பங்களாதேஷ்-மியன்மார் எல்லையில் உள்ள ‘நஃப்’ ஆற்றங்கரையில், ரொஹிங்யா குழந்தை ஒன்றின் உயிரற்ற உடல் ஒதுங்கியதைச் சித்தரிக்கும் படம் ஒன்று வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் புகைப்படமானது, கடந்த 2015ஆம் ஆண்டு, சிரியாவில் இருந்து அகதியாக வெளியேறி, கப்பல் விபத்தொன்றில் சிக்கி மத்திய தரைக் கடற்கரைப் பகுதியில் ஒதுங்கிய சிரியக் குழந்தையான அய்லான் குர்தியின் நினைவுகளை மீளத் தட்டி எழுப்பியுள்ளது.

நஃப் ஆற்றங்கரையில் ஒதுங்கியுள்ள ரொஹிங்யா 16 மாதங்களே நிரம்பிய ஆண் குழந்தையின் பெயர் மொகமட் ஷொஹாயெத். இந்தக் குழந்தையின் குடும்பத்தினர், மியன்மாரில் ஏற்பட்ட வன்முறையையடுத்து பங்களாதேஷுக்குத் தப்பிச் சென்றவர்களாவர்.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்துபோன ஷொஹாயெத்தின் தந்தை ஸஃபோர் ஆலம், இதற்குப் பதில் தான் செத்திருக்கலாம் என்றும், இனிமேல் தான் உயிருடன் இருந்து பயனேதும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தலைமுறை தலைமுறையாக ரொஹிங்யா இனத்தைச் சேர்ந்தவர்கள் மியன்மாரில் வாழ்ந்துவருகின்ற போதும், அவர்களை அந்நாட்டின் சிறுபான்மை இனத்தவராகக் கூட ஏற்றுக்கொள்ள மியன்மார் மறுத்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வன்முறைகளினால், ஆயிரக்கணக்கான ரொஹிங்யா இனத்தவர்கள் மியன்மாரில் இருந்து அண்டை நாடான பங்களாதேஷுக்குப் புகலிடம் தேடி இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இந்த முயற்சியின்போது பலர் தம் உயிரையும் இழந்துள்ளனர். அதில் மொகமட் ஷொஹாயெத் போலப் பல குழந்தைகளும் அடங்குவர்.