WPL நீக்கல் போட்டியில் மும்பை - UP வொரியர்ஸ் இன்று மோதுகின்றன

Published By: Digital Desk 5

24 Mar, 2023 | 05:51 PM
image

(நெவில் அன்தனி)

அங்குரார்ப்பண மகளிர் பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்தாடப்போகும் அணி எது என்பதைத் தீர்மானிக்கும் நீக்கல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியும் UP வொரியர்ஸ் அணியும் விளையாடவுள்ளன.

இந்தப் போட்டி மும்பை, டி.வை. பட்டில் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (24) இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மும்பை இண்டியன்ஸ் அணியில் இடம்பெறும் அனுபவசாலிகளுக்கும் UP வொரியர்ஸ் அணியின் மத்திய வரிசை வீராங்கனைகளுக்கும் இடையிலான போட்டியாக இது அமையவுள்ளது.

இந்த இரண்டு அணிகளின் பெறுபேறுகளுக்கு அமைய மும்பை இண்டியன்ஸ் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் எத்தகைய சவாலையும் முறியடிக்கக்கூடிய ஆற்றல் தங்களுக்கு  இருப்பதை UP வொரியர்ஸ்  அணி  லீக் சுற்றில் எடுத்துக்காட்டியிருந்தது.

இந்த இரண்டு அணிகளும் லீக் சுற்றில் இரண்டு தடவைகள் சந்தித்துக்கொண்டபோது ஒரு போட்டியில் மும்பை இண்டியன்ஸ் 8 விக்கெட்களாலும்  மற்றைய  போட்டியில் UP வொரியர்ஸ் 5 விக்கெட்களாலும் வெற்றிபெற்றிருந்தன.

இரண்டு அணிகளிலும் தலா 7 வீராங்கனைகளே திறமையை வெளிப்படுத்தி தத்தமது அணிகளின் வெற்றிகளில் பிரதான பங்காற்றியுள்ளனர்.

மும்பை இண்டியன்ஸ் அணியில் ஹெய்லி மெத்யூஸ் (232 ஓட்டங்கள், 12 விக்கெட்கள்), அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோர் (3 அரைச் சதங்களுடன் 230 ஓட்டங்கள்), நெட் சிவர் - ப்றன்ட் (232 ஓட்டங்கள், 9 விக்கெட்கள்), யஸ்திகா பாட்டியா (189 ஓட்டங்கள்), ஆமேலி கேர் (106 ஓட்டங்கள், 13 விக்கெட்கள்), சய்க்கா இஷாக் (13 விக்கெட்கள்), இஸி வொங் (8 விக்கெட்கள்) ஆகியோர் பிரதான வீராங்கனைகளாக இடம்பெறுகின்றனர்.

UP வொரியர்ஸ் அணியில் சுற்றுப் போட்டியில் அதிக ஓட்டங்களைப் பெற்றுள்ள தஹ்லியா மெக்ரா (4 அரைச் சதங்களுடன் 295 ஓட்டங்கள்), அலிசா ஹீலி (242 ஓட்டங்கள்), க்றேஸ் ஹெரிஸ் (216 ஓட்டங்கள்), கிரண் நவ்கிரே (112 ஓட்டங்கள்), சொஃபி எக்லஸ்டோன் (70 ஓட்டங்கள், 14 விக்கெட்கள்), தீப்தி ஷர்மா (74 ஓட்டங்கள், 9 விக்கெட்கள்), ராஜேஷ்வரி கயக்வாட் (7 விக்கெட்கள்) ஆகியோர் திறமையான வீராங்கனைகளாக இடம்பெறுகின்றனர்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் அணி 180 ஓட்டங்களுக்கு மேல் பெற்றால் அவ்வணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகமாக இருக்கும். ஒருவேளை அந்த அணி 120 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டால் எதிரணிக்கு சாதகமான முடிவு கிடைக்கும்.

எவ்வாறாயினும் இந்தப் போட்டியில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேற இரண்டு அணிகளும் முயற்சிக்கும் என்பதால் இப் போட்டி கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்