அரசதுறை வியாபாரத்தில் ஈடுபட்டதால் மகாவலி போன்ற 100 திட்டங்களை நிர்மாணிப்பதற்கான பணம் வீணடிக்கப்பட்டது - ஜனாதிபதி

Published By: Digital Desk 5

23 Mar, 2023 | 04:06 PM
image

மறைந்த பிரதமர் தேசபிதா டி.எஸ்.சேனாநாயக்கவின் தத்துவத்தை நாம் ஒதுக்கினாலும்  பிரதமர் லீ குவான் யூ அந்த தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி சிங்கப்பூரை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றியுள்ளதாக  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எமது  நாட்டின் அரசியல்வாதிகள் இலங்கையை சிங்கப்பூராக மாற்ற வேண்டும் என்று கனவு கண்ட போதும் கடந்த 75 வருடங்களில் சில அரசியல் இயக்கங்களின் தீர்மானங்களினால் இலங்கைக்கு ஏற்பட்ட அழிவுகள் எண்ணிலடங்காது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சுதந்திரச் சதுக்கத்தில் நேற்று புதன்கிழமை (22) நடைபெற்ற மறைந்த பிரதமர் தேசபிதா டி.எஸ்.சேனாநாயக்கவின் 71வது நினைவுதின நிகழ்வில் கலந்து கொண்ட போதே  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டார்.

வலுவான மற்றும்  சக்திவாய்ந்த இலங்கையொன்றை  கட்டியெழுப்ப சேனநாயக்கவின் பாரம்பரியத்தை  முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் , மகாமான்ய டி. எஸ். சேனாநாயக்கவின் உருவச் சிலைக்கு  மலர்அஞ்சலி  செலுத்தப்பட்டதுடன், கொள்ளுப்பிட்டி, பொல்வத்த ஸ்ரீ தர்மகீர்த்தி ஆராமாதிபதி கலாநிதி வணக்கத்துக்குரிய பண்டாரவளை விமலதர்ம தேரர்  இதன் போது விசேட உரை நிகழ்த்தினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்,

அரச துறை  வியாபாரம் மேற்கொண்டதால், கடந்த தசாப்தங்களில் மகாவலி போன்ற சுமார் 100 திட்டங்களை நிர்மாணிப்பதற்கான பணம்  வீணடிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் அரச துறையானது வர்த்தகத்தில் இருந்து விலகி தனியார் துறைக்கு திறந்துவிடப்பட்டு சுதந்திர  மற்றும் உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சுதந்திரப் பொருளாதாரத்தை உருவாக்குவதே  எஸ்.சேனாநாயக்கவின் தத்துவமாக இருந்ததை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, தனியார் துறையினரால் வியாபாரம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர்களிடமிருந்து பெறப்படும் வரி வருமானத்தில் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்,

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அது தொடர்பில் கருத்து தெரிவித்த போது நான் மிகவும் வருத்தமடைந்தேன். ஏனென்றால் இன்று டி.எஸ் சேனநாயக்க அவர்களின் நினைவு தினம் ஆகும். அவர் சுதந்திரம் பெற்றுக் கொடுத்த இலங்கை, 75 ஆவது சுதந்திரத்தை கொண்டாடும் போது பிச்சைக்கார நாடாக மாறிவிட்டது.

இன்றைய தினத்திற்குப் பிறகு எங்களின் கடனை மறுசீரமைக்க வாய்ப்பு கிடைப்பதனால் அந்த நிலையில் இருந்து நாங்கள் விடுபட்டுள்ளோம் என்பதில் நான் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் இந்த நிலைக்கு நாம் எப்படி வந்தோம் என்று சிந்திக்க வேண்டும்.

டி.எஸ். சேனநாயக்க அவர்கள் இந்த நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்கும் போதும் அதற்கு முன்னரும் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலிருந்து இந்நாட்டு பொருளாதாரத்தை முன்னெடுத்து அவர் கொண்டு சென்ற கொள்கைகளினால் ஜப்பானுக்கு அடுத்தபடியாக இலங்கை மிகவும் முன்னேறிய நாடாக மாறியது.

நாம் இங்கிலாந்துக்கும் கடன் வழங்கினோம். அப்படியானால், அவ்வாறானதொரு நாடு எப்படி இந்த நிலைக்கு வந்தது. எங்களுக்கு என்ன நடந்தது?

ஜப்பானுக்கு அடுத்ததாக இலங்கை ஒரு வளர்ந்த நாடாக மாறியிருக்கலாம். ஆனால் அதற்குப் பதிலாக, போரினால் பாதிக்கப்பட்ட தென் கொரியா முன்னேறியது.

மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா, இந்தோனேசியா, வியட்நாம், பங்களாதேஷ் போன்ற நாடுகள் முன்னேறின. ஏன் நாம் பின்வாங்கினோம்? எனவே 75 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் போது, நாம் இந்த நிலையை அடைய என்ன காரணம் என்று கண்டறிவது அவசியம்.

இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்க இரண்டு விடயங்களை முன்வைத்தார். ஒன்று இலங்கையின் அடையாளம். சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் பிரித்தானிய அரச கிரீடத்திற்கும் பிரித்தானிய மன்னருக்கும் விசுவாசமாக இருந்தனர்.

பிரித்தானியாவில் இருந்து நாம் சுதந்திரம் பெற்றுவிட்டதால், மன்னர் அடையாளத் தலைவனாக இருந்தாலும், நாம் குரல் கொடுத்திருக்க வேண்டியது இலங்கைக்காகவேயன்றி அரசனுக்காக அல்ல.   அதனால் தான் இலங்கையின் அடையாளத்தைப் பெறுங்கள் என்று அவர் கூறினார்.

நாம் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எந்த இனமாக இருந்தாலும், சரி, நாம் அனைவரும் இலங்கையர்களாகவே கருதப்பட வேண்டும்.

அதேவேளை பெரும்பான்மை சிங்கள மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அதேவேளை சிறுபான்மை மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்குரிய  சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.

ஆனால் நாங்கள் அதிலிருந்து விலகிவிட்டோம். நாம் 1956 இல் இனவாதத்தை உருவாக்கினோம். இறுதியாக அது யுத்தம் வரை சென்றது. எனவே, நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின், முதலில் நாட்டிலே இலங்கை என்ற   அடையாளத்தை உருவாக்கி முன்னோக்கிச் செல்ல வேண்டும். இது மிகவும் முக்கியமானது.

 இனவாத, மதவாத செயற்பாடுகளினால் இந்த நாடு வீழ்ந்தது. ஆனால் சிங்கப்பூர் அதற்கு இடமளிக்கவில்லை. அதனால் சிங்கப்பூர் முன்னேறியது. இரண்டாவதாக, டி.எஸ். சேனநாயக்க, சுதந்திர பொருளாதாரத்தை கட்டியெழுப்புமாறு கூறினார். உற்பத்தி மற்றும் வணிகத்தை தனியார் துறைக்கு பெற்றுக்கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக அரசாங்கம் வரிகளை பெற்று அந்த வரிகளை கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்யும்.

இதன் மூலம் இலவசக் கல்வியும் இலவச சுகாதாரமும் உருவாகியது. போதுமான அளவு பணம் இருந்தது. ஆனால் இன்று கல்வியையும் சுகாதாரத்தையும் நவீனமயப்படுத்த நம்மிடம் போதிய பணம் இல்லை.

நாங்கள் அங்கிருந்து நகர்ந்து மக்கள்மயப்படுத்தி, அரசுடைமையாக்கி அனைத்தையும் நிர்வகித்தோம். நாம் இப்போது அங்கிருந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். அதனால்தான், ஐ.எம்.எஃப் உடன்படிக்கையுடன் அரசாங்கத்தை மீண்டும் வணிகத்திலிருந்து ஒதுக்குவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கான பொருளாதார வேலைத்திட்டத்தை நாம் வழங்க வேண்டும்.

வியாபாரங்களில் இருந்து நட்டமடைந்த பணம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்திய போது, மகாவலி போன்ற சுமார் 100 திட்டங்களை இந்நாட்டில் செயற்படுத்தி இருக்கலாம். அன்று டி.எஸ். சேனாநாயக்க இதை தனியாரிடம் விட்டுவிடுங்கள் என்று கூறினார்.

அன்று தனியார் துறை  பெரும்பான்மையான  வியாபாரங்கள்  சிங்கள மக்களுடையதாக இருந்தது. வியாபாரம் சிங்கள மக்களால் செய்யப்பட்டது. சிங்கள மக்களைப் பாதுகாப்பதாகக் கூறிய அந்த சோசலிச வேலைத்திட்டத்தினால் சிங்கள மக்கள் தான் அழிக்கப்பட்டனர்.

1947 இல் எமது சிங்கள வர்த்தகர்கள் முன்னணியில் இருந்தனர். அந்த நிலை தொடர்ந்திருந்தால் இன்று நாம்  பாரிய  முன்னேற்றத்தை  அடைந்திருப்போம். நாம் அந்த வாய்ப்பை இழந்து விட்டோம். அது டி.எஸ். சேனாநாயக்கவின் தத்துவத்திலிருந்து விலகியதால் தான்.  அந்த தத்துவத்திற்குத்   திரும்பவே நான் முயற்சிக்கிறேன்.

ஏனெனில் அவருடைய அரசியல் தத்துவத்திலிருந்து நாம் விலகினாலும், சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூவு அந்தத் தத்துவத்தை  செயல்படுத்தினார். அவர் டி.எஸ். சேனாநாயக்கவின் நிகழ்ச்சித்திட்டத்தை பாராட்டினார். முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டார்.

ஆனால் அதன் பிறகு வந்த இலங்கை அவரை  நிராகரித்தது. அதனால் சிங்கப்பூருக்கு அந்த உரிமை கிடைத்தது. நாம் சிங்கப்பூர் போல மாற  வேண்டும் என்று இப்போது எமது மக்கள் கூறுகிறார்கள். இதுதான் அரசியலா?  இந்த அரசியலில் இருந்து நாம் விலகி இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்துவிட்டு இன்று ஒரு நாடாக நாங்கள் வீழ்ச்சியடைந்துள்ளோம். 75 ஆண்டுகளுக்கு முன்பு டி.எஸ். சேனாநாயக்க அவர்கள் செய்ததை நாம் தொடர்ந்திருந்தால் இன்று இந்த நிலைமை எமக்கு ஏற்பட்டிருக்காது. எப்படியிருந்தாலும், நாங்கள் இங்கிருந்து முன்னோக்கிச் செல்வோம்.

எனது எதிர்பார்ப்பு, பழைய பொருளாதார அமைப்பை மீண்டும் ஏற்படுத்துவதல்ல. இந்த நாட்டில் சிங்களவர்கள், முஸ்லிம்கள், தமிழர்கள் மற்றும் பர்கர்கள் அனைவருக்கும் பெரும் ஆற்றல் உள்ளது. நாம் பொருளாதாரத்தை திறந்துவிடுவோம். அரசாங்கத்துக்கு அரசாங்கத்தின் வேலையைச் செய்யச் சொல்லுங்கள். அதேபோன்று  வியாபாரிகளை வியாபாரம் செய்யச் சொல்லுங்கள். அப்படியானால், நாம் சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடைவதற்குள் இந்த நாடு சக்தி வாய்ந்த நாடாக மாறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

எப்பொழுதும் எங்கள் மக்களை ஏழைகளாக விட்டுவிட நாங்கள் விரும்பவில்லை. இதற்கு நாம் பழைய எண்ணங்களிலிருந்து விடுபட வேண்டும். மக்களிடம் மனப்பான்மை மாற்றம் ஏற்பட வேண்டும். அனைவரும் இணைந்து அந்த பயணத்தை மேற்கொள்வோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொள்ளுப்பிட்டி பொல்வத்த ஸ்ரீ தர்மகீர்த்தியராமதிபதி கலாநிதி வண. பண்டாரவளை விமலதர்ம தேரரும் இங்கு உரையாற்றினார்.

ஐக்கிய தேசியக் கட்சி தவிசாளர், பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம்  பிரதானியுமான சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜயவர்தன, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ரோஹித போகொல்லாகம, கருணாசேன கொடித்துவக்கு, ருக்மன் சேனாநாயக்க, கொழும்பு முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க, ஜக்கிய  லக் வனிதா முன்னணி தலைவி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சாந்தினி கொங்கஹகே, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02
news-image

450 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு...

2023-06-04 13:24:16
news-image

தெஹியத்தகண்டி பிரதேச ஆற்றில் நீராடிய இருவர்...

2023-06-04 13:13:28
news-image

யாழ். பல்கலையில் மோதல் : 31...

2023-06-04 13:02:15
news-image

நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் - ஜனாதிபதியிடம்...

2023-06-04 12:23:12
news-image

12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை...

2023-06-04 12:14:40
news-image

16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களை சிறைகளிலிருந்து...

2023-06-04 12:01:57
news-image

ரயில் தடம் புரண்டதால் மலையகப் பாதையில்...

2023-06-04 11:39:35