கண்டி கலஹா பிரதேச பாடசாலையில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவியை கூட்டிச்சென்று நீர்கொழும்புப் பிரதேசத்திலுள்ள உறவினர் வீட்டில் வைத்து குடித்தனம் நடத்திய 21 வயதுடைய இளைஞர் ஒருவர் பேராதனைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இச்  சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கண்டி கலஹா பிரதேசத்தில் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றில் கூலித் தொழில் புரியும் மேற்படி இளைஞனுக்கும் குறித்த நிறுவனத்திற்று பக்கத்து வீட்டில் வசித்து வந்த 9 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் பாடசாலை மாணவி ஒருவருக்கும் கடந்த 4 மாதகாலமாக காதல் தொடர்பு இருந்து வந்துள்ளது.

இதனையடுத்து குறித்த இளைஞனின் கோரிக்கைக்கு விருப்பம் தெரிவித்த மாணவி சுயவிருப்பின் பேரில் தனது ஆடைகளையும் வீட்டில் இருந்து எடுத்துக்கொண்டு இளைஞனுடன் தலைமறைவாகியுள்ளார். மாணவியைக் காணாததால் குறித்த மாணவியின் தந்தை பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து சிசிரிவி கமெராக்களின் உதவியுடன் மேற்கொண்ட விசாரணைகளில் இருவரும் பேராதனை சந்திக்கு வந்து பஸ்வண்டியில் ஏறிச் சென்றமை குறித்த சிசிரிவியில் பதிவாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட மேலதிக விசாரணைகளையடுத்து இருவரும் நீர்கொழுமபுப் பகுதியில் வைத்து குடும்பம் நடத்துகையில் அவர்களை பேராதனைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

பேராதனைப் பொலிசில் மாணவியின் தந்தை கடந்த 29.12.2016 செய்த முறைப்பாட்டை அடுத்து பேராதனைப் பொலிசார் சுமார் ஒருவாரகாலத்தின் பின் சந்தேக நபர்களை கைதுசெய்ய முடிந்ததாகப் பொலிசார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் கண்டி நீதவான் முன் ஆஜர்செய்யப்பட்ட போது இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறும் மாணவியை வைத்திய பரிசோதனைக்குட்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.