இலங்கையின் சினிமா வரலாற்றிலேயே மாபெரும் பொருட்செலவில், காட்சியமைப்பில் உருவாகியுள்ள 'கிரிவெசிபுர' சரித்திர திரைக்காவியம் நான்காண்டு கால கடும் முயற்சியின் பின்னர் நேற்று முன்தினம் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ளது.
கண்டி இராச்சியத்தை ஆண்ட இறுதி மன்னனான ஸ்ரீ விக்ரம ராஜசிங்கனின் அரச வரலாற்றை அடியொற்றி படைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை தேவிந்த கோங்ககே இயக்கியுள்ளார்.
'2023 சினிமா அபிமான' திரைப்பட விழாவில் நேற்று முன்தினம் 'கிரிவெசிபுர' சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்ட நிகழ்வில் படக்குழுவினரும் கலந்துகொண்டு, இந்த படத்துடனான நான்காண்டு கால பயணம் தொடர்பான தமது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
அதேவேளை இந்தப் படம் வெளியான அன்று இலங்கையில் உள்ள 16 திரையரங்குகளிலும் திரையிடப்பட்டு, திரையரங்கங்களில் நிறைந்த ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
படத்தில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், உப தலைப்புகளோடும் படம் உருவாக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
இலங்கையின் தமிழ் மற்றும் சிங்கள திரைப்பட கலைஞர்கள் இதில் நடித்துள்ளனர்.
அத்துடன் இந்தியாவின் தமிழ் பேசும் தெலுங்கு நாயக்க மன்னரை பற்றிய கதை என்பதால் இலங்கை கடந்து இந்திய அளவிலும் இப்படம் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் எல்றோய் அமலதாஸ், நிரஞ்சனி சண்முகராஜா, நவயுகா குகராஜா, ஜூலியானா போன்றோர் பிரதான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.
பொ.ஆ. 1780 – 1832 காலப்பகுதியில் வாழ்ந்த ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் பொ.ஆ. 1798 முதல் 1815 வரை கண்டி ஆட்சியில் கோலோச்சிய கடைசி மன்னனாக அறியப்படுகிறார்.
மதுரை நாயக்கர் வம்சத்தினரான இவரது இயற்பெயர் கண்ணுசாமி.
அவருக்கு முன்பு கண்டி இராச்சியத்தை ஆண்டுவந்த நாயக்க வம்ச மன்னனான ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கனுக்கு ஐந்து மனைவிகள் இருந்தும், ஒரு வாரிசு இல்லாத நிலையில் இறந்துவிட்டார்.
அடுத்த மன்னன் யார் என்கிற போட்டியும் சதியும் உருவாகத் தொடங்கிய நிலையில் இரண்டாவது மனைவியின் சகோதரனான கண்ணுசாமி மதுரையிலிருந்து அழைத்துவரப்பட்டு 1798ஆம் ஆண்டு கண்டி அரசுக்குரிய அரசனாக முடிசூட்டப்பட்டார்.
கண்ணுசாமி, பதவி காரணமாக ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் என்கிற அரச நாமத்தை பெற்றார்.
பிரித்தானியரின் வருகையாலும் ராஜதந்திர திட்டங்களாலும் கண்டி இராச்சியம் கைமாறியது.
பொ.ஆ. 1815ஆம் ஆண்டு கண்டி போரில் பிரித்தானியரிடம் தோல்வியுற்ற மன்னன் நாடு கடத்தப்பட்டு, வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்ட நிலையில், 1832 ஜனவரி 30 அன்று தனது 52 வயதில் மரணத்தை தழுவினார்.
அவரது ஆட்சிக் காலத்தில் சூழ்ந்திருந்த சதிகள், துரோகங்கள், தோல்விகள், ஆக்கிரமிப்புகள், ஏமாற்றங்கள், துயரங்கள், வலிகளையே 'கிரிவெசிபுர' படம் எடுத்துக்காட்டுகிறது.
தமிழ் பரம்பரை மன்னனான ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் சிங்கள மன்னனாக வாழ்ந்து அரச கருமமாற்றி, மறைந்தான் என்பதற்கான ஆதாரக் குறிப்புகள் உள்ள போதும் அந்த உண்மையை ஏற்க சிலர் தயாராக இல்லை என்பது மேலதிக நினைவூட்டல்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM