சித்தர்களால் எழுதப்பட்ட பாடலில் சோபகிருது ஆண்டு எப்படிப்பட்டது என்பதை அறியலாம். இந்த ஆண்டு ராஜாவாக புதன், சேனாதிபதியாக குரு, மந்திரியாக சுக்கிரன் இடம்பெற்றுள்ளனர்.
முக்கியமான சில காரியங்கள் அடிக்கடி தடைப்பட்டு, மேலும் மக்களுக்கு கஷ்டமான சூழ்நிலை உருவானாலும், ராஜா புதன் என்பதால் அறிவுபூர்வமான விடயங்களில் முன்னேற்றமும் புதிய கண்டுபிடிப்புகளும் இருக்கும்.
அண்டைய நாடுகளின் சகோதரத்துவம் மூலம் நாட்டின் முன்னேற்றம் உண்டாகும். கிழக்கு கடற்கரையில் அடிக்கடி நிலநடுக்கம் உண்டாகும்.
சூரியன், புதன், ராகு மேஷத்தில் அமர்ந்திருப்பதனால் புதிய நோய்கள் பறவையின் மூலம் பரவலாம். சற்று கவனமாக இருப்பது நல்லது.
சேனாதிபதி குரு என்பதால் தங்கம் விலை மிகவும் உயரும். இதனால் டொலரின் மதிப்பு இன்னும் அதிகரிக்கும். புதிய கரன்சி வெளியிட முடியாதளவு பணப்புழக்கம் குறையும். மற்ற உலோகங்களின் விலை சற்று குறையும்.
சில இடங்களில் மழையின் தாக்கம் குறைவாகவும் இருக்கும். ஆவணி, புரட்டாசியில் நல்ல மழையும், பிற மாதங்களில் இலேசான மழையும் இருக்கும்.
ஆன்மிகத்தில் அனைத்து மதத்தினரும் தங்களின் கடவுளை வணங்குவார்கள். (முன்னாள்) பதவியில் இருந்தவர்களுக்கு புதிய விசாரணை வரும். இதனால் அரசியலில் புதிய சகாப்தம் உண்டாகும். எளிதில் மக்கள் மத்தியில் அரசியல் புரட்சி உருவாகும்.
உணவுப் பண்டங்களின் விலை குறையும். பால்மா பொருட்களின் உற்பத்தி அதிகரித்து, பொருளாதார வளர்ச்சி கிடைக்கும்.
தேயிலை, தேங்காய் விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதியின் மூலம் அன்னிய செலாவணி அதிகரிக்கும்.
மீன் பிடிக்கும் உரிமைகள், சமரச முயற்சிகளால் சில முக்கிய ஆலோசனைகள் மூலம் அண்டைய நாடுகளுக்கிடையே ஒப்பந்தங்கள் ஊடாக தீர்வு உண்டாகும். வெளிநாட்டுக் கடன் மூலம் நாட்டின் சகஜ நிலை திரும்பி, வளம் பெருகும்.
இறை வழிபாடுகள் தொடர்ந்து செய்து வந்தால், நாடு இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீண்டு, நாட்டு மக்களுக்கு நன்மைகள் உண்டாகும்.
மேஷம்
வைராக்கியமும் மனவலிமையும் கொண்டு விளங்கும் மேஷ ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்கள் ராசிக்கு 22.04.2023 அன்று குரு பெயர்ச்சியாகி வருவதும், ஆவணி மாதத்தில் ராகு - கேது பெயர்ச்சியாவதும் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய வளர்ச்சியை உண்டாக்கும்.
தமிழ் புத்தாண்டு தொடக்கம் உங்கள் வாழ்க்கை அபரிமிதமான வளர்ச்சியை பெறும்.
இதுவரை விரைய குருவாக இருந்த குரு பகவான், ஜென்ம குருவாக அமர்ந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், களத்திர ஸ்தானத்தையும், முக்கியமாக பாக்கிய ஸ்தானத்தையும் பார்வையிடுவது நற்பலன்களை பெற்றுத் தரும்.
குரு உங்களின் ராசிக்கு பாக்கிய ஸ்தானாதிபதி, விரையாதிபதியாக இருக்கிறது. அத்தோடு தன ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்கு உரிய ராசி என்பதால் குரு பெயர்ச்சி நல்ல விசேஷமான பலன்களை தரும்.
தொழிலில் முன்னேற்றம், புதிய தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு அமையும். தந்தை வழி சொத்துப் பிரச்சினை தீரும். திருமண வாய்ப்புகளை பெறுவீர்கள்.
ஏற்கனவே, சனி உங்களுக்கு லாபஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பதும், அட்டம ஸ்தானத்தைப் பார்ப்பதும், உங்களின் அனைத்து வளர்ச்சிகளுக்கும் துணையாகவே இருக்கும்.
ஆயுள் விருத்தி பெறுவீர்கள். நோய் தீரும். உங்களின் ஜாதகத்தில் சனி நீசம் பெற்றிருந்தால் பெரிய வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. தவிர, மற்றவர்களுக்கு சிறப்பான நற்பலன்களை பெற்றுத் தரும்.
ராகு - கேது பெயர்ச்சி மூலம் வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பழைய கடன்களை தீர்ப்பதற்கான வாய்ப்பை பெறுவீர்கள். தொலைதூர செய்திகள் உங்களின் வாழ்க்கைக்கு பெரும் உதவியாக அமையும். வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். பொருளாதார மேன்மை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்: ஒரெஞ்ச், மஞ்சள், நீலம்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 8, 9.
வழிபாட்டு முறை: செவ்வாய்க்கிழமைகளில் சுப்ரமணியர், மாரியம்மன் வழிபாடு செய்து, விளக்கேற்றி வழிபட்டு வர, சகல காரியங்களும் கைகூடும்.
ரிஷபம்
விருப்பமான விடயங்களை தெளிவுபடுத்தும் ரிஷப ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் அமர்ந்து விரைய, சுக, களத்திர ஸ்தானத்தை பார்வையிடுவது உங்களின் தொழில் வளர்ச்சிக்கும், கூட்டுத் தொழிலுக்கும் மேன்மையாக அமையும்.
உங்களின் யோகாதிபதி சனி என்பதால் உங்களின் வாழ்வின் முன்னேற்றத்துக்கு கூடுதல் நற்பலனை பெற்றுத் தருவார். தொழிலாளர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள்.
முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு மூலம் அரசியல் தொடர்புகள் உண்டாகும். சிலருக்கு அரசியலில் புதிய வாய்ப்பு கிடைக்க, பயணம் செய்ய வேண்டிவரும். ஜாதகத்தில் சனி பலம் பெற்றிருப்பவர்கள் அதிர்ஷ்ட பொருட்கள், பணம் கிடைக்கப் பெறுவீர்கள். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும்.
இந்த ஆண்டு குரு விரையத்தில் வருவதால், விரைய செலவுகள் வரும் என்பதால் வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வது நல்லது.
வீடு கட்டும் பணி சிறப்பாக அமையும். தங்க நகை அடகு வைக்கப்படும்.
பெண்களுக்கு திருமண தடை நீங்கி, திருமணம் நடக்கும். உங்களின் ராசிநாதன் இருக்கும் இடத்தை பொறுத்து, உங்களின் பொருளாதார நிலை மேன்மையமையும்.
ஆன்மிக பயணம் மேற்கொண்டு, தொண்டு செய்யும் நல்ல வாய்ப்பை பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வெளிப்படையான வளர்ச்சி இருக்கும். கடினமான உழைப்பால் வளம் பெறுவீர்கள்.
பெண்களுக்கு விரும்பி எதிர்பார்த்த வாழ்க்கை அமையும். உங்களை மதித்து நடக்கும் உறவினர்களின் உறவை பலப்படுத்திக்கொள்வீர்கள்.
இந்த ஆண்டு ராகு - கேது பெயர்ச்சிக்குப் பின்பு வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் தொழில் வாய்ப்பை பெறுவீர்கள். முக்கிய தொழிலில் நல்ல வளர்ச்சியை பெறுவீர்கள். மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சிறு வியாபாரிகளுக்கு தொழில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரம் பெருகும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 8.
வழிபாட்டு முறை: செவ்வாய்க்கிழமைகளில் சுப்ரமணியரையும், வெள்ளிக்கிழமைகளில் அம்மனையும் வழிபட்டால் உங்களின் சகல காரியங்களும் அனுகூலமாக அமையும்.
மிதுனம்
திறமையும் வளமும் உறுதியும் கொண்டு விளங்கும் மிதுன ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சனி பகவான் அமர்ந்து லாப ஸ்தானத்தை பார்வையிடுவதும் குரு லாப ஸ்தானத்தில் அமர்வதும், ஆவணியில் ராகு - கேது பெயர்ச்சி மூலம் தொழில் வளர்ச்சியும் அமையப் பெறுவீர்கள்.
உங்களின் யோகாதிபதி சனி பகவான் உங்களின் அனைத்து வளர்ச்சியும் வளம்பெறச் செய்வார். தொழிலில் இருந்த பின்னடைவு மேன்மை பெறும்.
இதுவரை அட்டம சனியால் குடும்பத்திலும், தொழில் செய்யும் இடத்திலும் அடைந்த பல்வேறு பாதிப்புகளிலிருந்து விடுபட்டு, தொடர்ந்து முன்னேற்ற பாதையில் பவனி வருவீர்கள்.
கலைத்துறையினர் புதிய கலை நிகழ்ச்சிகளுக்கு ஒப்பந்தம் பெறுவீர்கள். புதிய இடத்துக்கும் பதவியுயர்வு பெற்று ஏற்றம் பெறுவீர்கள். உங்களின் முயற்சிக்கு நன்மை உண்டாகும்.
குரு, லாப ஸ்தானத்தில் வருவதால் உங்களின் செயல்களில் வேகமும் வெற்றியும் பொருளாதார மேன்மையும் அடையப் பெறுவீர்கள்.
வீடு கட்டுதல், காணி வாங்குதல், தங்க அணிகலன் வாங்குதல், வங்கி கடன் மூலம் தொழில் வளர்ச்சி பெறுதல் போன்ற நல்ல பலன்களை தொடர்ந்து பெறுவீர்கள்.
உங்கள் பிள்ளைகள் வேலைவாய்ப்பையும், உயர் கல்வி வளர்ச்சியையும் பெறுவார்கள். கடன் தீர்க்கும் வாய்ப்பை பெறுவீர்கள்.
ராகு - கேது பெயர்ச்சிக்கு பின்னர் வெளிநாட்டு வேலை, தொழில்வாய்ப்புகளை பெற்று வளமடைவீர்கள். முக்கிய தொழில் வாய்ப்புகள் உங்களை தேடிவரும். மன தைரியத்துடன் செயற்பட்டு தொழிலில் வளம் பெறுவீர்கள். வயதானவர்களுக்கு உடல்நலக் குறைபாடுகள் சரியாகும். மருத்துவத்தின் மூலம் உடல் நலன் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, நீலம், மஞ்சள்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 8.
வழிபாட்டு முறை: வெள்ளிக்கிழமைகளில் மகாலெட்சுமியை நெய் தீபமிட்டு வழிபடுவதும், சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாட்டில் ஈடுபடுவதும் உங்களை ஊக்கப்படுத்தும்.
கடகம்
விருப்பமான வாழ்வை தெளிவாய் அமைத்துக்கொள்ள விரும்பும் கடக ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும், பின்பு தன ஸ்தானத்தில் பார்வை அமைவதும் உங்களின் வாழ்வுக்கு சிறப்பான மாற்றத்தை உண்டாக்கும்.
அட்டம சனி காலம் என்பதால் பிணைக்கு கையெழுத்திடுவது, யாருக்கும் பொறுப்பேற்றுக் கொள்வது போன்றவற்றை தவிர்த்துவிடுவது நல்லது. குடும்பத்தில் சில சச்சரவுகள் வரலாம் என்பதால் அனைவரிடமும் பேச்சை குறைத்துக் கொண்டு அமைதியாக இருப்பதும் நன்மை தரும்.
தேவையில்லாத விடயங்களுக்கு கூட வழக்குகள், பிறர் செய்த குற்றத்துக்கு பழியேற்பது என பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம். அழைத்தாலும் செல்லாமல் தேவையான காரியங்களுக்கு மட்டும் சென்று வருவது நல்லது.
கடன் படுதல், பழைய கடன்களை அடைத்தல், புதிய செலவுகள் மூலம் தேவைகளை அதிகப்படுத்துதல் போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், சில காரியங்களில் ஈடுபடும் போது சற்று கவனமுடன் அவசரமின்றி இருப்பது நலம்.
புதிய திட்டங்களையும், தொழில் வாய்ப்புகளையும் சிறிது காலம் தள்ளிப்போடுவது சிறப்பு.
வெளிநாடு செல்வதற்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் பணம் கொடுக்கும் விடயத்தில் முழு உத்திரவாதம் இருந்தால் மட்டுமே செயற்பட வேண்டியது அவசியமாகும். எதிலும் கவனமாக இருங்கள்.
குரு பார்வை பெறும் காலம் வரை கவனமுடன் இருந்தால், உங்களுக்கு நன்மை உண்டாகும். உங்களின் யோகாதிபதியான செவ்வாய் இருக்குமிடத்தை வைத்து சில காரியங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
அட்டம சனி காலங்களில் தெய்வ வழிபாடு மூலம் எதையும் பிரச்சினையின்றி தடுக்கலாம். நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து செயற்பட்டால் நன்மை உண்டாகும்.
சனி கொடுத்தால் யார் தடுப்பார்? உங்களின் சுய ஜாதகத்தில் 6ஆம் இடம், 12ஆம் இடத்தில் சனி இருந்தால் அவர்களுக்கு யோக சனியாக அள்ளிக் கொடுப்பார்.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, ஒரெஞ்ச், ரோஸ்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9.
வழிபாட்டு முறை: சனிக்கிழமை ராகு காலத்தில் வைரவருக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு மிளகுத் திரி போட்டுவர, தீமை நீங்கி நன்மை கிட்டும். எறும்புப் புற்றில் கைப்பிடி அரிசி, சர்க்கரை போட்டுவர அட்டம சனியின் தாக்கம் குறையும்.
சிம்மம்
தைரியத்துடனும் மனவலிமையுடனும் எதையும் சாதித்துக் காட்டும் சிம்ம ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு சாதகமாக எல்லா கிரகங்களும் அமைவது, புத்தாண்டு தொடங்கியதும் குரு பார்வை பெறுவது, உங்களின் ராசியை குரு பார்வையிடுவது யாவும் சிறப்பான நற்பலன்களை பெற்றுத்தரும்.
எதையும் முன்கூட்டியே யோசித்து செயற்பட்டு திறமையுடன் காரியத்தில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.
கலைத்துறையினர் செல்வாக்கு பெற்று, மக்கள் மத்தியில் ரசிகர்களின் எண்ணிக்கையை பெருக்கிக்கொள்வீர்கள். வாராக்கடன் வசூலாகும். முன்னே விட்டுப் பின்னால் பேசியவர்கள் உங்களின் தயவை வேண்டி வருவார்கள். எதிலும் பிறரின் ஆலோசனைகளை ஏற்காமல் உங்களின் முடிவுக்கு செயற்படுவீர்கள். வங்கி மூலம் கடன் பெறுவதும், தொழிலில் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைவதும், உங்களின் தனித் திறமையை வளர்த்துக்கொள்ள பயன்படும்.
உங்களுக்கு கண்டக சனி நடப்பதால் கூட்டுத் தொழிலில் வரவு - செலவுகளை அடிக்கடி சரிபார்த்துக்கொள்வது நல்லது. பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதும், மிதமான வேகத்தில் வாகனத்தை இயக்கிக்கொள்வதும் நல்லது.
வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். உங்களின் வேலை சார்ந்த பயணம், தொழில் சார்ந்த பயணம் சிறப்பாக அமையும். எதையும் சுறுசுறுப்பாக செய்ய வேண்டுமென்று நினைப்பீர்கள். முக்கிய பணிகளில் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.
உங்களின் ராசிநாதன் சூரியன் இருக்குமிடத்தை வைத்து சில நேரம் நற்பலன்கள் வந்து சேரும். எதையும் அலட்சியம் செய்யாமல் உணர்ந்து செயற்படுவது உங்களின் எதிர்கால நலனுக்கு நல்லது.
அரசியல் ஈடுபாடுகளில் உங்களின் பலம் உயரும். கணித்தபடி சிலருக்கு புதிய பதவிகளும் செல்வாக்கும் உண்டாகும். கூட்டுத்தொழில் சிலருக்கு பாதிப்பை தரும். சுய ஜாதகத்தில் தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் இருப்பதை பொறுத்து நற்பலன் கிட்டும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, ஒரெஞ்ச், மஞ்சள்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.
வழிபாட்டு முறை: ஞாயிறு மாலை 4.30 மணி முதல்-6 மணி வரைக்குள் தவறாமல் வைரவர் வழிபாடு செய்து, மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு, தயிர் அன்னம் வைத்து தொடர்ந்து வேண்டிவர சனி தோஷம் நீங்கி நற்பலன் பெறுவீர்கள்.
கன்னி
காலத்துக்கு தகுந்தபடி செயற்பாடுகளை அமைத்துக்கொள்ளும் கன்னி ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு குரு பார்வையுடன் பிறப்பதும், சனி யோகசனியாக ஆறாம் இடத்தில் அமர்வதும் உங்களின் சகல காரியங்களுக்கும் நற்பலன்களை பெற்றுத்தரும்.
உங்கள் ராசியின் 5ஆம், 6ஆம் இடத்து அதிபதியான சனி பகவான் 6ஆம் இடத்தில் அமர்ந்து 8ஆம் இடத்தையும், 12ஆம் இடத்தையும் 3ஆம் இடத்தையும் பார்ப்பதால் மறைவு ஸ்தானம் பலப்படும்.
எதிரிகளின் தொல்லை நீங்கும். வீண் விரைய செலவுகள் குறையும். நீதிமன்ற வழக்குகள் சீக்கிரம் தீரும்.
பூர்வீக சொத்து சார்ந்த பிரச்சினைகளில் தீர்வு கிடைக்கும். உடல் நலன் தேறி வளம் பெற்று நலம் பெறுவீர்கள். தொலைதூர செய்திகளின் மூலம் நன்மை அடைவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வுகள் கிட்டும். எதையும் மிகைப்படுத்தாமல் நிறைவான பணிகளை தொடர்ந்து செய்வீர்கள்.
22.04.2023 அன்றைய தினம் முதல் குரு உங்களின் ராசிக்கு 8ஆம் இடத்தில் மறைவு பெறுவதால் பண தட்டுப்பாடு இருந்தாலும், சனி அருளால் அதனை சரி செய்துகொள்ளும் வாய்ப்பை பெறுவீர்கள்.
8ஆம் இடத்தில் அமர்ந்து 12ஆம் இடத்தை பார்ப்பதால் நற்பலன் உண்டாகும். புதிய வாகனம் வாங்குதல், வீடு பழுது நீங்கி சரி செய்தல், மருத்துவ பரிசோதனை மூலம் உடலை பராமரித்தல் போன்றவற்றுக்கான விரயமற்ற செலவுகள் உண்டாகும்.
கலைத்துறை சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மீன் மற்றும் கடல் சார்ந்த தொழிலில் வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். தாயாரின் உடல் நலனில் முன்னேற்றம் உண்டாகும். சரியான நேரத்தில், சில பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பாக செயற்பட்டு நன்மையடைவீர்கள். பொருளாதாரமும் சிறக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, நீலம், வெண்மை.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 8.
வழிபாட்டு முறை: வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு மூன்று நெய்தீபம் ஏற்றி, மஞ்சள் நிற ஆடை கட்டி, உங்களின் வேண்டுதல்களை எடுத்துரைக்க, உங்களின் சகல காரியங்களும் சிறப்பாகும்; எண்ணங்களும் நிறைவேறும்.
துலாம்
விவேகமாக எதையும் செயற்படுத்த முயற்சிக்கும் துலாம் ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு இதுவரை அர்தாஷ்டம சனியாக இருந்த சனி பகவான் இனி பஞ்சம ஸ்தானத்தில் அமர்வதும், தன ஸ்தானம் மற்றும், லாப ஸ்தானத்தை பார்வையிடுவதும் உங்களின் வளமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.
எதிலும் இருந்துவந்த எதிர்ப்பு நிலை மாறும். குடும்பத்தில் இதுவரை இருந்த தேவையற்ற சச்சரவுகள், விட்டுக்கொடுக்காமல் செயற்பட்டு வீம்பு செய்துவந்த நிலை மாறி, இனி யாவும் நன்மையாய் அமையும்.
உங்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் யோகாதிபதி சனி என்பதால் உங்களுக்கு அவர் பார்க்கும் இடம் சிறப்பான பலன்களை பெற்றுத் தரும். துணிச்சல், தைரியம் நிறைய இருக்கும்.
உங்களின் கடமையை சரியாக செய்து மேலதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவீர்கள். திட்டமிட்ட காரியம் சீக்கிரம் நடக்கும். இதுவரை உங்களை ஏமாற்றிக்கொண்டிருந்தவரை தெரிந்துகொண்டு சுதாரித்துக்கொள்வீர்கள்.
உங்களின் ராசியை 22.04.2023 முதல் குரு பார்வையிடுவது சிறப்பான பலனை பெற்றுத் தரும்.
கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி, வளமான சூழ்நிலையை உருவாக்கிக்கொள்வீர்கள். கலைத்துறையினர் சொல்ல முடியாத பல இன்னல்களிலிருந்து விடுபட்டு, திறமுடன் செயற்படுவீர்கள். திருமண காரியம் தடைப்பட்டவர்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கும்.
குறுகிய முதலீடுகள் மூலம் பெரிய லாபம் பெறும் வாய்ப்புகள் அமையும். பல நாள் ஆன்மிக பணி மீதிருந்த விருப்பம் நிறைவேறும்.
தடைகள் நீங்கி மீண்டும் செயற்பட தொடங்குவீர்கள். வீட்டில் நல்ல காரியம் நடந்தேறும். பெண் பிள்ளைகள் மனமுதிர்ச்சி அடைவார்கள். தொழிலில் முன்பை விட சிறப்பாக நல்ல வருமானம் கைகூடி வரும். பொது வாழ்வில் புதிய பொறுப்பு கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, நீலம், மஞ்சள்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 8.
வழிபாட்டு முறை: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்யுங்கள். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து, தீபம் ஏற்றி வேண்டிக்கொள்ளுங்கள். சகல காரியங்களும் சிறப்பாக அமையும்.
விருச்சிகம்
தடைகளை உடைத்து திறம்பட செயற்பட்டு விளங்கும் விருச்சிக ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு இதுவரை குரு பார்வை இருந்துவந்தது. இனிவரும் 22.04.2023 முதல் குரு தொழில் ஸ்தானத்தையும் தன ஸ்தானத்தையும் பார்வையிடுவது, தொழிலில் மேன்மை அடைந்து வருமானத்தை பெருக்கும்.
பெரிய கடன்களை அடைத்து சிறிய லாபம் காண்பீர்கள். உங்களின் விரைய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தேவையற்ற செலவுகள் குறையும்.
தொழில் ஸ்தானாதிபதி சூரியன் கோச்சாரப்படி செல்லும் இடத்தை பொறுத்து உங்களின் தொழிலில் நன்மையை பெறுவீர்கள்.
உங்களின் யோகாதிபதி சந்திரன் இருக்குமிடத்தை வைத்து பணம் புழங்கும். இந்த ஆண்டு கிரக பெயர்ச்சிகள் உங்களின் ராசிக்கு நல்லதல்ல. என்றாலும், உங்களின் ராசிநாதனின் பார்வை பெறுமிடம் சிறப்பாக அமையும்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து அர்த்தாஷ்டம சனி நடப்பதால் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். அடிக்கடி மருத்துவச் செலவுகள் வந்து, மனவருத்தம் தரும் என்பதால் உணவுப் பழக்கங்களில் கட்டுப்பாடு இருப்பது அவசியம்.
வீடு சம்பந்தமான சில சிக்கல்கள் வந்து வருத்தத்தை தரும் என்பதால் ஆவணங்களை சரிபார்த்துக்கொள்வதும் நல்லது. வெளிநாட்டுப் பயணம் செய்ய விசா எளிதாக கிடைக்கும். அதேவேளை பயணத்தில் சில சிரமங்கள் உண்டாகும்.
மிகுந்த பொறுமையும் கவனமும் இருந்தால் வரும் துன்பத்தை எளிமையாக்கிக்கொள்ளலாம். சுற்றத்தாரிடம் அதிகம் பேசுவதை தவிர்த்துவிட்டு, தேவைக்கு மட்டும் பயன்படுத்திக்கொண்டால் எல்லாம் சரியாக நடக்கும்.
எதையும் முன்கூட்டியே யோசித்து செயற்பட்டால் எல்லாவற்றையும் இன்பமாக மாற்றிக்கொள்ள முடியும். தேவையற்ற சில விடயங்களையும் செயற்பாடுகளையும் தவிர்த்துவிடுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறங்கள்: ஒரெஞ்ச், வெண்மை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 9.
வழிபாட்டு முறை: ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலப்பகுதியில் வைரவருக்கு வெண்பூசணியில் நல்லெண்ணெய் தீபமிட்டு வணங்கியும், வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு நெய் தீபமிட்டும் வாருங்கள்... நல்ல பலன்களை பெற்று வளம் பெறுவீர்கள்.
தனுசு
தன்னம்பிக்கையும் உறுதியும் கொண்டு செயற்படும் தனுசு ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு சனி உங்களின் ராசிக்கு யோகசனியாக இருக்கிறார். அத்தோடு குரு பார்வையும் பெறுவதால் நல்ல பலன்களை பெறுவீர்கள்.
இதுவரை ஏழரை சனி தாக்கத்தால் பல்வேறு துன்பங்களை அடைந்த உங்களின் நிலை இனி யோகசனியால் மனவலிமை பெற்று, எதிலும் துணிச்சலுடன் செயற்படுவதற்கான தைரியம் உண்டாகும்.
குடும்பத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகள், மனக்கசப்பு, தேவையற்ற சச்சரவுகளிலிருந்து நிரந்தரமாக விடுதலை பெறும் வாய்ப்பை பெறுவீர்கள்.
மனதில் எதை நினைத்தாலும், அதை செய்து முடித்துவிடுவீர்கள். காலத்தை கருத்தில் கொண்டு நீங்கள் அதற்கு தகுந்தபடி சூழ்நிலைகளை மாற்றியமைத்துக்கொள்வீர்கள்.
புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பது போல எத்தனை துன்பம் வந்தாலும், உங்களின் கொள்கையிலிருந்து பின்வாங்க மாட்டீர்கள். எதையும் நேர்மையாக செய்ய வேண்டுமென்று விரும்புவீர்கள். சனி பகவான் முயற்சி ஸ்தானத்தில் இருப்பதால் தனித் திறமையுடன் செயற்படும் குணம் உங்களுக்கு இருக்கும்.
குரு உங்களின் ராசிநாதன் என்பதால் குரு உங்கள் ராசியை பார்ப்பதும் நற்பலன்களை தருவதாக அமையும். உங்களின் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தையும் லாப ஸ்தானத்தையும் பார்ப்பதால் உங்களின் தொழில் சிறப்பாக அமையும்.
கடந்த காலத்தில் பட்ட கஷ்டங்களுக்கு விடியலை பெற்றுத் தரும். எதிலும் வெற்றியை பெறுவீர்கள்.
கலைத்துறையில் நல்ல முன்னேற்றமும், புதிய ஒப்பந்தங்களும் உண்டாகும். நிலையான தொழில் வாய்ப்புகள் அமைய பெறுவீர்கள். அரசியலில் சிறந்த ஆலோசகராகவும், கருத்துகளை தெளிவாக உணர்த்துவதில் வல்லவராகவும் திகழ்வீர்கள். பொருளாதாரத்தில் மேன்மை அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், ஒரெஞ்ச், சிவப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.
வழிபாட்டு முறை: வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் மாரியம்மன் வழிபாடு செய்து, விளக்கெண்ணெய் தீபமிட்டு வணங்கி, வேண்டிவர சகல காரியங்களும் நினைத்தபடி சிறப்பாக அமையும்.
மகரம்
திறமையும் பொறுமையும் கொண்டு விளங்கிடும் மகர ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு பாத சனியின் ஆதிக்கம் காணப்படுவதும், குரு 4ஆம் இடத்துக்கு பெயர்ச்சியாவதும், ஆண்டின் இறுதியில் ராகு - கேது பெயர்ச்சி யோக ராகுவாகிவிடுவதும் உங்களின் கடந்த கால சிரமங்களை விலக்கி நன்மை உண்டாக்கும்.
வெளியூர் பணியினை சிறப்பாக செய்து பாராட்டு பெறுவீர்கள். எதிலும் உங்களின் திறமையால் முன்னேற்றம் காண்பீர்கள்.
இதுவரை வெளிப்படுத்தாமல் இருந்த அனைத்து திறமைகளையும் வென்று, சிரமத்திலிருந்து மீண்டு வருவீர்கள். செய்துவரும் தொழிலில் இருந்த தொய்வு நிலை மேன்மையடைந்து வளர்ச்சியை பெறும்.
விளையாட்டுத்துறையில் முக்கியமான இடத்தை பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.
சாதாரண மக்கள் மத்தியில் அரசியல் தலைமையில் இருப்பவருக்கு நல்ல வரவேற்பு இருக்கும். குடும்பத்திலும் இருந்துவந்த சச்சரவு நீங்கி நன்மையையும், பொருளாதாரத்தில் வளமும் பெற்று வருவீர்கள்.
புதிய தொழிலொன்றை பெறும் முயற்சியை சில காலம் தள்ளிப்போடுவது நல்லது. உங்களின் திறமை மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டாகும். எதையும் எளிதில் புரிந்துகொள்ளுதல், எதற்கு பயமின்றி செயற்படுதல் மூலம் முன்னேற்றம் காண்பீர்கள்.
கூட்டுத் தொழிலில் சிலருக்கு நல்ல லாபம் கிடைக்கும். வரவுக்கு தகுந்த செலவுகளை திட்டமிட்டு கட்டுப்படுத்திக்கொள்வீர்கள்.
மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்புவீர்கள். அதற்கான நேரமாக இது அமையும் என்று நம்பிச் செயற்படுவீர்கள். உங்களின் லட்சிய பயணம் சிறக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். இளைய சகோதரரின் மூலம் உங்களின் வாழ்வு வளமடையும். தேவைகளுக்கேற்ப வருமானம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 8.
வழிபாட்டு முறை: சனிக்கிழமை வைரவருக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு, எள் அன்னம் வைத்து வேண்டிக்கொள்ள உங்களின் வேண்டுதல் விரைவில் நிறைவேறும். தீர்த்த யாத்திரை சென்று புனித நீராடினால், உங்களின் சகல தோஷங்களும் நீங்கும்.
கும்பம்
கிடைத்ததை வைத்து சிறக்க வாழ வேண்டும் என நினைக்கும் கும்ப ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசியில் ராசிநாதன் சனி பகவானும் தன ஸ்தானாதிபதி மூன்றாம் இடத்திலும், தன ஸ்தானத்தில் ஆண்டு இறுதியில் ராகுவும் பெயர்ச்சியடைவது உங்களின் அன்றாட பணிகளில் நிறைய மாற்றங்களை உண்டாக்கும்.
எதை செய்தாலும் நிதானமும், செயலில் விவேகமும் இருக்கும்படி செயற்படுவது நல்லது. இதுவரை விரைய சனியாக இருந்து பல கஷ்டங்களையும் நஷ்டங்களையும் கொடுத்துவந்த சனி பகவான், இனி தொழிலிலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றத்தை தருவார்.
திட்டமிட்ட காரியம் சிறப்பாக நடக்கும். முக்கியமான அரசியல் பிரமுகர்களுக்கு உயர்பதவிகளும் தனி அந்தஸ்தும் கிடைக்கப் பெறும்.
சொந்த இடத்தில் பணம் வந்து சேரும். யாரையும் நம்பி எந்த தொழிலும் செய்யாமல், முழுமையாய் உங்களின் மீது நம்பிக்கை வைத்து தொழில் செய்தால், அது எதுவாயினும், வெற்றி வந்து சேரும்.
முக்கியமான சில இரகசியங்களை பற்றி தெரிந்துகொள்ளும் சூழ்நிலை அமையும். ஒன்லைன் வர்த்தகம் ஒரு கட்டத்தில் நல்ல வளர்ச்சியையும், வேறொரு கட்டத்தில் வீழ்ச்சியையும் தரும்.
வர்த்தகத்தில் கவனமாக இருந்தால், சிறப்பாக அமையும். சிறு வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் தென்படும்.
சிலருக்கு சிறு கடன்கள் தீரும். வீடு கட்டுவதற்கான முயற்சிகளில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகளும் பாராட்டுகளும் அமையும். மாணவர்கள் கல்வியில் மேன்மை பெற்று, தேர்வில் வெற்றி பெறுவீர்கள். பெண்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கும். புதிய தொழில்வாய்ப்பு பெண்களுக்கு அமையும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 8.
வழிபாட்டு முறை: சனிக்கிழமைகளில் வைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து, விளக்கெண்ணெய் தீபமிட்டு வழிபட்டு வர சகல காரியங்களும் சாதகமாக அமையும். பொருளாதாரம் சிறக்கும்.
மீனம்
ஆர்வத்துடன் எதையும் செய்து வளம் பெறும் மீன ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசியில் விரைய சனி சஞ்சரிப்பதும், ஜென்ம குரு தன குருவாக வருவதும், இந்த ஆண்டின் மத்தியில் ராகு - கேது ஜென்ம ராகு களத்திர கேது அமைவதும் உங்களின் வாழ்க்கைக்கு நல்ல படிப்பினையை தரும்.
எதிலும் அகலக்கால் வைக்காமல் நிதானமாக இருக்க வேண்டும். தொழிலை சிறப்பாக அமைத்துக்கொள்வதும், எப்போதும் தன்னம்பிக்கையோடு செயற்படுவதும், உங்களின் வாழ்க்கையை வளமாக்கும்.
பிறரிடம் எந்த உத்திரவாதமும் கொடுக்காமல் எதையும் யோசித்துச் சொல்வதும், செயல்படுவதும் கூட நல்லது. பணியில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் சற்று நிதானமான போக்கை கடைப்பிடிப்பதும் அனுசரித்துச் செல்வதும் நல்லது.
கலைத்துறையினர் தங்களின் கட்டுப்பாட்டில் இருப்பர். அனைத்து வித காரியங்களையும் கவனித்துச் செய்வதுடன், பிறரின் பொறுப்பில் வரும்போது அதனை கண்காணித்து செயற்படுவதும் நல்லது.
விரையாதிபதியே விரைய ஸ்தானத்தில் அமர்வதால் சுப விரையமாக அதை அமைத்து வீடு கட்டுதல், காணி நிலம் வாங்குதல், பெண்ணுக்கு திருமணம் நடத்துதல் போன்ற காரியங்களில் ஈடுபடுவது மிக சிறந்ததாகும்.
வெளிநாட்டுக்கு செல்ல உகந்த நேரமும் கைகூடி வரும்.
குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தால் இன்னும் நற்பலன் தேடி வரும். ஆன்மிக தேடலில் இருப்பவர்களுக்கு நல்ல ஆசான்கள் அமைவர். நினைத்தபடி சிலருக்கு மகானின் ஆசி கிடைக்கும்.
புதிய அனுபவத்தையும் அறிவியல் விடயங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் பெறுவீர்கள். அரசியலில் ஒதுங்கி சில காலம் இருப்பது நல்லது. தேவையற்ற செலவுகள் வரும் என்பதால் கவனம்.
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், ஒரெஞ்ச், சிவப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.
வழிபாட்டு முறை: சனிக்கிழமை ஆஞ்சநேயரையும் வைரவரையும் வணங்கி, வெற்றிலை மாலை சாற்றி, மெழுகு தீபமேற்றி, வாழைப்பழம், எள் அன்னம் வைத்து வேண்டிக்கொள்ளுங்கள். சகல கஷ்டங்களும் நீங்கி சுபீட்சம் பெறுவீர்கள்.
(கணித்தவர்: ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM