logo

உலக தமிழர்களின் கவனம் ஈர்க்கும் 'யாத்திசை'

Published By: Digital Desk 5

27 Mar, 2023 | 11:23 AM
image

நடிகர் சக்தி மித்ரன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'யாத்திசை' எனும் திரைப்படம், தலைப்பாலும்.., படத்தின் கதையம்சத்தாலும்.. உலக தமிழர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அறிமுக இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'யாத்திசை'. இதில் சக்தி மித்ரன், சேயோன், நடிகைகள் ராஜலட்சுமி, வைதேகி அமர்நாத், சமர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

அகிலேஷ் காத்தமுத்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சக்கரவர்த்தி இசையமைத்திருக்கிறார்.

தமிழகத்தை மன்னர்கள் ஆண்ட கால கட்டத்திய படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வீனஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் சிக்ஸ் ஸ்டார் எண்டர்டெய்ன்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் கே. ஜெ. கணேஷ் தயாரித்திருக்கிறார்.

இந்த படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' யாத்திசை என்றால் சங்க கால சொல் வழக்குப்படி தென்திசை என பொருள். தமிழகத்தின் தென் திசையில் வாழ்ந்த பாண்டிய மன்னர்களின் வீரம் செழிந்த வாழ்வியல் மற்றும் குறுநில மன்னர்கள் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை மையப்படுத்தி இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. 

தமிழகத்தின் தொல்லியல் வரலாற்றில் எயின குடிகள் என்றொரு குடிமக்கள் தொகுதி இருந்தனர். இவர்களின் போர்க்கள வாழ்வியலை முன்னிலைப்படுத்தி இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. 

இதில் இரணதீர பாண்டியன் எனும் கதையின் நாயகன் கதாபாத்திரத்தில் நடிகர் சக்தி மித்ரன் நடித்திருக்கிறார். போரில் வீரர்களாக பங்குபற்றும் எயின நாடோடி கூட்டத்தின் தலைவன் கொதீ எனும் கதாபாத்திரத்தில் நடிகர் சேயோன் நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஏப்ரலில் வெளியிட திட்டமிட்டு வருகிறோம் ''என்றார்.

பாண்டிய மன்னர்களின் வீர வரலாறு குறித்த படைப்பு என்பதாலும், நடிகர்கள் புதுமுகம் என்பதாலும், படத்தின் தலைப்பு 'யாத்திசை' என சங்க கால தமிழில் பெயரிடப்பட்டிருப்பதாலும், இயக்குநர் இப்படைப்பில் தமிழகத்தின் நிலவியல் பகுதியிலிருந்து அழித்தொழிக்கப்பட்ட எயின குடி மக்களின் வாழ்வியல் வரலாற்றை பதிவு செய்திருக்கிறோம் என தெரிவித்திருப்பதாலும், இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு தமிழக எல்லையை கடந்து உலகெங்கும் வாழும் தமிழ் மக்களிடமும் விரிவடைந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right