தென் பிலிப்பீன்ஸில் உள்ள சிறைச்சாலை ஒன்றினுள் ஆயுதங்களுடன் புகுந்த நபர்கள் சிலர், அங்கிருந்த காவலர் ஒருவரைக் கொன்று 150க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்துச் சென்றுள்ளதாக பிலிப்பீன்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

கோட்டபாட்டோ மாவட்டத்தின் கிடாபவான் நகரில் உள்ள இந்தச் சிறைக்குள் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 1 மணியளவில் திடீரெனப் புகுந்த ஆயுத தாரிகள், காவலர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிகளை இயக்கினர். 

பின்னர், குறிப்பிட்ட சில சிறையறைகளைத் தகர்த்த அவர்கள் அதில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளை விடுவித்தனர். மொத்தமாக இருந்த 1,511 கைதிகளுள் 158 பேர் தப்பியோடினர். எனினும் நால்வர் மீண்டும் கைதுசெய்யப்பட்டனர்.

ஆயுத தாரிகள் முஸ்லிம் இயக்கங்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. 

கிறிஸ்தவப் பெரும்பான்மை நாடாக விளங்கும் பிலிப்பீன்ஸில் கடந்த ஓரிரு தசாப்தங்களாக முஸ்லிம் கிளர்ச்சிக் குழுக்கள் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கி வருகின்றன.

இதைத் தடுக்கும் முகமாக அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ டியூடர்தே முஸ்லிம் கிளர்ச்சிக் குழு உறுப்பினர்களை சிறைவைக்கப் பணித்துள்ளார். இதன்படி தடுத்து வைக்கப்பட்டவர்களையே ஆயுத தாரிகள் விடுவித்துச் சென்றுள்ளனர்.