WPL: டெல்ஹியிடம் பணிந்தது மும்பை

Published By: Digital Desk 5

21 Mar, 2023 | 12:53 PM
image

(நெவில் அன்தனி)

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (20) இரவு நடைபெற்ற மகளிர் பிறீமியர் லீக் போட்டியில் மிக மோசமாகத் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 9 விக்கெட்களால் தோல்வி அடைந்தது.

அங்குரார்ப்பண மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அடைந்த 2ஆவது தோல்வி இதுவாகும்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

மும்பை இண்டியன்ஸ் 7ஆவது ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 21 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறியது.

எனினும் அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோர் (23), பூஜா வஸ்த்ராக்கர் (26), இஸி வொங் (23), ஆமன்ஜோத் கோர் (19) ஆகிய நால்வரும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்று மும்பை இண்டியன்ஸ் அணி 100 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் பந்துவீச்சில் மாரிஸ்ஆன் கெப் 4 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷிக்கா பாண்டி 4 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜெஸ் ஜோன்சன் 4 ஓவர்களில் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

110 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணி அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 9 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 110 ஓட்டங்களைப் பெற்று 9 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

அணித் தலைவி மெக் லெனிங், ஷஃபாலி வர்மா ஆகியோர் 27 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஷஃபாலி வர்மா 15 பந்துகளில் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 33 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர் ஆட்டம் இழந்த பின்னர் 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த மெக் லெனிங், அலிஸ் கெப்சி ஆகிய இருவரும் அடுத்த 27 பந்துகளில் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை 9 ஓவர்கள் நிறைவில் உறுதிசெய்தனர்.

மெக் லெனிங் 22 பந்துகளில் 4 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 32 ஓட்டங்களுடனும் அலிஸ் கெப்சி 17 பந்துகளில் 5 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறி உட்பட 38 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

கடைசி லீக் போட்டிகள்

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் மும்பை இண்டியன்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி மும்பை டி.வை. பட்டில் மைதானத்திலும் WP வொரியர்ஸ் அணிக்கும் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி ப்றேபோர்ன் மைதானத்திலும் இன்று செவ்வாய்க்கிழமை (21) நடைபெறவுள்ளன. இந்த இரண்டு போட்டிகளுடன் மகளிர் பிறீமியர் லீக் இரண்டாம் கட்ட லீக் போட்டிகள் நிறைவுக்கு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்