வடக்கின் சமர் ஒருநாள் போட்டி : யாழ். மத்திய கல்லூரி அணியை 21 ஓட்டங்களால் வென்றது சென். ஜோன்ஸ்

Published By: Digital Desk 5

18 Mar, 2023 | 10:07 AM
image

(நெவில் அன்தனி)

யாழ். சென். ஜோன்ஸ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற வடக்கின் சமர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் யாழ். மத்திய கல்லூரியை 21 ஓட்டங்களால் வீழ்த்தி  வெற்றிக் கிண்ணத்தை   சென். ஜோன்ஸ் சுவீகரித்தது.

அருள்சீலன் நிதானத்துடன் பெற்ற அரைச் சதம், அன்ரன் அபிஷேக்கின் சகலதுறை ஆட்டம், யோகதாஸ் விதுஷன் பதிவு செய்த 4 விக்கெட் குவியல் என்பன சென். ஜோன்ஸின் வெற்றிக்கு வழிவகுத்தன.

இந்த வெற்றி மூலம் 116ஆவது வடக்கின் சமர் 3 நாள் போட்டியில் அடைந்த தோல்வியை சென். ஜோன்ஸ் நிவர்த்தி செய்துகொண்டது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த சென். ஜோன்ஸ் 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 217 ஓட்டங்களைக் குவித்தது.

சென். ஜொன்ஸின் முதல் 6 வீரர்கள் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய போதிலும் அவர்களால் நீண்ட நேரம் ஆடுகளத்தில் நிலைத்திருந்து கணிசமான ஓட்டங்ளைப் பெற முடியாமல் போனது.

அண்டர்சன் சச்சின் கனபதி (7), மஹேந்திரன் கின்துஷன் (27), சங்கீத் க்றேம் ஸ்மித் (14), நேசகுமார் எபநேசர் ஜெஸியல் (12), அணித் தலைவர் கமலபாலன் சபேசன் (2), யோகதாஸ் விதுஷன் (13) ஆகிய ஆறு பேரும் ஆட்டமிழக்க சென். ஜோன்ஸ் 27.2 ஓவர்களில் 106 ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான நிலையில் இருந்தது.

இந் நிலையில் அருள்சீலன் கவிஷான், அன்டன் அபிஷேக் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து 7ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு கௌரமான நிலையில் இட்டனர்.  அபிஷேக்   30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த சோற்ப நேரத்தில் அன்டன் அமலதாஸ் (7) களம் விட்டகன்றார். (165 - 8 விக்.)

எனினும் அருள்சீலன் கவிஷான் தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடி 9ஆவது விக்கெட்டில் ஜெயச்சந்திரன் அஷிநாத்துடன் இணைந்து 43 ஓட்டங்களைப் பகிர்ந்து சென். ஜோன்ஸின் மொத்த எண்ணிக்கை 200ஐக் கடக்க உதவினார்.

ஜெயச்சந்திரன் அஷிநாத் 19 ஓட்டங்களைப் பெற்றதுடன் கடைசியாக ஆட்டம் இழந்த முர்ஃபின் ரெண்டியோ 3 ஓட்டங்களைப் பெற்றார்.

அருள்சீலன் கவிஷான் மிகவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி 96 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டறிகளுடன் 64 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

பந்துவீச்சில் சதாகரன் சிமில்டன் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரஞ்சித்குமார் நியூட்டன், நிஷாந்தன் அஜய், விக்னேஸ்வரன் பருதி, தகுதாஷ் அபிலாஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

218 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி 46.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 194 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

சென். ஜோன்ஸைப் போன்றே யாழ். மத்திய கல்லூரி அணியிலும் முதல் அறுவரில் ஐவர் துடுப்பாட்டத்தில் கோட்டை விட்டனர்.

ஜெகதீஸ்வரன் விதுஷன் (2), ரஞ்சித்குமார் நியூட்டன் (8), மதீஸ்வரன் சஞ்சயன் (9), நிஷாந்தன் அஜய் (19), அணித் தலைவர் ஆனந்தன் கஜன் (0) ஆகிய ஐவரும் ஆட்டமிழக்க மொத்த எண்ணிக்கை 60 ஓட்டங்களாக இருந்தது. (60 - 5 விக்.)

எனினும் சதாகரன் சிமில்டன், டெனியல் போல் பரமதயாளன் ஆகிய இருவரும் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 74  ஓட்டங்களைப் பகிர்ந்து யாழ். மத்திய கல்லூரிக்கு தெம்பூட்டினர். ஆனால் இருவரும் 22 பந்துகள் இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். (147 - 7 விக்.)

டெனியல் போல் 6 பவுண்டறிகளுடன் 40 ஓட்டங்களையும் சதாகரன் சிமில்டன் 6 பவுண்டறிகளுடன் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களைத் தொடர்ந்து தகுதாஸ் அபிலாஷ் 3 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (158 - 8 விக்.)

அடுத்து 9ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த சகாதேவன் சயந்தன், சுதர்ஷன் அனுஷாந்த் ஆகிய இருவரும் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து எதிரணிக்கு சவால் விடுத்தனர். ஆனால், இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

சகாதேவன் சயந்தன் 27 ஓட்டங்களையும் சுதர்சன் அனுசாந்த் 16 ஓட்டங்களையும் பெற்றனர். விக்னேஸ்வரன் பருதி ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் அன்ரன் அபிஷேக் 8.4 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் யோகதாஸ் விதுஷன் 9 ஓவர்களில் 36 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஜெயச்சந்திரன் அஷினாத் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: அன்ரன் அபிஷேக்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41