முல்லைத்தீவின் எல்லைக்கிராமங்களில் பௌத்தமயமாக்கல் தீவிரம் ; நிலைமைகள் தொடர்பில் கள ஆய்வு

Published By: Digital Desk 3

27 Mar, 2023 | 12:40 PM
image

முல்லைத்தீவின் எல்லைக் கிராமங்களிலிருந்து தமிழ் மக்களை முற்றாக விரட்டியடிக்கும்நோக்குடன் திட்டமிட்ட வகையில் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அந்தவகையில் தமிழர்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களில் ஒன்றான, முல்லைத்தீவு - மணலாறு, மணற்கேணிப் பகுதியிலேயே பௌத்தமயமாக்கல் முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில், இது தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், அரசியல் செயற்பாட்டாளர்கள், கொக்குத் தொடுவாய்பகுதி பொது அமைப்புகள் ஆகியோர் இணைந்து மணற்கேணிப் பகுதிக்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அங்குள்ள நிலமைகளை ஆராய்ந்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மணலாறு - மணற்கேணிப் பகுதியென்பது, தமிழர்களின் தாயகப் பிரதேசங்களான வடக்கையும், கிழக்கையும் ஊடறுத்துப் பாயும் பறையனாற்றுப் பகுதியில் அமைந்துள்ள, வடக்கின் தமிழர் பூர்வீக எல்லைக் கிராமங்களில் ஒன்றாகும்.

இந்த பூர்வீக எல்லைக் கிராமத்தில் கடந்த 1984ஆம் ஆண்டிற்கு முன்னர், 36தமிழ் குடும்பங்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். அத்தோடு அப்பகுதியில் 200இற்கும் மேற்பட்ட தமிழ்மக்களுக்கு வயல்நிலங்கள் காணப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது.

அங்கு தமிழ்மக்களுக்குரிய பெரிய அளவிலான கால்நடைப் பண்ணைகள் காணப்பட்டதுடன், அங்கிருந்த தமிழ் மங்கள் பெரிய அளவில் நெற்பயிற்செய்கை மற்றும், மேட்டுநிலப் பயிர்ச்செய்கைளில் ஈடுபட்டதாகவும் கொக்குத் தொடுவாய்ப் பகுதித் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு இந்தப் பகுதியில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், நெற்களஞ்சியசாலை என்பனவும் அங்கு காணப்பட்டதாகவும், குறித்த பகுதியில் வாழ்ந்த மக்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தார்கள் எனவும் கொக்குத்தொடுவாய்ப்பகுதித் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறாக சகல வளங்களுடன் சிறப்பாக வாழ்ந்த மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில், இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு வாழ்ந்த மக்கள் யாழ்ப்பாணத்துடன் தொடர்புடைய மக்களாக இருந்ததாகவும், இராணுவத்தினர் வெளியேற்றியதைத் தொடர்ந்து அவர்கள் யாழ்ப்பாணத்திற்குச் சென்றுவிட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறாக இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்டமக்கள் இதுவரையில் அப்பகுதிகளில் மீளக்குடியமர்த்தப்படவில்லை.

யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர், மணற்கேணிப்பகுதிகளில் காணிகள் உள்ள மக்கள் சிலர் அங்கு மீளக்குடியேற்றுமாறு உரிய அரச அதிகாரிகளைக் கோரிய நிலையிலும் அங்கு மீள்குடியேற்றம் மேற்கெள்ளப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அங்கு தற்போது பௌத்தமயமாக்கல் முயற்சிகள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில் அங்குள்ள நிலைமைகளை ஆராயும் பொருட்டு களஆய்வு ஒன்று இவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் மணற்கேணிப் பகுதியில் காணப்படும் தமிழர்களின் வரலாற்றோடு தொடர்புடைய புராதன சின்னங்கள் இருந்த இடங்கள் இனந்தெரியாதோரால் அகழப்பட்டு அங்கிருந்த புதையல்கள் எடுக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.

குறித்த தமிழர்களின் புராதன வரலாற்றுச் சின்னங்களுடன் காணப்பட்ட, சைவ வழிபாட்டு அடையாளங்களான சிவலிங்கம் உடைக்கப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளதுடன், சிவலிங்கத்தின் ஆவுடையார் உள்ளிட்ட அம்சங்கள் அங்கு உடைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. அத்தோடு தமிழர்களின் வரலாறுகளை எடுத்துக்கூறும் வகையிலான கல்வெட்டுக்கள் சிலவும் அங்கு இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

இது தவிர அங்குள்ள தமிழர்களின் புராதன வரலாற்றுச் சான்றுகள் உள்ள இடங்கள், தற்போது பௌத்த விகாரைகளுக்குரிய இடங்களாகவும், பௌத்த பிரதேசங்களாகவும் கூகுள் வரைபடத்தில் குறித்துக் காட்டப்படுகின்றது.

குறிப்பாக அக்கரவெலிய, வண்ணமடுவ ஆகிய விகாரைகளுக்குரிய இடங்களாக தமிழர்களின் புராதன சின்னங்கள் உள்ள இடங்கள் கூகுள் வரைபடத்தில் குறித்துக் காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்த 1984ஆம் ஆண்டிற்குமுன்னர் மணற்கேணிப் பகுதியில் வாழ்ந்த பாரிய கால்நடைப் பண்ணையாளரும், விவசாயியுமான செல்லையா என்பவரால் அங்கு அமைக்கப்பட்ட கிணறு ஒன்று தற்போதும் அங்கு காணப்படுகின்றது.

குறித்த கிணற்றின் கட்டில் 1967.09.07 ஆம் திகதி இடப்பட்டுக் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அங்கு கால்நடைகளின் நீர்த்தேவைக்காக அமைக்கப்பட்ட பாரிய கேணி ஒன்றும் அங்கு காணப்படுகின்றது. இவ்வாறாக தமிழர்களின் புராதன வரலாற்றுச் சின்னங்கள் காணப்படும் இடமாகவும், தமிழ்மக்கள் 1984ஆம் ஆண்டிற்கு முன்னர் வாழ்ந்ததற்கான அடையாளங்களைக் கொண்ட இடமாகவும் மணற்கேணி காணப்படுகின்றது.

இருப்பினும் தற்போது தமிழர்களின் புராதன சின்னங்கள் பல அங்கிருந்து அகழப்பட்டு காணாமலாக்கப்பட்டிருப்பதுடன், அவ்வாறு தமிழர்களின் வரலாற்று அம்சங்கள் உள்ள இடங்கள், பௌத்த விகாரைக்குரிய இடங்களாகவும், பௌத்த பிரதேசங்களாகவும் குறித்துக்காட்டப்பட்டு கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயற்பாடு ஒன்று அங்கு முன்னெக்கப்படுகின்றது.

இதுதவிர ஏனைய தமிழர்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களான வண்ணாமடு, அக்கரவெளி, கற்தூண் ஆகிய பகுதிகளிலுள்ள, தமிழர்களின் புராதன அடையாளங்கள் உள்ள இடங்களும் அவ்வாறே பௌத்த விகாரைக்குரிய இடங்களாகவும், பௌத்த பிரதேசங்களாகவும் கூகுள் வரைபடங்களில் குறித்துக்காட்டப்பட்டு, கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறாக தமிழர்களின் எல்லைக்கிராமங்களில் உள்ள தமிழர்களின் புராதன அடையாளங்கள் உள்ள பகுதிகள் பௌத்த இடங்களாக குறித்துக் காட்டப்பட்டு, கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயற்பாடு செய்யப்படுவது பாரிய ஆபத்தாக அமையுமென கொக்குத்தொடுவாய்ப் பகுதித் தமிழ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கடந்த 1984ஆம் ஆண்டு கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளிலிருந்த தமிழ் மக்களும் இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்டனர். அவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் கடந்த 2011ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே தமது பகுதிகளில் மீளக்குடியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் இப்பகுதித் தமிழ்மக்கள் இடம்பெயர்ந்த காலத்தில், மணலாற்றுப்பகுதிக்குள் திட்டமிட்டு சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணித் தமிழ்மக்கள் நெற்பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்திய நீர்ப்பாசனக்குளங்களான ஆமயன்குளம், மறிச்சுக்கட்டிக்குளம், முந்திரிகைக்குளம் என்பனவும் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழர்களின் பூர்வீக நீர்ப்பாசனக்குளங்களின் கீழ் பெரும்பான்மை இனத்தவர்களே நெற்பயிற்செய்கை நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இவ்வாறான சூழலில் மீள்குடியமர்த்தப்பட்ட பிற்பாடு கோட்டைக்கேணி, சிவந்தாமுறிப்பு, கூமடுகண்டல், எரிஞ்சகாடு, இறம்பைவெளி, மேல்காட்டுவெளி, கொக்குமோட்டை, பாலங்காட்டுவெளி, கீழ்காட்டுவெளி, ஆத்திமோட்டைவெளி, காயாமோட்டைவெளி, கன்னாட்டி, குறிஞ்சாடி, பெரியவெளி, பணிக்கவயல், அக்கரவெளி, மாரியாமுனை ஆகிய மானாவாரி விவசாய நிலங்களிலேயே கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணித் தமிழ் மக்கள் நெற்பயிற்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இவ்வாறு மானாவாரி விவசாய நிலங்களில் நெற்பயிற்செய்கை மேற்கொள்ளும்போதும், வனஜீவராசிகள் திணைக்களம், வனவளத்திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஆகிய திணைக்களங்களின் பாரிய அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல் நிலைமைகளுக்கு மத்தியிலேயே தமிழ்மக்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதுதவிர பெரும்பான்மை இனத்தவர்களின் அத்துமீறிய ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள், அச்சுறுத்தல் நிலைமைகள் என்பவற்றையும் கடந்தே தமிழ் மக்கள் குறித்த மானாவாரி விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதிலும் குறிப்பாக வண்ணாமடு, மணற்கேணி, சாம்பான்குளம், நாயடிச்சமுறிப்பு ஆகிய தமிழர்களின் பூர்வீக மானாவாரி விவசாயநிலங்களை பெரும்பான்மை இனத்தவர்கள் அத்தமேீறி ஆக்கிரமித்து அங்கும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்வாறான சூழலில் எல்லைக்கிராமங்களில் திட்டமிட்டு பௌத்தமயமாக்கலைச் செய்வதன்மூலம், அந்த எல்லைக்கிராமங்களை அண்டியுள்ள தமக்குரிய சகல மானாவாரி விவசாயநிலங்களையும் தாம் இழக்கவேண்டிய நிலையும் ஏற்படலாம் எனவும் கொக்கிளாய் கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

முற்றுமுழுதாக வடகிழக்கு தமிழர் தாயக எல்லைப்பகுதியிலிருந்து தம்மை விரட்டியடிப்பதற்கான ஒரு சதி நடவடிக்கை இது எனவும் குறித்த தமிழ் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே இந்த திட்டமிட்ட பௌத்தமயமாக்கல் செயற்பாட்டை நிறுத்துவதற்கு, எல்லைக்கிராமங்களுக்குச் சொந்தமான யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் மக்களும் தம்மோடு கைகேர்க்கவேத்டுமென கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி தமிழ்மக்கள் வேண்டுகேள் விடுத்துள்ளனர்.

அதேவேளை தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அனைவரும் இணைந்து இந்த திட்டமிட்ட பௌத்த மயமாக்கல் செயற்பாட்டுக்கெதிராக குரல் கொடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'லிபரேஷன் ஒபரேஷன்' : 36 ஆண்டுகளுக்கு...

2023-06-01 21:34:26
news-image

வீழ்ச்சியடையும் சுகாதார துறையுடன் போராடும் பொதுமக்கள்

2023-06-01 15:31:15
news-image

இலங்கை பல்கலைக்கழகங்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட ...

2023-06-01 14:44:30
news-image

சிரிப்பதற்கு உரிமையில்லை

2023-05-31 16:56:52
news-image

நான்கு தசாப்தம் கடந்தும் நெஞ்சில் கொழுந்து...

2023-05-31 16:00:00
news-image

கிழக்கு கரையில் இருந்து எங்களது குரல்

2023-05-31 14:24:50
news-image

Factum Perspective: தாய்லாந்து தேர்தல் -...

2023-05-31 11:43:39
news-image

புத்தகங்களையும் விட்டு வைக்காத சிங்கள பேரினவாதம்

2023-05-31 10:18:04
news-image

கனவுகள் சிதைக்கப்பட்ட புலம்பெயர் பணிப்பெண்கள்

2023-05-31 20:51:08
news-image

“உலக புகைத்தல் தடுப்பு தினம்”

2023-05-26 11:25:08
news-image

குப்பை மேடு, காட்டு யானை பிரச்சினைகளுக்கு...

2023-05-30 17:10:57
news-image

சட்டத்தரணியாக பணிபுரிந்த பெண்ணின் கரங்களில் ஆயுதம்...

2023-05-30 16:27:16