(நெவில் அன்தனி)
இலங்கைக்கு பதக்கங்கள் வென்றுகொடுக்கக்கூடிய விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியாத, விளையாட்டு வீரர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கத் தவறும் சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் நிருவாகிகளுக்கு எதிர்காலத்தில் நிருவாக உத்தியோகத்தர்களுக்கான தேர்தலில் போட்டியிட முடியாதவாறு சட்ட விதி கொண்டுவரப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
தேசிய விளையாட்டு வீரர்களின் குறைகளைக் கேட்டறியும் வகையில் விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர்கூடத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
இந்தக் கலந்துரையாடலில் தேசிய விளையாட்டுத்துறை பேரவைத் தலைவர் அர்ஜுன ரணதுங்க உட்பட அதன் உறுப்பினர்களும் கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர்.
இந்தக் கலந்துரையாடலின் மூலம் பொதுவாக விளையாட்டுத்துறை சங்கங்கள் அல்லது சம்மேளனங்களின் நிருவாக சபை உத்தியோகத்தர்கள் விளையாட்டு வீரர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுப்பதில்லை என்பது தெளிவாகிறது எனக் குறிப்பிட்ட அமைச்சர், அத்தகைய நிருவாகிகள் எதிர்காலத்தில் பதவி வகிக்க முடியாதவாறு சட்ட விதிகள் அமுல்படுத்தப்படும் என்றார்.
'இன்று விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்கும் நிருவாகிகள் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் பெயரளவில் மாத்திரமே இருக்கின்றனர். அத்தகையவர்கள் மோசடிகளில் ஈடுபடுகிறார்களே தவிர விளையாட்டுத்துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து அக்கறை கொள்வதில்லை.
விளையாட்டு வீரர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க பணம் இல்லை எனக் கூறி விளையாட்டு வீரர்களை அவர்கள் புறந்தள்ளி விடுகின்றனர். ஆனால் வழக்கு விசாரணைகளுக்கு ஜனாதிபதி சட்த்தரணிகளை அமர்த்தி சங்கத்தின் அல்லது சம்மேளனத்தின் பணத்தை செலவழிக்கின்றனர்.
விளையாட்டு வீரர்கள் பற்றி அக்கறை செலுத்தாத அத்தகையவர்கள் விளையாட்டுத்துறை சங்கங்களில் பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர்கள்' என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, 2022 டிசம்பர் மாதத்திலிருந்து உயர்ஆற்றல் வெளிப்பாடு திட்டத்தின்கீழ் சிறப்பு விளையாட்டு வீரர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை எனவும் ஸ்கொஷ் விளையாட்டில் தலைமைப் பயிற்றுநராக கடமையாற்றிய பாகிஸ்தான் பயிற்றுநரின் ஒப்பந்துகாலம் முடிவடைந்துள்ளதால் தங்களுக்கு தேசிய பயிற்றுநர் இல்லை எனவும் பட்மின்டன் விளையாட்டில் இரட்டையர்களுக்கு தேசிய பயிற்றுநர் இல்லை எனவும் அமைச்சரிடம் வீரர்கள் சுட்டிக்காட்டினர்.
அதற்கு பதிலளித்த தேசிய விளையாட்டுத்துறை பேரவைத் தலைவர் அர்ஜுன ரணதுங்க, 'இன்னும் ஒரு வாரத்தில் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடி இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படும்' என்றார்.
ஒரு சில சங்கங்களைத் தவிர்ந்த ஏனைய சங்கங்களின் நிருவாக உத்தியோகத்தர்கள் தங்களது கடமைகளை செவ்வனே ஆற்றுவதில்லை எனக் குறிப்பிட்ட அர்ஜுன ரணதுங்க, தங்களால் கோரப்படும் விடயங்களுக்கு சங்கங்களிடமிருந்து உரிய பதில் கிடைப்பதில்லை எனவும் கூறினார்.
விளையாட்டு வீரர்களின் குறைகளை, தேவைகளைக் கேட்டறிந்து அவர்களது தேவைகளை நிறைவேற்றுவது சங்க பிரதிநிதிகளின் கடப்பாடு என அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை சார்பாக எத்தனை போட்டியாளர்களையும் அனுப்ப தயார் எனக் குறிப்பிட்ட அவர் அதிகாரிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, சீனாவில் இந்த வருடம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவுக்கான இலங்கை வீர, வீராங்கனைகளை இன்னும் ஒரு வாரத்திற்குள் தேசிய தெரிவுக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு விளையாட்டுத்துறை சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களைக் கோரியுள்ளதாக தேசிய விளையாட்டுத்துறை பேரவை உறுப்பினரும் முன்னாள் டென்னிஸ் வீரருமான அர்ஜுன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM