குளியாப்பிட்டியவில் நேற்று முன்தினம் திறந்துவைக்கப்பட்ட கார் உற்பத்தித் தொழிற்சாலை குறித்து தாம் சந்தேகிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

26.5 மில்லியன் டொலர் முதலீட்டில் இந்தத் தொழிற்சாலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

முதலீட்டுச் சபையின் முயற்சியால் கடந்த வருடம் இந்தத் தொழிற்சாலைக்கான ஒப்பந்தம் கைச்சாத்தானது. ஜேர்மனியின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபொக்ஸ்வேகனின் இந்தத் தொழிற்சாலையில், ஜேர்மனியில் இருந்து தருவிக்கப்படும் கார் பாகங்கள் பொருத்தப்பட்டு விற்பனைக்கு விடப்படவுள்ளன.

எவ்வாறெனினும், இந்த உற்பத்திச்சாலையில் ஃபொக்ஸ்வேகன் கார்களுக்குப் பதிலாக தரம் குறைந்த வாகனங்களே உற்பத்தி செய்யப்படப்போகின்றன என்று தாம் நம்புவதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.