நம் வாழ்நாளில் அனைவரும் அடிக்கடி சந்திக்கும் ஒரு உபாதை வாந்தியாகும். இந்த வாந்தி பொதுவாக ஒரு அறிகுறியாக மட்டுமே இருந்தாலும் பல நேரங்களில் நோயாகவும் உருவாகலாம்.
பெண்களுக்கு கர்ப்ப காலத்திலும், குழந்தைகளுக்கு சளி அதிகமாக பிடித்திருந்தாலும், பலருக்கு உண்ட உணவு சமிபாடடையாவிட்டாலும், சிலருக்கு அதிகமாக சாப்பிடுவதாலும் அல்லது சிலருக்கு சாப்பிடாமலே இருப்பதாலும், காரமான உணவுகளை உட்கொண்டு வந்தாலும், தரமற்ற கெட்டுப்போன உணவுகளை உண்பதாலும் வாந்தி ஏற்படலாம்.
சில சமயங்களில் துர்நாற்றங்களை நுகர்வதாலும், சிலருக்கு பெரிய நோய்கள் இருக்கும்போதும், புற்றுநோய் போன்ற நோய்களாலும் அதற்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளாலும் கூட வாந்தி வரலாம். ஏன், ஒரு சிலருக்கு ஒவ்வாமையால் கூட வாந்தி ஏற்படலாம்.
வேறு சிலருக்கு வயிற்று வலி கூட வாந்தி ஏற்பட ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் மன அழுத்தம், பித்தப்பை நோய்கள், மண்ணீரல் மற்றும் கல்லீரல் நோய்கள், மஞ்சள் காமாலை, அநேக நோய்த்தொற்றுகள், குடல் அடைப்பு, கல்லடைப்பு, அதிக மதுபானம், மூளையில் அடிபடுதல்/ கட்டி / பாதிப்பு போன்ற சந்தர்ப்பங்களில் கூட அடிக்கடி வாந்தி ஏற்படலாம். ஒரு சிலர் வாட்டம் சாட்டமாக இருப்பர். ஆனால், பயணம் செய்தாலே அவர்களுக்கு வாந்தி ஏற்படும்.
கர்ப்ப காலத்தில் உண்டாகும் வாந்தி... கர்ப்ப காலத்தில் ஒரு சிலருக்கு முதல் மூன்று மாதங்கள் வாந்தி, மயக்கம் போன்றவை உண்டாகும். சாப்பிடுவதில் ஆர்வம் இருக்காது. ஒரு சிலருக்கு இந்த அனுபவம் முதல் 5 மாதங்கள் வரைகூட இருக்கலாம். இது காலையில் மட்டும் இல்லாமல் முழுநேரமும் ஏற்பட்டு சத்து குறைபாடு ஏற்படலாம்.
நோயா, அறிகுறியா?
வாந்தி என்பது ஒரு தனிப்பட்ட நோயாக பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் ஆயுர்வேத மருத்துவத்தில் வாந்தி என்பது ஒரு அறிகுறியாக மட்டும் பார்க்கப்படாமல் ஒரு தனித்த நோயாகவும் பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் வாந்தி ஒரு நோயாகவும் அல்லது பல நோய்களின் அறிகுறியாகவும் வரலாம்.
எதுவாக இருந்தாலும் வாந்தி என்பது ஒரு சாதாரண அறிகுறியிலிருந்து ஒரு அபாய அறிகுறியாகவும் இருக்க வாய்ப்புகள் அதிகம். அத்தகைய சமயங்களில் அடிக்கடி வரும் வாந்திகளை நாம் ஒரு அபாய எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு அதற்கு காரணம் என்னவென்று அறிந்து அதற்கு தக்க சிகிச்சையை தக்க நேரத்தில் செய்து கொள்வது முக்கியமாகும்.
மேலும் ஆயுர்வேதத்தின் பஞ்சகர்மா முறைப்படி வாந்தி, ஒரு சுத்திகரிப்பு முறையாகவும் பார்க்கப்படுகிறது. சமகால அறிவியல், நம் உடலுக்கு சேராத, தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களை உட்கொள்ளும் போது நமது மூளை தன்னிச்சையாக செயல்பட்டு அப்பொருட்களை வெளியேற்றவே வாந்தியை உருவாக்குகிறது என்று கூறுகிறது.
இதையே ஒரு மருத்துவ சுத்திகரிப்பு முறையாக ஆயுர்வேத மருத்துவம் 3000 வருடங்களுக்கு முன்னரே உணர்ந்து வாந்தியை ஒரு மருத்துவ முறையாக கருதி பஞ்சகர்மா உடல் சுத்தி முறைகளில் வாந்தி எடுக்கச் செய்வதை ஒரு முக்கியமான சுத்திகரிப்பு முறையாகவும் அதற்கு தக்க கோட்பாடுகளையும் மருந்துகளையும் கூறியுள்ளது.
இந்த காரணங்களில் தொடர்பு இல்லாமல் அடிக்கடி வாந்தி எடுப்பது சிலருக்கு வழக்கமாக இருக்கும். இதற்கு சுழற்சி (recurrent) வாந்தி என்று சமகால மருத்துவம் கூறுகிறது. இந்த நிலை 10 நாட்கள் வரை இருக்கலாம். இது பொதுவாக குமட்டலுடன் சேர்ந்தே வருகிறது. இது முக்கியமாக குழந்தை பருவத்தில் அடிக்கடி வருவதை நாம் அன்றாடம் பார்க்கிறோம்.
குமட்டல்...
பல நேரங்களில் வாந்திக்கு முன் குமட்டல் ஏற்படும். குமட்டல் என்பது வயிற்றில் ஏற்படும் ஒரு அசௌகரியம். இது வாந்தி எடுக்கும் உணர்வையும், பின் வாந்தியையும் ஏற்படுத்துகிறது. குமட்டலின் அறிகுறிகளாக வாயில் எச்சில் ஊறுவது, வயிற்றை புரட்டி போடுவது, புளித்த ஏப்பம் போன்றவை பொதுவாக வரும்.
வாந்தியின் விளைவுகள்...
பெரும்பாலும் வயிற்றில் ஏதேனும் நச்சுப் பொருள்கள் இருந்தால் அதை வெளியேற்ற ஒரு முறை அல்லது இருமுறை வாந்தி வருவது இயல்பு. ஆனால் ஒரு நாளில் ஐந்து அல்லது ஆறு முறைக்கு மேல் வந்தால் அது நம் உடலுக்கு தீங்கை விளைவிக்க கூடும். இதனால் உடலில் உள்ள நீர் சத்து குறைந்து, உடல் உலர்ந்து, ரத்த அழுத்தம் குறைந்து, தலைசுற்றல் மற்றும் மயக்கம் கூட ஏற்பட வாய்ப்புண்டு. குறிப்பாக, குழந்தைகள் சில முறை வாந்தி எடுத்தாலே சோர்வடைந்துவிடுவார்கள். இது ஆபத்து.
வாந்தி திரவம் எவ்வாறு இருக்கும்?
- ரத்தக் கோடுகள் அல்லது ரத்தம் தோய்ந்த வாந்தி பொதுவாக உணவுக்குழாய் அல்லது வயிற்றில் ரத்த கசிவை அல்லது கீரலைக் குறிக்கும்.
- சில வாந்திகள் காபியை ஒத்திருக்கும். வயிற்றில் உள்ள அமிலங்களும் ரத்தமும் சேர்ந்து இவ்வாறு இருக்கும்.
- மஞ்சள் வாந்தி பித்தத்தின் இருப்பைக் குறிக்கிறது, இது பொதுவாக உணவுக்குப் பிறகு நடக்கும்.
- குடல் அடைப்பு மற்றும் குடல் செயல்பாடுகளில் பிரச்சினை உள்ளவர்கள், ஓரளவு செரிமானம் செய்யப்பட்ட உணவு வாந்தியாக வெளிவரும்.
வாந்தியுடன் ஏற்படும் பொதுவான அறிகுறிகள்...
- குமட்டல்
- வயிற்று வலி, வயிற்றுப்போக்கு
- இலேசான தலைவலி, தலைசுற்றல் (வெர்டிகோ)
- காய்ச்சல்
- விரைவான இதய துடிப்பு, அதிக வியர்வை
- வறண்ட வாய், நெஞ்சு வலி
- மயக்கம், குழப்பம்
- அதிக தூக்கம்
மன அழுத்தத்தால் ஏற்படும் வாந்தி...
இன்றைய காலக்கட்டத்தில் பள்ளி படிக்கும் பிஞ்சு குழந்தைகள் கூட மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். ஒரு குழப்பமான மனநிலையில் இருந்து மீள்வதற்குள், அடுத்தடுத்த பிரச்சினைகள் வந்து சுமையாக இறங்கும்போது, ‘ஸ்ட்ரெஸ்’என்கிற மன அழுத்தத்துக்கு ஆளாக நேரிடுகிறது. இப்படி மன அழுத்தம் அடுத்தடுத்து அழுத்தும் போது உடல் சார்ந்த பிரச்சினைகள் வர ஆரம்பிக்கின்றன. மன அழுத்தம் அதிகரிக்கும் போது வாந்தி, மலச்சிக்கல், குமட்டல் போன்ற பிரச்சினைகளும் வரலாம்.
உடற்பயிற்சி, தியானம், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதல் போன்றவற்றை மேற்கொண்டு மன அழுத்தத்தினால் உருவாகக்கூடிய குமட்டல் மற்றும் வாந்தியை தடுக்கலாம்.
பயணத்தினால் வரும் வாந்தி...
உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒருவருக்கு பயணம் செய்யும் பொழுது, பயணம் ஒவ்வாத உடல்நலக் குறைவு ஏற்பட்டு பாதிக்கப்படுகிறார்கள். ஆட்டம், குலுக்கல் நிறைந்த பயணங்கள் சிலரை மிகவும் பாதிக்கும். இப்பாதிப்பு கப்பல், ஊர்திகள், விமானப் பயணங்களிலும் ஏற்படும். இவ்வாறு பயணங்கள் மட்டும் அல்லாது இராட்டினம் போன்ற கேளிக்கை விளையாட்டிலும், வேகமாக பயணிக்கும் திரைப்படக் காட்சிகளைக் காண்பதிலும் கூடப் பயணப்பிணி உடல்நலக் குறைவு ஏற்படுவதுண்டு. இதில் முக்கியமாக அவர்களுக்கு வரும் அறிகுறி வாந்தி.
மூளைக்குக் குழப்பம் தரும் இயக்கம் நின்று போனாலும், அல்லது நாம் அதைத் தவிர்க்கும் பொழுதும் பயணப்பிணி நிலைமை பெரும்பாலும் மாறிவிடும். மேலும் இதை தவிர்க்க, பயணிக்கும் பொழுது தொடுவானத்தில் பார்வையை நிலை நிறுத்தவும், அல்லது பயணம் செல்வதற்கு எதிர்திசையை நோக்கி அமர்ந்து பயணிப்பதையும் தவிர்க்கலாம். பிரயாணம் செய்யுமுன் உணவு அருந்துவதையும் அல்லது மிகவும் இலகுவான உணவை மூன்று மணி நேரம் முன்னரே எடுத்துக்கொள்வதையும் பின்பற்றலாம். மேலும் பயணங்களில் இஞ்சியை மெல்லுவது இப்பிரச்சினையை கட்டுப்படுத்தும். பேருந்து நிலையங்களில் இன்றளவிலும் ‘இஞ்சி மரப்பா’விற்கப்படும் காரணமும் இதனால்தான்.
சிகிச்சை முறைகள்...
*வாந்தியை நிறுத்துவதற்கு முதலில் நாம் வாந்திக்கான காரணங்களை தவிர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக மக்கள் கூட்டம் நிரம்பிய மற்றும் இறுக்கமான இடங்களில் இருப்பது, அல்லது அடைத்த சூழ்நிலைகள் குமட்டல் மற்றும் வாந்தியை அதிகரிக்கலாம். எனவே, சில நிமிடங்களுக்கு அறையை விட்டு வெளியேறி புதிய காற்றை பல முறை சுவாசிப்பது வாந்தியை குறைக்கும்.
*நாம் வீட்டிலேயே செய்யக்கூடிய ஏலக்காய் தண்ணீர், சோம்பு நீர், எலுமிச்சை சாறு, இஞ்சி நீர் மற்றும் கிராம்பு துண்டை வாயில் போட்டு சப்புவது போன்ற முறைகள் மூலம் நாம் வாந்தியை குறைக்கலாம்.
*ஆயுர்வேதத்தின்படி வாந்திக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றும் செரிமானக்குறைவு ஒரு காரணமாக இருப்பதால் உண்ணாவிரதம் மட்டுமே ஒரு சிறந்த சிகிச்சையாக இருக்கும். பின்னர் செரிக்க எளிமையான உணவுவை சிறிது சிறிதாக எடுத்துக்கொள்ள மெதுவாக செரிமானமாகி வாந்தி நின்று விடும்.
*திராட்சாதி கசாயம், திராக்ஷாதி சூரணம், பாலசத்தூர்பத்ரிக சூரணம், திரிக்கடு சூரணம், இங்வாஷ்டக சூரணம், வில்வாதி லேகியம், சிவ குடிகா, மயூரா பிச்ச பஸ்மம், பிரபல பஸ்மம் போன்ற மருந்துகளை தகுதி வாய்ந்த ஆயுர்வேத பட்டதாரி மருத்துவரை அணுகி நோய் காரணத்தை முழுமையாக அறிந்துகொண்டு அவரின் அறிவுரையின் அடிப்படையில் பயன்படுத்த நல்ல பலன் காணலாம்.
வாந்தியை தடுப்பது எப்படி?
*பசித்து புசி என்கிற பழமொழியின் வழியில் பசி எடுத்த பின்னரே உணவு உட்கொள்வது அவசியம்.
*உணவு செரிமானத்தில் பிரச்சினை இருந்தால் உண்ணாவிரதம் இருந்து அடிக்கடி வெந்நீர் பருகி, பசி வந்த பிறகு சூப்புகளில் ஆரம்பித்து பின்னர் மெதுவாக உணவுகள் பக்கம் போவது நல்லது.
*உணவு அருந்தும் போது உணவில் கவனம் செலுத்தி நன்கு மென்று பின் உணவை விழுங்குவது சாலச்சிறந்தது.
*வறுத்த மற்றும் காரமான உணவுகளை தவிர்ப்பது அவசியம்.
*சாப்பிடாமல் வெறும் வயிற்றில் நீண்ட நேரம் இருக்க வேண்டாம்.
*உணவு சாப்பிட்ட பிறகு குறுநடையோ அல்லது லேசான சில உடற்பயிற்சிகளோ செய்யலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM