logo

குத்தாட்ட சாதனை படைத்த சாயிஷா

Published By: Digital Desk 5

27 Mar, 2023 | 11:21 AM
image

சிலம்பரசன் நடிப்பில் தயாராகி, இம்மாதம் 30ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகவிருக்கும் ' பத்து தல' எனும் படத்தில் இடம்பெறும் 'ராவடி..' எனத் தொடங்கும் பாடலுக்கு நடிகை சாயிஷா கவர்ச்சியாக நடனமாடி இருக்கிறார். 

இந்தப் பாடலின் காணொளி இணையத்தில் வெளியாகி குறுகிய கால அவகாசத்தில் இரண்டரை மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

இயக்குநர் என். கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பத்து தல'. சிலம்பரசன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் அவருடன் கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள். 

ஃபாருக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை புயல்' ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். கேங்ஸ்டர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் பென் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் டொக்டர். ஜெயந்தி காடா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

கன்னடத்தில் வெளியான 'முஃப்தி' எனும் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் என்றாலும், அண்மையில் வெளியான 'புஷ்பா' படத்தின் வெற்றிக்கு அப்படத்தில் இடம் பெற்ற 'ஓ வர்றியா ஓ ஓ வர்றியா..' என்ற ஒரு பாடலும் ஒரு காரணம். 'பத்து தல' படத்திலும் ஒரு கவர்ச்சியான குத்தாட்ட நடனத்தை பட குழுவினர் இடம்பெற வைத்திருக்கிறார்கள். இந்தப் பாடலுக்கு திருமதி ஆயிஷா ஆர்யா நடனமாடி இருக்கிறார்.

இதனிடையே திருமணத்திற்குப் பிறகு திருமதி சாயிஷா நடிக்கும் முதல் படம் இது என்பதும், இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு கவர்ச்சியான குத்தாட்டத்திற்காக இந்திய மதிப்பில் 40 லட்சம் ரூபாயை ஊதியமாக பெற்றிருப்பதும் திரையுலகினரை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right