(நெவில் அன்தனி)
கத்தார் தேசத்தின் தோஹா வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்து 3 அணிகளுக்கு இடையிலான லெஜென்ட்ஸ் லீக் கிரிக்கெட் மாஸ்டர்ஸ் இருபது 20 சுற்றுப் போட்டியில் ஷஹித் அப்ரிடி தலைமையிலான ஏசியா லயன்ஸ் சம்பியன் பட்டததை சுவீகரித்தது.
உப்புல் தரங்க, திலக்கரட்ன டில்ஷான் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்து, 10 ஓவர்களில் 115 ஓட்டங்களைப் பகிர்ந்ததன் பலனாக ஏசியா லயன்ஸ் 7 விக்கெட்களால் வெற்றியீட்டி சம்பியனானது.
அவர்கள் இருவரது துடுப்பாட்ட ஆற்றல் காரணமாக வேர்ல்ட் லெஜென்ட்ஸ் சார்பாக யக் கலிஸ் குவித்த ஆட்டமிழக்காத அரைச் சதம் வீண்போனது.
திங்கட்கிழமை (20) இரவு மின்னொளியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஷேன் வொட்சன் தலைமையிலான வேர்ல்ட் லெ ஜென்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது.
பவர் ப்ளே ஓவர்கள் நிறைவடைவதற்கு முன்னர் மோர்னி வென் வைக் (0), ஷேன் வொட்சன் (0), லெண்ட்ல் சிமன்ஸ் (17) ஆகிய மூவரும் ஆட்டமிழக்க வேர்ல்ட் லெஜென்ட்ஸ் 19 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.
ஆனால், யக் கலிஸ், ரொஸ் டெய்லர் ஆகிய இருவரும் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 68 பந்துகளில் 92 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வலுவான நிலையில் இட்டனர்.
ரொஸ் டெய்லர் 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த சொற்பநேரத்தில் போல் கொலிங்வூட் 6 ஓட்டங்கள் பெற்ற நிலையில் உபாதைக்குள்ளாகி ஓய்வுபெற்றார்.
கடைசிவரை அதிரடியாக துடுப்பெடுத்தாடிய யக் கலிஸ் 54 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 78 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழக்காதிருந்தார். மறுபக்கத்தில் சமித் பட்டேல் 3 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
ஏசியா லயன்ஸ் பந்துவீச்சில் அப்துர் ரஸாக் 4 ஓவர்களில் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் திசர பெரேரா 22 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
148 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஏசியா லயன்ஸ் 16.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
இலங்கையின் முன்னாள் வீரர்களான உப்புல் தரங்கவும் திலக்கரட்ன டில்ஷானும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 69 பந்துகளில் 115 ஓட்டங்களைப் பகிர்ந்து ஏசியா லயன்ஸ் அணிக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
28 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட உப்புல் தரங்க 5 பவுண்டறிகள், 3 சசிக்ஸ்களுடன் 57 ஓட்டங்களைக் குவித்தார்.
அவருக்கு பக்கபலமாக ஆனால் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய திலக்கரட்ன டில்ஷான் 42 பந்துகளில் 8 பவுண்டறிகளுடன் 58 ஓட்டங்களைப் பெற்றார்.அவரைத் தொடர்ந்து அப்துர் ராஸாக் 3 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
மொஹமத் ஹபீஸ், மிஸ்பா உல் ஹக் ஆகிய இருவரும் ஆட்டம் இழக்காமல் தலா 9 ஓட்டங்களைப் பெற்று ஏசியா லயன்ஸ் வெற்றியை உறுதிப்படுத்தினர்.
ஆட்டநாயகன்: அப்துர் ரஸாக்.
ஏசியா லயன்ஸ் அணியில் திசர பெரேரா, இசுறு உதான ஆகிய முன்னாள் இலங்கை வீரர்களும் இடம்பெற்றனர்.
இந்த சுற்றுப் போட்டியில் 6 இன்னிங்ஸ்களில் 3 அரைச் சதங்களுடன் 221 ஓட்டங்களைக் குவித்த உப்புல் தரங்க தொடர்நாயகனானார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM