330 மில்லியன் டொலர் முதலாம் கட்ட நிதி இருதினங்களில் வழங்கப்படும் - சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் அறிவிப்பு

Published By: Digital Desk 3

21 Mar, 2023 | 04:50 PM
image

(ந.தனுஜா)

நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதங்களில் இலங்கைக்கு 2.286 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை அனுமதியளித்துள்ளது.

அதன்படி முதற்கட்டமாக 330 மில்லியன் டொலர் நிதி இன்னும் இருதினங்களில் இலங்கைக்கு வழங்கப்படுமென சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அதேவேளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்திவரும் மிகவும் சவாலான பொருளாதார கொள்கைசார் மறுசீரமைப்புக்களைப் பாராட்டியுள்ள நாணய நிதிய அதிகாரிகள், இம்மறுசீரமைப்புக்கள் மற்றும் வரியறவீடு என்பன வறிய, பின்தங்கிய சமூகப்பிரிவினர்மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை இழிவளவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்தின்கீழ் 48 மாதகாலத்தில் சுமார் 2.9 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கான உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி எட்டப்பட்டது.

அதனையடுத்து கடந்த 6 மாதகாலமாக சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர் சபையின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், அதன் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவந்தன.

இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட இலங்கைக்கான நிதியுதவிச்செயற்திட்ட ஆவணம் நேற்று திங்கட்கிழமை (20) நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனை ஆராய்ந்த பணிப்பாளர் சபை, எதிர்வரும் 48 மாதங்களில் இலங்கைக்கு 2.286 பில்லியன் டொலர்களை (சுமார் 3 பில்லியன் டொலர்) வழங்குவதற்கு அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில் பணிப்பாளர் சபையின் தீர்மானம் தொடர்பில் அறிவிக்கும் நோக்கில் இலங்கை நேரப்படி செவ்வாய்கிழமை (21) காலை 8 மணிக்கு (வொஷிங்டன் நேரப்படி 20 ஆம் திகதி இரவு 10.30 மணி) வொஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சர்வதேச நாணய நிதிய ஆசிய, பசுபிக் திணைக்களத்தின் இலங்கைக்கான செயற்திட்டத்தலைவர் பீற்றர் ப்ரூயர் மற்றும் இலங்கைக்கிளைத்தலைவர் மஸாஹிரோ நொஸாகி ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தினர். 

அவர்கள் வெளியிட்ட கருத்துக்களின் சுருக்கம் வருமாறு:

இலங்கையின் பொருளாதாரக்கொள்கைகள் மற்றும் மறுசீரமைப்புக்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கைக்கு எதிர்வரும் 48 மாதகாலத்தில் 2.286 பில்லியன் டொலர்களை (சுமார் 3 பில்லியன் டொலர்கள்) வழங்குவதற்கு நாணய நிதியப் பணிப்பாளர் சபை அனுமதியளித்துள்ளது.

கடந்தகாலங்களில் மேற்கொள்ளப்பட்ட தவறான கொள்கைத்தீர்மானங்கள் மற்றும் பொருளாதார அதிர்வுகளின் விளைவாக இலங்கை தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது.

இந்நெருக்கடியின் காரணமாக இலங்கை மக்களின்மீது, குறிப்பாக வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினர்மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பிலும், வெளியக நிதியீட்டலில் நாடு எதிர்கொண்டிருக்கும் தாமதம் தொடர்பிலும் நாம் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றோம்.

அந்தவகையில் சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர் சபை வழங்கியுள்ள அனுமதியானது, இலங்கை முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிக்கான தீர்வை நோக்கிய மிகமுக்கிய நடவடிக்கையாக அமைந்திருக்கின்றது.

அதேவேளை அனுமதியளிக்கப்பட்டுள்ள நிதியில் முதலாம் கட்டமாக 330 மில்லியன் டொலர்கள் உடனடியாக (ஓரிரு தினங்களில்) இலங்கைக்கு வழங்கப்படவிருப்பதுடன், இது ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி உள்ளிட்ட வெளியகத்தரப்பினரின் நிதியுதவிக்கான ஊக்கியாக அமையும்.

மேலும் நீடித்த நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களின்போது நாம் வலுவான கொள்கை உருவாக்கத்துக்கு முன்னுரிமையளித்துள்ளோம்.

அதன்படி முறையான வருமான அடிப்படையிலான நிதி ஒருங்கிணைப்பு, நிதிக்கட்டமைப்புக்களின் மறுசீரமைப்பு, அத்தியாவசிய பொதுச்செலவினங்களுக்கு ஆதரவளிக்கக்கூடிய அரசின் இயலுமையை உறுதிப்படுத்தும் வகையில் செலவினங்களை ஈடுசெய்யக்கூடிய வலுசக்தி (எரிபொருள்) விலையிடல் முறைமை, அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கான நிதியியல் இயலுமையை நிலைநாட்டுதல் உள்ளடங்கலாக கடன்மறுசீரமைப்பின் ஊடாக பொதுக்கடன்களின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தல், விலை உறுதிப்பாட்டை மீளக்கட்டியெழுப்புவதுடன் செயற்திறனான நாணயமாற்று விகிதத்தின்கீழ் வெளிநாட்டுக்கையிருப்பை வலுப்படுத்துதல், பொருளாதார வளர்ச்சியில் நிதியியல் துறை முக்கிய பங்காற்றுவதை உறுதிப்படுத்தும் வகையில் நிதியியல் துறை ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்பக்கூடியவாறான கொள்கை உருவாக்கம், ஊழல்மோசடிகளைக் கையாள்வதற்கும் பொருளாதார வளர்ச்சியை விரிவுபடுத்துவதற்கும் ஏதுவான வகையிலான கட்டமைப்பு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகியவற்றுக்கு நாம் முன்னுரிமை வழங்கியுள்ளோம்.

இத்தகைய சவாலான கொள்கைசார் செயன்முறைகளை இலங்கை ஏற்கனவே அமுல்படுத்த ஆரம்பித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். இலங்கை அரசாங்கமும், பொதுமக்களும் இம்மறுசீரமைப்புக்களின் அமுலாக்கத்தை மேலும் விரிவாகத் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டியது அவசியமாகும்.

அதேவேளை இப்பொருளாதார மறுசீரமைப்புக்களால் வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினர்மீது ஏற்படக்கூடிய தாக்கங்களை உரியவாறான நடவடிக்கைகள் மூலம் இழிவளவாக்கவேண்டும்.

அதற்கமைய சமூகப்பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்துவதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை வரவேற்கின்றோம்.

அதேபோன்று வரி மறுசீரமைப்புக்கள் செயற்திறனான முறையில் வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், அவை உயர்வருமானம் பெறுவோரின் வலுவான பங்களிப்பை (பொருளாதாரத்துக்கான) உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. மேலும் வரிவருமானத்தை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள், வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினரைப் பாதுகாக்கும் அதேவேளை பொருளாதார வளர்ச்சிக்கு நேயமான முறையில் முன்னெடுக்கப்படவேண்டும்.

கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கையின் பொதுக்கடன்கள், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 128 சதவீதமாகக் காணப்பட்டமையானது அதன் நிலையற்றதன்மையை வெளிப்படுத்துகின்றது. இலங்கை அதன் அனைத்து வெளியகக்கடன்வழங்குனர்களுக்கும் கடனைத் திருப்பிச்செலுத்தவேண்டிய நிலையில் உள்ளது. எனவே இவ்விடயத்தில் கடன்வழங்குனர்களிடமிருந்து பெறப்படவேண்டியிருந்த கடன் ஸ்திரத்தன்மை தொடர்பான 'நிதியியல் உத்தரவாத' நிபந்தனை தற்போது பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தும் வகையில் இலங்கை அரசாங்கமும் கடன்வழங்குனர்களும் மிகநெருக்கமான ஒன்றிணைந்து செயற்படுவதும், கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதும் இன்றியமையாததாகும். சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளின் பிரகாரம் கடன்வழங்குனர்களை ஒருங்கிணைப்பதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை நாணய நிதிய அதிகாரிகள் இலங்கைக்கு வழங்குவர்.

மேலும் ஊழலை இல்லாதொழிப்பது, நிர்வாக ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் பிரகாரம் மிகமுக்கியமாக நிறைவேற்றப்படவேண்டிய காரணிகளாகும். அந்தவகையில் பொதுநிதி முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கும், ஊழலுக்கு எதிரான சட்டங்களை வலுப்படுத்துவதற்கும் இலங்கை அரசாங்கம் உடன்பட்டுள்ளது.

அத்தோடு இலங்கையில் நிலவும் ஊழல்மோசடிகள் மற்றும் நிர்வாகக்குறைபாடுகளைக் கண்டறிவதுடன், அவசியமான பரிந்துரைகளை வழங்கும் நோக்கிலான மிகவும் ஆழமான 'நிர்வாக ஆய்வொன்றை' சர்வதேச நாணய நிதியம் முன்னெடுத்துவருகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தினால் 'நிர்வாக ஆய்வு செயன்முறைக்கு' உட்படும் முதலாவது ஆசியநாடு இலங்கையாகும். இந்த முக்கிய மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதில் சம்பந்தப்பட்ட அனைத்துத்தரப்புக்களுடனும் சிவில் சமூக அமைப்புக்களுடனும் ஒன்றிணைந்து செயலாற்றுவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக உள்ளது என்று தெரிவித்தனர்.

அதேபோன்று இலங்கையின் பொருளாதாரக்கொள்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள், இலங்கை அதன் கடன்மறுசீரமைப்பு செயன்முறை உத்தியை எதிர்வரும் ஏப்ரல்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அத்தோடு இலங்கையில் உள்ளுராட்சிமன்றத்தேர்தல்களைப் பிற்போடுமாறு தாம் ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை என்று தெரிவித்துள்ள அவர்கள், நாட்டின் தேர்தல் செயன்முறையில் தாம் தலையிடப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30