நாட்டின் பொருளாதார நெருக்கடியால் பெண்தலைமை குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

Published By: Nanthini

18 Mar, 2023 | 04:53 PM
image

(அருள் கார்க்கி)

“நான் கணவரை பிரிந்து 9 வருடங்கள் ஆகிறது. இக்காலப்பகுதியில் எனது குடும்பத்தை காப்பாற்ற சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வந்துள்ளேன். கொரோனா பரவல், அதேபோல் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியால் நான் கடுமையான இன்னல்களை சந்தித்தேன்” என கூறுகிறார், யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் உள்ள துணைவி பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதா ஐங்கரன் தயாரஞ்சனி.

தயாரஞ்சனி பனை ஓலையைக் கொண்டு வீட்டுப் பாவனை பொருட்களை தயாரித்து, விற்பனை செய்துவரும் சுயதொழில் முயற்சியாளர் ஆவார். அத்துடன் அவருக்கு ஒரு சிறிய வயல்நிலமும் உள்ளது. 

தையல் வேலையோடு பனையை கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்வதை கடந்த 15 வருடங்களாக மேற்கொண்டு வருகிறார். 

இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அவர்களின் பாடசாலை செலவீனங்களை சமாளிப்பதே தயாரஞ்சனிக்கு பாரிய சவாலாக உள்ளது.

மேலும், பாடசாலை செலவுகள், உணவு, காகிதாதிகள் என்பவற்றை கொள்வனவு செய்வதற்கும் இந்த குடும்பம் கடும் பிரயத்தனப்படுகிறது. 

"பனை உற்பத்தியால் மாதம் 5000 ரூபாய் வரை மாத்திரமே உழைக்க முடியும். ஓடர்கள் வந்தால் மட்டுமே வருமானத்தை நிச்சயப்படுத்தி செய்ய முடியும். இல்லாவிட்டால், அவற்றுக்கான சந்தைவாய்ப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும். 

முன்னர் 20 ரூபாய்க்கு கொள்வனவு செய்த பனை குருத்தொன்று இன்றைக்கு 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது" என அவர் கூறுகிறார். 

அத்தோடு இந்த தொகைக்கு கொள்வனவு செய்து தமது உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாது என்பதே அவருடைய ஆதங்கமாக உள்ளது.

தயாரஞ்சனியின் தந்தையும், மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவரின் சகோதரரும் அவருடனேயே இருக்கின்றனர். அவர்களின் செலவுகளையும் தயாரஞ்சனியே ஏற்றுக்கொண்டிருக்கிறார். 

எனவே, முழு குடும்பத்தையும் தாங்கிப்பிடிக்கும் பொறுப்பு இந்த பெண்மணிக்கு உள்ளது. 

இவரின் மூத்த மகள் பாடசாலை கல்வியை பூர்த்தி செய்துவிட்டு, ஒரு செருப்பு தயாரிப்பு தொழிற்சாலையில் எழுதுவினைஞராக பணியாற்றுகிறார். 

இந்த ஒரு குடும்பத்தைப் போன்று அதிக அளவிலான பெண்தலைமை குடும்பங்கள் வடக்கில் அன்றாடம் தமது வாழ்வாதாரத்தை பெற்றுக்கொள்ளவே பெரும் போராட்டங்களை சந்தித்து வருகின்றனர். 

தொழில்வாய்ப்பு குறைந்துவிட்டதால் கிடைத்த தொழிலில் போதிய வருமானமின்றி, இந்த நெருக்கடி நிலையை சமாளித்து வருகின்றனர்.

வட்டுக்கோட்டையின் பிள்ளையாரடியில் உள்ள சங்கரத்தையைச் சேர்ந்த 47 வயதுடைய உமாகாந்தன் சரஸ்வதி கணவரை பிரிந்து கடந்த 7 வருடங்களாக வாழ்ந்து வருகின்றார். 

மூன்று பிள்ளைகளின் தாயான இவர், சிரட்டையைக் கொண்டு வீட்டுப் பாவனை பொருட்களை செய்து, விற்பனையில் ஈடுபட்டு, தனது ஜீவனோபாயத்தை நடத்துகிறார்.

இவரின் மூத்த பிள்ளை சாதாரண தரத்தில் கல்வி கற்பதோடு, ஏனைய இருவரும் தரம் 10 மற்றும் 7இல் கல்வி கற்கின்றனர். 

பிள்ளைகளின் பாடசாலை செலவீனங்கள் கடுமையாக இந்த குடும்பத்தை பாதித்திருக்கிறது என்பதை அவருடனான உரையாடலின் மூலம் அறிய முடிந்தது. 

இக்குடும்பத்தின் மொத்த வருமானமே 15 ஆயிரம் ரூபாய் வரைதான் காணப்படுகிறது.

இதில் வீட்டு வாடகை, உணவுத் தேவைகள், கல்விச் செலவுகள் என அனைத்தையும்  சரஸ்வதி சமாளித்தாக வேண்டும். 

இவரால் உற்பத்தி செய்யப்படும் சிரட்டை அகப்பையொன்று 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும், அதன் விலையை விட அதை செய்வதற்கான உற்பத்திச் செலவு அதிகமாக உள்ளது. 

ஒரு கிலோ சிரட்டை 35 ரூபாய்க்கும், பிடி தயாரிக்கும் கம்புகள் 1800 ரூபாய்க்கும் இவர் கொள்வனவு செய்கிறார். கடினப்பட்டு பொருட்களை உற்பத்தி செய்தாலும், அப்பொருட்களுக்கான போதிய சந்தைவாய்ப்பு இல்லாத காரணத்தால் பொருட்களை விற்பனை செய்வதில் கடினமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சரஸ்வதி கூறுகிறார். 

முன்னர் 30 ரூபாய்க்கு விற்பனை செய்த அகப்பையொன்று தற்போது 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டாலும், போதிய வருமானத்தை பார்க்க முடியாதுள்ளது. இதுவே  இவர் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவாலாகிறது.

மேலும், அறக்கட்டளை அமைப்பொன்று இவரது கோழி வளர்ப்புக்கு உதவி செய்துள்ளது. அது துணை வருமானத்தை ஈட்டித் தருவதாக இருந்தாலும், கோழித் தீவனம் மற்றும் பராமரிப்புக்கான செலவீனங்கள் என்பன அதிகரித்துள்ளமையால் அந்த தொழிலும்  சிரமத்தின் மத்தியிலேயே காணப்படுகிறது என கூறுகிறார். 

அத்தோடு இத்தொழிலை கொண்டு நடத்துவதற்கு மாதர் சங்கம் சிறியளவான கடன் உதவிகளை வழங்குவதன் மூலம் தம்மால் ஓரளவு சமாளிக்க முடிகிறது என்கிறார், சரஸ்வதி. 

வட மாகாணத்தில் அனேகமான பெண்தலைமை குடும்பங்களுக்கு இவ்வாறு சில தொண்டு அமைப்புகளின் உதவிகள் கிடைத்தாலும், சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள் காரணமாக சுயதொழில் முயற்சியாளர்கள் பாரிய நெருக்கடிகளை சந்திக்கின்றனர்.

இதேபோல் 40 வயதுடைய தேவன்குமாரி கணவரை பிரிந்து தனது தாய் மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார்.

அவர் சித்தங்கேணி பிரதேசத்தில் உள்ள செருப்பு தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்து தனது வாழ்க்கையைக் கொண்டு நடத்தி வருகிறார். 

இவரைப் போன்ற பலர் இத்தொழிற்சாலையில் வேலை செய்கின்றனர். நாளொன்றுக்கு 500 ரூபாய் என நாட்சம்பளம் பெறும் இவர்களால் முழு குடும்பத்தின் செலவுகளையும் சமாளிப்பது மிகுந்த சிரமமாக உள்ளது என தேவன்குமாரி தெரிவிக்கிறார்.

செருப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் ரப்பர் சீட் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலையேற்றம், விற்பனை வீழ்ச்சி, சந்தை வாய்ப்பு இல்லாமை போன்ற காரணிகளால் அத்தொழிற்துறையில் இவர்களுக்கு போதிய வருமானத்தை உழைக்க முடியாதுள்ளது. 

பொருளாதார நெருக்கடிக்கு முன்னர் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட இறப்பர் பாதணியொன்று இன்றைக்கு 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

எனினும், விற்பனையில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குறித்த தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்கள் தெரிவிக்கின்றனர். இது அவர்களை பொருளாதார ரீதியில் நேரடியாக பாதித்துள்ளது.

அதேபோல் யாழ்ப்பாணம், பாசையூர் பிரதேசத்தில் கடற்றொழில் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள அநேகமான குடும்பங்களில் பெண்தலைமை குடும்பங்கள் காணப்படுகின்றன. 

பாசையூரில் மட்டும் கணவரை இழந்த பெண்களை தலைமையாக கொண்டு 87 குடும்பங்கள் உள்ளதாக பாசையூர் கடற்றொழில் சங்கத்தின் தலைவர் பரந்தாமன் மதன் தெரிவிக்கிறார். 

இது இப்பிரதேசத்தில் ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளது. முக்கியமாக, அவர்களுக்கான நிரந்தர தொழில்வாய்ப்பொன்று இல்லாத காரணத்தினால் அப்பெண்கள் நாளாந்த கூலித்தொழில்களுக்கு செல்கின்றனர். 

யுத்தத்தினால் கணவரை இழந்த பெண்களும், கணவரை பிரிந்து தனியாக பிள்ளைகளுடன் வாழும் பெண்களும் இதில் அடங்குகின்றனர். பாசையூர் கடற்றொழில் சங்கம் தனது சேவைகளில் இவ்வாறான பெண்களுக்கும் பெண்தலைமை குடும்பங்களுக்கும் முன்னுரிமை வழங்குவதாக மதன் கூறுகிறார்.

அத்தோடு அவர் “பொதுவாகவே பாசையூர் பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களே அதிகம். அதிலும் பெண்தலைமை குடும்பங்களுக்கு நாம் எமது சேவைகளை வழங்கும்போது முன்னுரிமை வழங்குவோம். 

பெரும்பாலான பெண்கள் வீட்டு வேலைகளுக்காக நகரத்தின் பல இடங்களுக்கு செல்கின்றனர். அதேபோல சிறியளவான தற்காலிக தொழில்களுக்கும் செல்கின்றனர். அவர்களுக்கு சங்கத்தால் நன்கொடைகள் வழங்குகிறோம். 

சங்கம் முன்னெடுக்கும் திட்டங்களில்  அவ்வாறான பெண்களுக்கு கொடுப்பனவுகளுடன் வேலைகளையும் வழங்குகிறோம்” என்று கூறுகிறார்.

அதேவேளை அந்த குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தல், கல்விக்கு உதவி செய்தல், உலர் உணவுப் பொருட்களை வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்தோடு, தேவாலயத்துடன் இணைந்து பாசையூர் பிரதேசத்தில் பெண்தலைமை குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், சைக்கிள்கள், உலர் உணவுப் பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

எனினும், அனைத்து காலப்பகுதியிலும் இது சாத்தியமற்றது என்பதோடு பொருளாதார நெருக்கடியால் இவர்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் மதன் தெரிவிக்கிறார்.

மறுபுறம் நாடு எதிர்கொண்டுள்ள இப்பொருளாதார நெருக்கடியினால் பல தொழிற்துறைகள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் படகு கட்டும் தொழில்துறை. 

யாழ்ப்பாணம், பாசையூர் பிரதேசத்தில் 'அகஸ்மின்' எனும் படகு கட்டும் நிறுவனத்தின்  உரிமையாளர் அந்தோனிப்பிள்ளை தேவகுமாருடன் உரையாடும்போது இங்கு தொழில் புரியும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை அறியமுடிந்தது.

இது தொடர்பில் அவர் கூறுகையில், 

எமது நிறுவனத்தில் முன்னர் 30 பெண்கள் வரை தொழில் புரிந்தனர். இன்று 8 பேர் கூட இல்லை. அவர்களில் 5 பேர் பெண்தலைமை குடும்பங்களாக அறியப்பட்டவர்கள் ஆவர். 

தொழில் வழங்குவதில் அவர்களுக்கு எமது நிறுவனத்தில் முன்னுரிமை வழங்குகிறோம். இத்தொழில் பாரிய முதலீட்டைக் கொண்டு நடத்தப்படுகிறது. ஆனால், இலாபம் மிகவும் குறைவு. 

பொருளாதார நெருக்கடியினால் படகு கட்டும் மூலப்பொருளான பைபர் தட்டுக்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளன. இதனால் இப்பெண்கள் தமது தொழில்களை இழக்கும் நிலையும் தோன்றியுள்ளது. 

எனவே, இத்தொழில்துறையை எதிர்காலத்தில் கைவிடவேண்டிய நிலைமை உருவாகலாம். நாமும் எதிர்காலத்தில் வேறு தொழில்களை முன்னெடுப்பதை பற்றி ஆராய்ந்து வருகிறோம் என்கிறார்.

இவ்விடயங்கள் தொடர்பாக யாழ்ப்பாணம் மகளிர் அபிவிருத்தி சங்கத்தின் பணிப்பாளர் சரோஜா சிவச்சந்திரனை அணுகி வினவியபோது, அவர் இவ்வாறு தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார். 

“நாம் எமது சங்கத்தினூடாக முன்னர் வடக்கு மற்றும் கிழக்கில் 8 மாவட்டங்களில் பணியாற்றினோம். ஆனால், தற்போது வட மாகாணத்தில் மூன்று மாவட்டங்களில் எமது சேவைகளை கொண்டு செல்கின்றோம். 

Asia Foundation அமைப்பின் ஊடாக எமக்கான உதவிகள் வழங்கப்படுகின்றன. நாங்கள் பெண்தலைமை குடும்பங்கள் தொடர்பான வேலைத்திட்டங்களையும் செயற்பாடுகளையுமே அதிகமாக முன்னெடுத்து வருகிறோம். 

சமீபகால பொருளாதார நெருக்கடியால் வடக்கில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமானவை பெண்தலைமை குடும்பங்களே ஆகும்.

இவர்கள் வாழ்வாதாரம், காணிப் பிரச்சினை, கல்வி, போசாக்கு போன்ற துறைகளில் பாரிய சிக்கல்களை இந்த காலத்தில் எதிர்நோக்கி வருகின்றனர். 

எமது சங்கத்தின் மூன்று சட்டத்தரணிகளூடாக இவர்களுக்கான உதவிகளை நாம் வழங்கி வருகிறோம். 

பெண்தலைமை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உதவிகள், புலமைப் பரிசில்கள் மற்றும் போசாக்கு குறைபாடுடையவர்களுக்கான உதவிகள் என்பனவற்றை எமது சங்கம் வழங்குகின்றது” என்கிறார்.

மேலும், “பொருளாதார நெருக்கடியால் அதிகமான பெண்கள் வீட்டு வன்முறையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவற்றுக்கெல்லாம் நிலைபேறான தீர்வுகளை நோக்கி நாம் நகரவேண்டிய தேவையுள்ளது. அந்த வகையில் வட மாகாண பெண்களுக்கு சிறுவர் பராமரிப்பு தொடர்பான Child Rights Course பாடநெறியொன்றை வழங்கி வருகின்றோம். 

மேலும், மகளிர் விவகார அமைச்சின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள 'Women is Action Plan' ஒன்றிலும் வட மாகாண பெண்களின் பிரச்சினைகளை உள்ளடக்கியுள்ளோம். 

பல சர்வதேச மாநாடுகளிலும் பெண்களின் இத்தகைய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பாக எமது அறிக்கைகளை முன்வைத்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

இவ்விடயங்களுக்குட்பட்டு வட மாகாண பெண்தலைமைக் குடும்பங்களுக்கான பொருளாதார நெருக்கடிகளை மையப்படுத்தி ஒரு தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. ஒட்டுமொத்த மாகாணம் தழுவிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதும் பிராந்திய ரீதியாக காணப்படும் வளங்களை பயன்படுத்தி, அவர்களின் நாளாந்த வாழ்வாதாரத்தை ஸ்திரப்படுத்தவேண்டிய தேவையும் காணப்படுகிறது.

இதே நிலைமை கிழக்கு மாகாணத்திலும் பெண்தலைமை குடும்பங்களில் காணப்படுவதை அவதானிக்க முடிந்தது.  

செங்கலடி, ஏறாவூர் பிரதேசங்களைச் சேர்ந்த பனையோலை உற்பத்திகளில் தங்கியிருக்கும் பெண்தலைமைக் குடும்பங்களும் இதேபோன்ற  சவால்களையே பொருளாதார நெருக்கடியால் எதிர்கொள்கின்றனர்.

செங்கலடி பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய விஜயநிலாவின் குடும்பமானது கடந்த 9 வருடங்களாக பனையோலை உற்பத்திகளால் தமது ஜீவனோபாயத்தை கொண்டு நடத்துகிறது. பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து இவர்களின் மூலப்பொருள் கொள்வனவு, சந்தைவாய்ப்பு என்பன கேள்விக்குறியாகியுள்ளன.

இவரைப் போலவே 58 வயதுடைய மீரா முகைதீன் ரஸமத்தும்மாவும் பாய், கூடை போன்ற பனை உற்பத்திகளால் தமது ஜீவனோபாயத்தை அமைத்துக்கொண்டுள்ளார்.

கணவரை பிரிந்த இவர் வீட்டு வசதி, மகளின் கல்விச் செலவுகள், உணவு மற்றும் மருத்துவ செலவீனங்களை சமாளிப்பதற்கு அன்றாடம் மிகவும் சிரமப்படுகின்றார். 

பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு முன்னர் இவர்களின் வாழ்க்கை ஓரளவுக்கு சுமுகமாக இருந்ததாக அவர் கூறுகின்றார்.

ஏறாவூர் சிங்கள குடியேற்றத்தைச் சேர்ந்த பி.ஜி.ரன்தெனிய மற்றும் இந்திகா சாமலி போன்றோரும் பனை உற்பத்திப் பொருட்களைக் கொண்டு தமது அன்றாட வருமானத்தை அமைத்துக்கொண்டோர் ஆவர்.

இவர்களும் மூலப்பொருள் விலையேற்றம், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றால் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது. 

மேலும், இவர்களது உற்பத்திகளுக்கான நிலையான சந்தைவாய்ப்பின்மையும் பாரியதொரு பிரச்சினையாகும்.

ஏறாவூர், கலந்தர் வீதியைச் சேர்ந்த ஆயிஸா உம்மாவின் கணவர் கால்களை இழந்தவராவார். ஆயிஸா உம்மா, தனது பனை ஓலை உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம்தான் அவர்களின் குடும்பம் தமது ஜீவனோபாயத்தை கொண்டு நடத்துகிறது. 

இவரைப் போன்றே 38 வயதுடைய நஸீரா சிறிய மரக்கறி கடையொன்றை நடத்தி வருபவர் ஆவார். 

பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மரக்கறிகளின் விலையேற்றம், போக்குவரத்து செலவு என்பன சடுதியாக அதிகரித்துள்ளதன் காரணமாக இவர்களின் தொழிலும் பின்னடைவை சந்தித்துள்ளது.

மேலும், 4 பேரைக் கொண்ட குடும்பத்தை 63 வயதுடைய பரிபாத்திமா, இடியப்பம் விற்று காப்பாற்றி வருவதையும் பார்த்திருந்தோம். 

இவர்களின் தொழில்துறை குடிசைக் கைத்தொழிலாக இருப்பினும், இவர்களை பொருளாதார ரீதியாக பாதுகாக்கக்கூடிய திட்டம் எதுவும் இல்லாமை ஒரு குறைபாடாக உணரப்பட்டது. 

கணவரை இழந்த பெண்களுக்கான விசேட திட்டங்களை பிரதேச சபைகள் நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இப்பிரதேசத்தைச் சேர்ந்த அனைவரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதே நிலைமைதான் மாத்தறை மாவட்டத்திலும் காணப்படுகிறது. மாத்தறை மாவட்ட பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான ராமசாமி ரஞ்சனி கணவரை இழந்து வாழ்ந்து வருகின்றார். 

சாரதியான அவரின் கணவர் 2021ஆம் ஆண்டு மரணித்ததன் பின்னர், தனது தாய் மற்றும் பிள்ளைகளின் பொறுப்பை தானே தனித்து சுமக்கவேண்டிய நிலை ரஞ்சனிக்கு ஏற்பட்டுள்ளது. 

உயர்தரம் கற்கும் மகளின் கல்விக்காகவே அவர் பாரிய தொகையினை செலவிட வேண்டியுள்ளது. வயதான அவரது தாயும் நகரத்திலுள்ள வீடொன்றிலேயே பணியாற்றுகின்றார். ரஞ்சனிக்கும் நிரந்தர தொழிலொன்று இல்லை. 

அருகில் உள்ள கிராமங்களுக்கு கூலி வேலைக்குச் சென்றுதான் குடும்பத்தைக் காப்பாற்றுகிறார். அவ்வாறு சென்றால் ஒரு நாளைக்கு 600 ரூபாய் மட்டுமே கிடைப்பதாக ரஞ்சனி கூறுகின்றார். 

பிள்ளைகளின் கல்விச் செலவுகள் அதிகரித்ததன் காரணமாக பாரிய நெருக்கடியை இக்குடும்பம் எதிர்கொண்டுள்ளது. அதேபோல் இவர்களின் ஊரில் சுயதொழில் முயற்சிகளுக்கான எந்த வசதியும் இல்லாதிருப்பது கூட ஒரு குறைபாடாக உள்ளது.

அதேபோல் காலி மாவட்டத்தின் தல்கஸ்வெல்ல தோட்டத்தில் தேயிலை பறிப்பவராக பணியாற்றும் சோமரத்த தமயந்தி மூன்று பிள்ளைகளின் தாய் ஆவார். 

பூர்வீக காணி பிரச்சினையால் தனது கணவரைப் பிரிந்து வாழும் இவர், தனது மூன்று பிள்ளைகளுடனும் வாடகை வீடொன்றிலேயே கடந்த 15 வருடங்களாக வாழ்ந்து வருகின்றார்.

பொருளாதார நெருக்கடியால் கடன் சுமை அதிகரித்துள்ளதாக கூறும் தமயந்தி, பாடசாலைக்கான போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதால் தமது பிள்ளைகள் இடைவிலகும் நிலைமை தோன்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  

அமைப்பு ரீதியாக இவ்வாறான பெண்தலைமை குடும்பங்களை பாதுகாப்பதற்கான எவ்வித கட்டமைப்புகளும் இல்லாமை ஒரு பின்னடைவாகும்.

இதே பிரச்சினைகளை அன்றாடம் சந்திக்கும் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பெண்தலைமைக் குடும்பங்களையும் அணுகி, நாம் அவர்களின் நிலைமை தொடர்பாக கேட்டறிந்தோம். 

அவர்களில் லோகலெட்சுமி என்ற கணவரை இழந்த பெண்மணி, தனது குடும்பச் சுமையை தனியாளாக சுமக்கின்றார். நிரந்தர தொழிலற்ற அவர் அருகிலுள்ள பெரும்பான்மையின கிராமங்களுக்குச் சென்று கூலி வேலை செய்தே தனது வாழ்க்கையை கொண்டு நடத்துகிறார். 

மாத வருமானம் ஈட்டக்கூடிய தொழிலொன்று இல்லாமல் வாழ்வது இவர்களுக்கு ஒரு பாரிய சவாலாகும்.

இறக்குவானை பிரதேசத்தை சேர்ந்த எஸ். புவனேஸ்வரியின் கணவரும் நிரந்தர தொழில் இல்லாத காரணத்தினால் கூலி வேலைகளுக்குச் செல்வதாக கூறுகின்றார். 

கல்விச் செலவுகள் அதிகரித்திருப்பதே இவர்களின் பாரிய நெருக்கடியாக இருக்கிறது. 

இவர்களைப் போலவே கூலி வேலை செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றும் எம்.ரேணுகாவும் தனது 5 பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை தனித்து சுமக்கும் தாயாக விளங்குகிறார். 

எல்லோருக்கும் இருப்பது போல தனக்கும் வாழ்க்கைச் செலவுகள் அதிகமாகியுள்ள காரணத்தினால் தமது பிள்ளைகள் கடந்த ஒரு வருட காலமாக பாடசாலைக்குச் செல்லவேயில்லை என்று இவர் கூறியது எமக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இரத்தினபுரி, ஹபுகஸ்தென்ன பிரதேசத்தில் காணப்படும் இவ்வாறான நிலைமைகள் தொடர்பாக சமூக செயற்பாட்டாளரான சிதம்பரம் நிரஞ்சன் கருத்து தெரிவிக்கும்போது,

“இப்பிரதேசமானது அதிகமான வறிய குடும்பங்கள் வாழும் ஒரு தோட்டமாகும். இவர்களுக்கு இங்கு சுயதொழில் வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. இதனால் போக்குவரத்துக்காக அதிகம் செலவு செய்து, இரத்தினபுரி, அவிசாவளை ஆகிய நகரங்களுக்கு அன்றாடம் தொழில் செய்ய செல்கின்றனர். 

எமது ஊரிலும் அரசாங்கம் சுயதொழில் திட்டங்களை முன்னெடுத்தால், இவ்வாறான குடும்பங்களுக்கு மிகப் பெரும் உதவியாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் உரிய முறையில் பெண்தலைமை குடும்பங்களைச் சென்றடையாமை, அந்த குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக மிக சீக்கிரத்திலேயே  பாதிக்கப்படுவதற்கு காரணமாக இருக்கின்றது என்ற கருத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.

சுதந்திர தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சிரிநாத் பெரேரா கூறுகையில், 

“எமது தொழிற்சங்கம் மூலம் தேசிய ரீதியாக இவ்வாறான பெண்தலைமை குடும்பங்களின் பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்தி வருகின்றோம். ஆனால், இவர்கள் தொடர்பான தரவுகள் அரச நிறுவனங்களில் இல்லை. 

இவர்கள் ஒரு தனியான பாதிக்கப்பட்ட சமூகக் குழுக்களாக அடையாளம் காணப்பட்டு, இவர்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். 

பல்கலைக்கழகங்கள் இவ்வாறான குடும்பங்கள் தொடர்பான தகவல்களை ஆய்வு செய்து, தரவுபடுத்த முடியும். நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் இவ்வாறான குடும்பங்கள் காணப்படுகின்றன. ஆனால், பிரதேசங்களுக்கு ஏற்ப பிரச்சினைகளின் தன்மை மாறுபடுகிறது. 

இவ்வாறான குடும்பங்கள் போசாக்கு குறைபாடு, இளவயது திருமணங்கள், பாடசாலை இடைவிலகல், இளவயதில் தொழிலுக்குச் செல்லல் போன்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இவை முறையாக அறிக்கையிடப்பட்டு தேசிய வேலைத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறான குடும்பங்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதும் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்” என கூறியுள்ளார். 

அதேபோல் இது ஒரு தேசிய பிரச்சினையாக காணப்படுவதால் இதற்கான நிலைபேறான தீர்வுகள் தொடர்பாக பெண்ணியச் செயற்பாட்டாளரும் மனித உரிமை ஆர்வலருமான நளினி ரட்ணராஜாவை அணுகி வினவியபோது அவர் இவ்வாறு பகிர்ந்துகொண்டார். 

“நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகத்தவர்கள் என அனைத்து இனங்களிலும் பெண்தலைமை குடும்பங்கள் காணப்படுகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் கைத்தொழில் உற்பத்திகளால் தமது வாழ்வாதாரத்தை அமைத்துக்கொண்டவர்கள் ஆவர். 

இவர்களின் உற்பத்திகளுக்கான சந்தைவாய்ப்பின்மை, தரகர்களின் ஆக்கிரமிப்பு போன்றவற்றால் இவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது.

அதிகரித்த விலைவாசிக்கு முகங்கொடுத்தல், பெண்பிள்ளைகளின் கல்வி மற்றும் தனிப்பட்ட சுகாதாரம் தடைப்படல் போன்ற பிரச்சினைகள் பெண்தலைமை குடும்பங்களில் காணப்படுகின்றன. 

வடகிழக்கிலாவது ஓரளவுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் இருந்தாலும், மலையகத்தில் அவ்வாறில்லை.

இன்று எமக்கான அந்நிய செலாவணியை பெண்களே ஈட்டித் தருகின்றனர். ஆனால், இவ்வாறான குடும்பங்களுக்கு அரசாங்கமோ அரசியல் கட்சிகளோ நேரடியாக எதனையும் செய்யவில்லை. இருக்கும் வளங்களை முறையாக பயன்படுத்துவதற்கான செயற்றிட்டங்கள் இல்லை. இதில் அரசுக்கே முழுப்பொறுப்பும் உள்ளது. 

பெண்தலைமை குடும்பங்களை மையப்படுத்திய புதிய கொள்கைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். மானியங்கள், கடனுதவிகள் என்பனவும் அவர்களை வலுப்படுத்த உதவும்.

அதேபோல் சிவில் சமூகம், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் துறைகளை சேர்ந்தவர்களின் கூட்டாண்மையுடன் இவர்களுக்கான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது பொருளாதார ரீதியாக இவர்கள் மீண்டெழ உதவி செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

இவை யாவற்றையும் தொகுத்து நோக்கும்போது பெண்தலைமைக் குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருப்பது ஒரு தேசிய பிரச்சினையாகும். 

எனவே தேசிய மற்றும் பிராந்திய மட்டத்தில் இவர்களுக்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டிய தேவை காணப்படுகிறது. 

மேலும், தொழில்நுட்ப ரீதியாக இவர்களை வலுவூட்டுவதும், புதிய தொழில் முயற்சியாண்மைகளுக்கு இவர்களை தயார்ப்படுத்துவதும் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையினை இவர்கள் சமாளிப்பதற்கு உகந்த ஏற்பாடுகளாகும். 

இக்குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளுக்கான கல்வி, சுகாதாரம், போசாக்கு போன்றவற்றை பேணுவதற்கு உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக குறுகிய கால நலத்திட்டங்களை முன்னெடுக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச உதவிகளை அவற்றின் தகுதியின் அடிப்படையில்...

2025-01-22 11:00:46
news-image

கெரவலப்பிட்டிய, புளுமென்டல் பகுதிகளில் புதிய கொள்கலன்...

2025-01-21 16:42:53
news-image

நுவரெலியாவையும் யாழ்ப்பாணத்தையும் பஸ் மார்க்கத்தால் இணைக்கும்...

2025-01-21 19:49:27
news-image

கிட்டு மீதான கொலை முயற்சி

2025-01-21 14:07:54
news-image

காசா பள்ளத்தாக்கு போர்நிறுத்தம் நின்றுபிடிக்குமா?

2025-01-21 14:08:15
news-image

"தையிட்டி விகாரையை தென்பகுதி சிங்கள மக்கள்...

2025-01-21 20:27:32
news-image

அதிகாரம் படைத்தவர்களுடன் எந்தவிதமான சமரசத்திலும் ஈடுபடாமல்...

2025-01-21 08:45:36
news-image

எதிர்கால சந்ததியினர் மத்தியில் அச்சுறுத்தலாக மாறும்...

2025-01-19 16:20:27
news-image

கிறிப்டோ கரன்சி என்றால் என்ன? இலங்கையில்...

2025-01-19 16:10:32
news-image

பனிப்பாறைகளின் இறையாண்மை

2025-01-19 15:56:51
news-image

சமஷ்டிக் கோரிக்கை தமிழரசுக்கட்சியின் அஸ்தமித்துப்போன கனவா?...

2025-01-19 15:45:57
news-image

உயிர்களை பறிக்கும் வீதி விபத்துக்கள்

2025-01-19 15:33:13