கேது திசையில் யோகமளிக்கும் ஆறுபடை பிள்ளையார் வழிபாடு

Published By: Ponmalar

15 Mar, 2023 | 12:50 PM
image

எம்மில் பலரும் கேது திசை அல்லது  எந்த திசை நடந்தாலும் கேது புத்தி நடைபெற்றால்... உடனடியாக பதறுவர். ஏனெனில் கேது பகவான் ஞானத்தை அளிக்க கூடியவராக இருந்தாலும்... லௌகீக சுகபோகத்தில் தடையை ஏற்படுத்தக் கூடியவர். கேது தொடர்பான தோஷம் இருந்தால்.. அவர்களுக்கு வாழ்க்கையில் நடைபெற வேண்டிய திருமணம், குழந்தை பேறு, வேலை வாய்ப்பு, தொழில் முன்னேற்றம்... என பல விடயங்களில் தாமதம் உண்டாகும். ஜோதிட நிபுணர்களை அணுகி கேது தோஷத்திற்குரிய பரிகாரத்தை கேட்டு அதனை நிவர்த்தி செய்து பலன்களை பெறவேண்டும்.

கேது திசை ஏழு ஆண்டுகள் மட்டுமே இருந்தாலும்... இவை வாழ்க்கையில் வலிமையான.. மறக்க இயலாத அனுபவத்தை தர வல்லவை. உங்களுடைய ஜாதகத்தில் கேது பகவான் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதனையும், எந்த காரகத்துவத்திற்கு ஆதரவாகவோ பாதகமாகவோ செயல்படுவார் என்பதனையும் அவதானித்து, அதற்கேற்ற பரிகாரத்தை ஜோதிட நிபுணர்கள் பரிந்துரைப்பார்கள்.

கேது திசை நடக்கும் காலகட்டத்தில் கேது பகவானின் அதிபதியாக திகழும் விநாயகரை நாளாந்தம் தொழுது வந்தால், எம்முடைய தோஷம் அகன்று சந்தோஷம் நீளும். அதிலும் கேது பகவானின் அருளை பெற விநாயகரை வணங்குவதுடன்.. எமக்கு அறிமுகமான ஆறுபடை முருகனைப் போல், விநாயகப் பெருமானுக்கும் ஆறுபடை விநாயகர் ஆலயம் இருக்கிறது. தமிழகத்தில் உள்ள இந்த ஆறுபடை விநாயகர் ஆலயத்திற்கும் சென்று தரிசித்து விட்டு வந்தால் கேது பகவான் தாமதத்தையும், தடையையும் ஏற்படுத்தாமல் பலன்களை வழங்க வழிவகை செய்வார்.

ஆறுபடை விநாயகர் ஆலயமா..! என ஆச்சரியப்பட வேண்டாம். எல்லா ஆலயங்களிலும் முழு முதற் கடவுளான விநாயகருக்கு.. முதன்மையான ஸ்தானம் வழங்கியிருந்தாலும், பின்வரும் ஆறு தலங்களில் இருக்கும் விநாயகப் பெருமான் விசேடமானவர்.

• திருவண்ணாமலை உண்ணாமுலை சமேத அண்ணாமலையார் ஆலயத்தில் வீற்றிருக்கும் செந்தூர விநாயகர்..

• விருத்தாச்சலம் விருத்தாளம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பள்ளத்து விநாயகர் அல்லது ஆழத்து விநாயகர்..

• திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் கள்ள விநாயகர்..

• திருச்சி மலைக்கோட்டை மட்டுவார் குழலி உடனுறை தாயுமானேஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் உச்சி பிள்ளையார்..

• பிள்ளையார்பட்டி சிவகாமி அம்மன், வடமலர் மங்கையம்மன், சௌந்தர நாயகி அம்மன் சமேத திருவீசர், மருதீஸ்வரர், செஞ்சதீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ கற்பக விநாயகர்..

• திருநாரையூர் திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை சவுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ பொல்லாப் பிள்ளையார்..

ஸ்ரீ விநாயகப் பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கும் சென்று தரிசித்து கேது திசையில் மட்டுமல்லாமல், அனைத்து திசைகளிலும் விநாயக பெருமானின் அருளைப் பெறலாம்.

மேலும் கேது திசையில் தொடர் தோல்விகள் மற்றும் தாமதங்கள் ஏற்பட்டால் உங்களுடைய வீட்டிற்கு அருகே அரச மரத்தடியில் விநாயகர் இருந்தால்.. அவரை அகத்திக் கீரையால் விநாயகப் பெருமானின் ஏதேனும் ஒரு மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே அர்சிக்க வேண்டும்.

மேலும் கேது திசை காலகட்டத்தில் சிதறு காய் அடிக்கும்போது தேங்காயின் நார்களை முழுவதுமாக உரித்து விட்டு.. முக் கண்ணும் தெரியும் வகையில் சிதறு காயினை அடிக்க வேண்டும்.

இந்த பரிகாரங்களை நம்பிக்கையுடன் நிறைவேற்றும் போது, உங்களது கேது தோஷம் நீங்கி, நற்பலனை வழங்கும்.

தகவல்: விஜய்
தொகுப்பு: சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்