நாட்டின் தேசியக் கடன் சுமையானது எதிர்கால சந்ததி மீது சுமத்தப்படாது என்றும், எதிர்வரும் 2020ஆம் ஆண்டளவில் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அத்திவாரம் இடப்படும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

குளியாப்பிட்டியவில் வாகன உற்பத்திச் சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அந்த நிகழ்வில் பேசியபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

“அரசாங்கம் ஜனவரி 8ஆம் திகதியளவில் நாடளாவிய ரீதியில் பல வேலைத் திட்டங்களை அமல்படுத்தவுள்ளது. இதன்மூலம் சுமார் இருபதாயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன. என்றாலும் நானோ, ஜனாதிபதியோ இந்த எண்ணிக்கையால் திருப்தியடையப்போவதில்லை. மேலும் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க நாம் விரும்புகின்றோம்.

“இதற்காக ஜனாதிபதியும் நானும் உலக நாடுகள் பலவற்றுக்கும் விஜயம் செய்யவுள்ளோம். எமது விஜயத்தின்போது பல்வேறு முதலீட்டு உடன்படிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம். அதன்படி மேலும் பல வேலைவாய்ப்புகளை நம் நாட்டு மக்களுக்கு உருவாக்கித் தர எண்ணியுள்ளோம்.

“தேசிய வருமானத்தை அதிகரிக்க வேண்டும். எமது அன்னிய செலாவணி போதுமானதாக இல்லை. எனவே, அதை அதிகரிக்கக்கூடிய பல்வேறு திட்டங்களைக் கொண்டு வரவுள்ளோம். அதற்கு அடிப்படையாக விளங்கும் உற்பத்தித் துறையையும் சுற்றுலாத் துறையையும் நாம் மேம்படுத்த வேண்டும்.”

இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.