(நெவில் அன்தனி)
நியூஸிலாந்துக்கு எதிராக ஓக்லண்ட், ஈடன் பார்க் விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (25) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 198 ஓட்டங்களால் இலங்கை படுதோல்வி அடைந்தது.
இந்தத் தோல்வியினால் ஐசிசி கிரிக்கெட் உலக கிண்ண சுப்பர் லீக் தொடரில் அவசியமான 10 புள்ளிகளை இலங்கை இழந்துள்ளதுடன் உலகக் கிண்ணப் போட்டியில் நேரடியாக விளையாடுவதற்கான அதன் வாய்ப்பும் சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.
கேன் வில்லியம்சன், அணித் தலைவர் டிம் சௌதீ, டெவன் கொன்வே, மைக்கல் ப்றேஸ்வெல் ஆகிய பிரதான வீரர்கள் இல்லாத நிலையிலும் நியூஸிலாந்து கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றதுடன் இலங்கையை 100 ஓட்டங்களுக்கு சுருட்டி வெற்றியை சம்பாதித்துக்கொண்டது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற போதிலும் தசுன் ஷானக்க களத்தடுப்பை தெரிவுசெய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாக அமைந்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 274 ஓட்டங்களைக் குவித்தது.
30ஆவது ஓவரில் 5ஆவது விக்கெட்டை இழந்தபோது நியூஸிலாந்தின் மொத்த எண்ணிக்கை 152 ஓட்டங்களாக இருந்தது.
எனினும் க்ளென் பிலிப்ஸ், அறிமுக வீரர் ரச்சின் ரவிந்த்ர ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 64 ஓட்டங்கள் நியூஸிலாந்து கௌரவமான நிலையை அடைய உதவியது.
பின்வரிசை துடுப்பாட்டத்தில் போதியளவு பங்களிப்பு கிடைக்காத போதிலும் அறிமுக வீரர் ரவிந்த்ர திறமையாகத் துடுப்பெடுத்தாடியதன் பலனாக நியூஸிலாந்தின் மொத்த எண்ணிக்கை 260 ஓட்டங்களைக் கடந்தது.
நியூஸிலாந்து சார்பாக பின் அலன் (51), ரச்சின் ரவிந்த்ர (49), டெரில் மிச்செல் (47), க்ளென் பிலிப்ஸ் (39), வில் யங் (26) ஆகியோர் திறமையாகத் துடுப்பெடுத்தாடினர்.
இலங்கை பந்துவீச்சில் சாமிக்க கருணாரட்ன 43 ஓட்ங்களுக்கு 4 விக்கெட்களையும் கசுன் ராஜித்த 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லஹிரு குமார 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
275 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 76 ஓட்டங்களைப் பெற்று படுதோல்வி அடைந்தது.
இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுதுவது போன்று அநாவசியமாக அதிரடியில் இறங்கியதாலும் தவறான அடி தெரிவுகளாலும் விக்கெட்களைத் தாரைவாரத்தனர்.
ஏஞ்சலோ மெத்யூஸ் (18), சாமிக்க கருணாரட்ன (11), லஹிரு குமார (10) ஆகிய மூவரே இரட்டை இலக்கை எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
நியூஸிலாந்து பந்துவீச்சில் ஹென்றி ஷிப்லி 31 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் டெரில் மிச்செல் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ளயார் டிக்னர் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
தனது 4ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ஹென்றி ஷிப்லி தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து ஆட்டநாயகன் விருதை வென்றெடுத்தார்.
இது இவ்வாறிருக்க, சுப்பர் லீக் அணிகள் நிலையில் தற்போது 8ஆவது இடத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 88 புள்ளிகளுடனும் 9ஆவது இடத்தில் தென் ஆபிரிக்கா 78 புள்ளிகளுடனும் 10ஆவது இடத்தில் இலங்கை 77 புள்ளிகளுடனும் இருக்கின்றன.
ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ண சுப்பர் லீக் தொடரில் தென் ஆபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் தலா 2 போட்டிகள் இன்னும் எஞ்சியுள்ளன. சுப்பர் லீக்கில் கடைசி போட்டிகளாக அமையும் அந்த இரண்டு போட்டிகளிலும் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றால் உலகக் கிண்ணத்துக்கான தகுதிகாண் சுற்றில் இலங்கை விளையாட நேரிடும்.
தென் ஆபிரிக்கா ஒரு போட்டியில் தோல்வி அடைந்து இலங்கை 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றால் உலகக் கிண்ண போட்டியில் இலங்கை நேரடியாக விளையாடத் தகுதிபெறும்.
ஒருவேளை, தென் ஆபிரிக்காவும் இலங்கையும் தத்தமது எஞ்சிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்தால் மேற்கிந்தியத் தீவுக்ள உலகக் கிண்ணத்தில் நேரடியாக விளையாட தகுதிபெறும். அப்படி நேர்ந்தால் தென் ஆபிரிக்காவும் இலங்கையும் தகுதகாண் சுற்றில் விளையாடும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM