சிலம்பரசன் நடிக்கும் 'பத்து தல' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

Published By: Ponmalar

14 Mar, 2023 | 12:43 PM
image

சிலம்பரசன் நடிப்பில் தயாராகி இம்மாதம் முப்பதாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாக இருக்கும் 'பத்து தல' எனும் திரைப்படத்திலிருந்து 'நினைவிருக்கா..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் என். கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பத்து தல'. இதில் சிலம்பரசன் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

இவருடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாரூக் ஜே. பாஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை புயல்' ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது 'நினைவிருக்கா...' என தொடங்கும் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. 

பாடலாசிரியர் கபிலன் எழுதியிருக்கும் இந்த பாடலை ஏ ஆர் ரகுமானின் வாரிசும், பாடகருமான ஏ. ஆர். அமீன் மற்றும் பாடகி சக்திஸ்ரீ கோபாலனுடன் இணைந்து பாடியிருக்கிறார்.

இந்தப் பாடலில் ஏ. ஆர். ரகுமான், ஏ. ஆர். அமீன், கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் தோன்றியிருப்பதால் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

மெல்லிசையும், காதலும் கலந்த இந்தப் பாடல் வெளியான பன்னிரண்டு மணித்தியாலத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right