முவர்ஸ் கழக வெற்றியில் அசத்திய யாழ். வீரர் விதுசன், ஸாஹிரா வீரர் ஷமாஸ்

Published By: Digital Desk 5

23 Mar, 2023 | 09:32 AM
image

(நெவில் அன்தனி)

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட பிரதான கழகங்களின் 23 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான 2 நாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கொழும்பு முவர்ஸ் கழகம் சம்பியனானது.

கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் புதன்கிழமை (22) நிறைவடைந்த இறுதிப் போட்டியில் ராகமை கிரிக்கெட் கழக அணியை முதல் இன்னிங்ஸில் வெற்றிகொண்டதன் மூலம் முவர்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன் பட்டத்தை சூடியது.

யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் வீரர் தீசன் விதுசனின் 5 விக்கெட் குவியல், அணித் தலைவர் மொஹமத் ஷமாஸ், சொஹான் டி லிவேரா, ஜனிஷ்க பெரேரா ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் என்பன முவர்ஸ் கழகத்தின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

செவ்வாய்க்கிழமை (21) ஆரம்பமான அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ராகமை கிரிக்கெட் கழகம் முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 293 ஓட்டங்களைப் பெற்றது.

முதல் 4 விக்கெட்களை 69 ஓட்டங்களுக்க இழந்த ராகமை கிரிக்கெட் கழகம் அதன் பின்னர் சிறந்த துடுப்பாட்டங்களின் மூலம் 293 ஓட்டங்களைப் பெற்றது.

முன்வரிசை வீரர் துலாஜ் பண்டாரவும் மத்திய வரிசை வீரர் ரன்மித் ஜயசேனவும் 5ஆவது விக்கெட்டில் 93 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்தனர்.

துலாஜ் பண்டார 73 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரன்மித் ஜயசேனவும் அணித் தலைவர் டிலொன் பீரீஸும் 6ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ரன்மித் ஜயசேன 72 ஓட்டங்களையும் டிலொன் பீரிஸ் 27 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களைத் தொடர்ந்து 8ஆவது வீக்கெட் வீழ்ந்தபோது ராகமை கிரிக்கெட் கழகத்தின் மொத்த எண்ணிக்கை 233 ஓட்டங்களாக இருந்தது.

இந் நிலையில் ஷஷிக்க டுல்ஷானும் அஷான் பெர்னாண்டோவும் 9ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 58 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர்.

8ஆம் இலக்க வீரர் ஷஷிக்க டுல்ஷான் 52 ஓட்டங்களையும் அஷான் பெர்னாண்டோ ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இடதுகை சுழல்பந்துவீச்சாளர் தீசன் விதுசன் 102 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் தினுக்க டில்ஷான் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய முவர்ஸ் விளையாட்டுக் கழகம் 9 விக்கெட்களை இழந்து 298 ஓட்டங்களைப் பெற்று முதல் இன்னிங்ஸில் வெற்றிபெற்றதும் ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

மொத்த எண்ணிக்கை 7 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரர் ஒமேஷ் மெண்டிஸ் (குசல் மெண்டிஸின் சகோதரர்) ஓட்டம் பெறாமல் ஆட்டமிழந்தார்.

எனினும் மற்றைய ஆரம்ப வீரர் தினுக்க டில்ஷானும் 3ஆம் இலக்க வீரர் சொஹான் டி லிவேராவும் 2ஆவது விக்கெட்டில் 112 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு நம்பிக்கை ஊட்டினர்.

சொஹான் டி லிவேரா 72 ஓட்டங்களையும் தினுக்க டில்ஷான் 44 ஓட்டங்களையும் பெற்று 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இருவரும் ஆட்டமிழந்தனர். இது முவர்ஸ் அணிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.

ஆனால், அணித் தலைவர் மொஹமத் ஷமாஸ், ரிசிர வீரசூரிய ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 136 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர்.

மொஹமத் ஷமாஸ் 73 ஓட்டங்களுடனும் ரிசிர வீரசூரிய 72 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்த ஓவர்களில் களம் விட்டகன்றனர்.

53ஆவது ஓவரில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 262 ஓட்டங்களைப் பெற்றிருந்த முவர்ஸ் அணி அதன் பின்னர்  15 ஓட்டங்கள் இடைவெளியில் 5 விக்கெட்களை இழந்து பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

முதலாவது இன்னிங்ஸில் வெற்றிபெறுவதற்கு 2 ஓட்டங்கள் இருந்தபோது 9ஆவது விக்கெட் விழ போட்டியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், ஷக்கூர் ரஸ்னி துணிச்சலை வரவழைத்து முன்னால் நகர்ந்து சிக்ஸ் ஒன்றை விளாசி முவர்ஸ் கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்ஸில் வெற்றிபெறுவதையும் சம்பியனாவதையும் உறுதிசெய்தார். ரஸ்னி 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

இறுதிப் போட்டி நாயகனாக மொஹமத் ஷமாஸ் தெரிவானார். அவருக்கு விருதுடன் 50,000 ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது.

22 கழகங்கள் 4 குழுக்களில் பங்குபற்றிய இந்த சுற்றுப் போட்டியின் 4 லீக் போட்டிகளில் 27 விக்கெட்களை வீழ்த்திய தீசன் விதுசன் அதிசிறந்த பந்துவீச்சாளருக்கான விருதுடன் 75,000 ரூபா பணப்பரிசை வென்றெடுத்தார்.

5 லீக் போட்டிகளில் ஒரு சதம், 3 அரைச் சதங்களுடன் மொத்தமாக 427 ஓட்டங்களைக் குவித்த ஏஸ் கெப்பிட்டல் வீரர் சக்குன லியனகே அதிசிறந்த துடுப்பாட்ட வீரராகத் தெரிவாகி 75,000 ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது.

சுற்றுப் போட்டியில் 23 விக்கெட்களைக் கைப்பற்றியதுடன் 148 ஓட்டங்களைப் பெற்று சகலதுறைகளிலும் பிரகாசித்த ராகமை கிரிக்கெட் கழக வீரர் டிலொன் பீரிஸ் சுற்றப் போட்டியின் நாயகனாகத் தெரிவாகி ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசை தனதாக்கிக்கொண்டார்.

இந்த சுற்றுப் போட்டியில் 2ஆம் இடத்தைப் பெற்ற ராகமை கிரிக்கெட் கழகத்திற்கு 3 இலட்சம் ரூபாவும் முவர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு 5 இலட்சம் ரூபாவும் பணப்பரிசாக வழங்கப்பட்டது.

(பட உதவி: ஸ்ரீலங்கா கிரிக்கெட்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டாவது போட்டியில் இலங்கை 323 ஓட்டங்கள்...

2023-06-04 16:10:20
news-image

ஆசிய கிண்ணப் போட்டிகளை இலங்கை நடத்த...

2023-06-04 11:43:17
news-image

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்தவீராங்கனைகள் -கபில் தேவ்...

2023-06-03 13:50:22
news-image

தோனியின் முழங்கால் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக...

2023-06-03 10:43:52
news-image

ஆப்கானிஸ்தானிடம் 6 விக்கெட்களால் பணிந்தது இலங்கை

2023-06-02 20:48:55
news-image

ஆப்கானிஸ்தானுக்கு வெற்றி இலக்கு 269 ஓட்டங்கள்...

2023-06-02 14:31:46
news-image

 ஜோகோவிச்சின் கொசோவா தொடர்பான கருத்து ஏற்படுத்திய...

2023-06-02 13:22:32
news-image

ஐ.பி.எல்லில் அசத்திய மதீஷ பத்திரணவை சர்வதேச...

2023-06-02 07:25:11
news-image

மதீஷ பத்திரண குறித்து இலங்கை அணித்...

2023-06-02 12:32:24
news-image

23 வயதுக்குட்பட்ட பொதுநலவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப்பில்...

2023-06-01 17:19:41
news-image

47ஆவது தேசிய கூடைப்பந்தாட்டம்: இருபாலாரிலும் வட...

2023-06-01 15:51:26
news-image

"இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பொலிஸாரினால் நடத்தப்பட்ட...

2023-06-01 14:03:45