பெண் ஒருவரைத் தாக்கியதாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து இராணுவ வீரர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி அஸ்கிரிய பிரதேசத்தில் பெண் ஒருவர் தாக்கப்படுவதாக அவசர பொலிஸ் தொலைபேசிச் சேவைக்குக்கிடைத்த ஒரு முறைப்பாட்டை அடுத்து அங்கு சென்ற பொலிசார் சந்தேக நபரைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர். 

இந்நிலையில் குறித்த பெண் மீது தாக்குதலை மேற்கொண்டவர் கண்டி பல்லேகலை இராணுவ முகாமைச்சேர்ந்த 27 வயதுடைய இராணுவ வீரர் ஒருவர் எனவும் அவர் தனது மாமி முறையான ஒரு பெண்ணையே தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிசார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின்படி குடும்பத்தகராரே தாக்குதலுக்கு அடிப்படை காரணமென கண்டிப் பொலிசார் தெரிவித்தனர். சந்தேக நபரை கண்டி நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.