு என கூறி இந்த உத்தரவை சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமைட்ரோ குலேபா வரவேற்றுள்ளார்.

அதேவேளை சர்வதேச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அர்த்தமற்றது. எங்கள் நாட்டுக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முடிவுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஸகரோவா கூறியுள்ளார். 

ரஷ்யா, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பு நாடு இல்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில், உக்ரைனிடமிருந்து ரஷ்யா ஆக்கிரமித்த மரியுபோல் பகுதியை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பார்வையிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய உக்ரைன் மீதான ரஷ்ய போரினால் மரியுபோல் உள்ளிட்ட சில பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மரியுபோல் பகுதிக்கு திடீரென விஜயம் செய்துள்ளார். 

கடந்த சனிக்கிழமை இரவு பொழுதில் புட்டின் மரியுபோலின் நெவ்ஸ்கி நகருக்கு காரில் சென்றுள்ளார். அவருடன் துணை பிரதமர் மராட் குஸ்னுலினும் சென்றிருந்திருந்தார்.

அப்போது புட்டின் அப்பகுதி மக்களோடு உரையாடியதோடு, உடன் பயணித்த அதிகாரிகளிடம் மரியுபோல் நகரை மீளமைப்பதாகவும் கூறியுள்ளார். 

போர்க்கால சூழலில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியதன் பின்னர் அப்பகுதிக்கு புட்டின் முதல் முறையாக சென்றிருந்தமை முக்கியமான பதிவாகிறது.

போரினால் பெருமளவு அழிவினை சந்தித்து, ரஷ்யாவின் பிடிக்குள் வந்த உக்ரைனின் மரியுபோல் பகுதிக்குச் சென்று, ரஷ்ய அதிபர் புட்டின் பார்வையிட்டமை சர்ச்சைகளை கிளப்பியுள்ள நிலையில், மரியுபோலில் புட்டின் மேற்கொண்ட விடயங்கள் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மரியுபோல் நகரின் சீரமைப்பு குறித்து அப்பயணத்தின்போது புட்டின் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தியுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களை புட்டினுக்கு அதிகாரிகள் காண்பித்துள்ளனர். 

எனவே, மரியுபோல் நகரை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கில் ரஷ்ய அதிபரின் உக்ரைன் விஜயம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

கடந்த டிசம்பர் தொடக்கம் மரியுபோல் நகரத்தின் மறுசீரமைப்பு குறித்து ரஷ்யா கவனம் செலுத்தி வருகிறது. 

அந்நகரில் ரஷ்யாவின் ஆதிக்கம் மேலோங்கத் தொடங்கியுள்ளது. அப்பகுதியெங்கும் ரஷ்ய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டுக் கொடிகள் நீக்கப்பட்டுவிட்டன. அங்குள்ள தெருக்களின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை புட்டினுக்கு பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ளமையை சர்வதேச நாடுகள் பலவும் வரவேற்றுள்ளன. ஆயினும், உக்ரைன் மீதான தனது தாக்குதலை தொடர்ந்து ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. இவற்றுக்கு மத்தியில் ரஷ்யாவுக்கு சீனாவும் ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறது.

ஷி ஜின்பிங் சீன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக ரஷ்ய விஜயத்தை அமைத்துக்கொண்டார்.

ரஷ்ய அரசினர் மாளிகையில் சீன மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகள் இருவரின் சந்திப்பு இடம்பெற்றது. பின் இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், மேற்குலக நாடுகளை குறிப்பாக உலக சமநிலையை குலைக்கும் அமெரிக்கா மற்றும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் மூக்கை நுழைக்கும் நேட்டோ அமைப்புகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். 

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவை தனிமைப்படுத்த மேற்குலகம் துடிப்பதாகவும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் இருந்து புட்டினை கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமைக்கும், ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளதற்கும் தமது எதிர்ப்பை பதிவு செய்தனர். 

தொடர்ந்து உக்ரைனில் அமைதி திரும்ப, சீன அதிபர் முன்னெடுத்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பாராட்டு தெரிவித்த புட்டின், உக்ரைன் மற்றும் மேற்குலக நாடுகளே அதனை ஏற்க மறுத்ததாக கூறினார். 

உக்ரைன் விவகாரத்தில் சீனாவுக்கு எந்த சார்பும் இல்லை என்பதை சீன ஜனாதிபதி ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார்.

சீனா பக்க சார்பில்லை என்று கூறினாலும், அது ரஷ்யாவின் சார்பு நாடாக இருப்பதாக மேற்குலக நாடுகள் குற்றம் சுமத்தி வருகின்றன. அத்தோடு ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை நிறுத்த சீனா அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்றன. ஆனால், சீனா ரஷ்யாவுக்கு எதிரான எந்த அழுத்தத்தையும் வெளிப்படுத்தியதாக தெரியவில்லை. மாறாக, பக்க துணையாக இருப்பதாகவே தெரிகின்றது.

எது எப்படியோ தொடர்ந்து உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் தொடர்கிறது. புட்டினுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டாலும், அவரை கைதுசெய்வது அத்தனை எளிதான விடயம் அல்ல!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04