தற்கொலை தீர்வல்ல

Published By: Digital Desk 5

13 Mar, 2023 | 01:04 PM
image

(அ.நிவேதா)

“விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல் கற்றாரொடு ஏனையவர்” என்பதன் பொருளே ஐந்தறிவு கொண்ட விலங்குகளுக்கும் ஆறறிவு பெற்ற மனிதர்களுக்கும் இடையிலான பகுத்தறியும் வேறுபாடாகும். ஆனால் சமீபகாலமாக இலங்கையில் தொடர்ச்சியாக இடம் பெற்றுவரும் தற்கொலை சம்பவங்கள் மற்றும் தற்கொலை முயற்சிகளை பார்க்கும்போது எம்மவர்கள் தீர்மானிக்கும் ஆற்றலையும் தன்னம்பிக்கையையும் இழந்துள்ளனர் என்பதை கோடிட்டுக்காட்டுகிறது.

பிரச்சினைகளுக்கு தற்கொலை தீர்வாகாது என்பதையே எல்லா மதங்களும் போதிக்கின்றன. கடவுளால் அருளப்பட்ட உயிரை மாய்த்துக்கொள்ள எவருக்கும் உரிமையுமில்லை, சட்டத்திலும் அதற்கு இடமில்லை.

ஆனால் அனைத்தும் கற்றுத் தேர்ந்தவர்களாகவே இருந்தாலும் கூட பிரச்சினை எனும்போது எம்மில் பெரும்பாலானோர் தற்கொலையை இறுதி முடிவாகக் கொள்கின்றனர். எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வுஉண்டு. ஆனால் அது தற்கொலையாக மாற முடியாது. அதிலும் தம்மை சார்ந்தோரையும் இதற்கு பலிக்கடாவாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக வாழவேண்டிய பிஞ்சுகளின் எதிர்காலத்தை சிதைப்பதென்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

கடந்த ஒரு வாரக்காலப்பகுதிக்குள் சுமார் ஐந்துக்கும் அதிகமான தற்கொலை, தற்கொலை முயற்சி மற்றும் தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அந்தவகையில் கடந்த 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வவுனியாவில் கணவன், மனைவி உட்பட 3 மற்றும் 9 வயது நிரம்பிய இரு பிள்ளைகள் என, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வீட்டிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தற்கொலைதானா என்பது தொடர்பில் ஆராய பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். 

அதேபோன்று கம்பளை தெல்பிட்டிய செவனக் கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தனது 3 பிள்ளைகளுக்கும் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடிக்கச் செய்துவிட்டு தானும் மதுபானத்துடன் விஷம் உண்ட சம்பவம் 7ஆம் திகதி இரவு பதிவானது. எனினும் இந்த நால்வரும் அயலவர்களின் உதவியுடன் உரிய வேளையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். குறித்த குடும்பஸ்தர் மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து மேற்படி விபரீத முடிவுக்கு முயற்சித்துள்ளார். 

அதேபோன்று 8ஆம் திகதியன்று வறுமையை காரணம் காட்டி தனது இரண்டு பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக செவனகல பிரதேச செயலகம் முன்பாக பெண் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது கணவர் வேறொரு பெண்ணை திருமணம் முடித்துள்ள நிலையில் தனக்கு இருக்க இடமில்லாமல் தெருவில் நிற்பதாகவும் இதனால் தனக்கொரு காணியை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டுமென கோரியுமே மேற்படி தற்கொலை மிரட்டலை விடுத்துள்ளார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தலையீட்டில் காணி யொன்றை பெற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 5ஆம் திகதி புத்தளம் உடப்பு பகுதியில் தாய் ஒருவர் கணவருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து தனது ஒன்றரை வயது குழந்தையை இறால் தொட்டிக்குள் தள்ளிவிட்ட சம்பவம் பதிவானது.

அதேபோன்று கடந்த 5ஆம் திகதி அநுராதபுரம் கெப்பத்திகொல்லாவ பகுதியில் விஷேட தேவையுடைய 9 மற்றும் 21 வயது நிரம்பிய இரண்டு ஆண் பிள்ளைகளுடன் தாயொருவர் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார்.

இதன்போது மாற்றுத்திறனாளியான 21 வயதுடைய மகன் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய இருவரும் உயிர் தப்பியுள்ளனர். வறுமையே இந்த விபரீத முடிவுக்கான காரணமென பாதிக்கப்பட்ட தாய் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதேபோன்று, கடந்த ஜனவரி மாதமும் புஸல்லாவை பெரட்டாசி தோட்ட மேமலை பிரிவிலும் குடும்பப் பிரச்சினை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் தனது 12 மற்றும் 16 வயது நிரம்பிய பிள்ளைகளுக்கு விஷத்தை அருந்தக் கொடுத்துவிட்டு தானும் விஷமருந்திய நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேற்குறிப்பிடப்பட்ட சம்பவங்களில் பெரும்பாலானவை வறுமை, குடும்ப பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

தனிமை, வறுமை, தொழில் இன்மை மற்றும் விரக்தி ஆகிய காரணிகள் சமூகத்தில் பரவலாக காணப்படுகின்றன. ஏதோவொரு வகையில் இவற்றாலான சவால்களுக்கு சகலருமே முகங்கொடுக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுவிடுகிறது.

கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு பின்னரான இத்தகையதொரு இக்கட்டான சூழ்நிலையில் நாளாந்தம் சந்திக்கின்ற பிரச்சினைகள் ஏராளம். அதற்காக வாழ்க்கையை முடித்துக் கொள்வதென்பது மிகச் சரியான தீர்வாக அமையாது. அதிலும் தம்மை சார்ந்தவர்களையும் தற்கொலைக்கு இழுத்துச் செல்வதென்பது சகிக்கத் தகாதது என மனோவியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரை மாய்த்துக்கொள்ளல் அல்லது அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளரும் உளவியல் ஆலோசகருமான வைத்தியர் உபாலி பீரிஸிடம் வினவியபோது அவர் கீழ்க் கண்டவாறு தெரிவித்தார்.

வைத்தியர் உபாலி பீரிஸ்

கேள்வி, உயிரை மாய்த்துக்கொள்ளல் அல்லது அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு என்ன காரணம்?

பதில், நீண்டகால மன அழுத்தம், தனிமை, இயலாமை, ஏமாற்றம், மதுபாவனை, சந்தர்ப்ப சூழ்நிலைகள் உள்ளிட்ட பல காரணிகளால் பாதிக்கப்பட்டவர்களே இத்தகைய முடிவுகளை நாடுகின்றனர். அதிலும் மக்கள் நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் தங்களுக்காக வாழ வேண்டும் என்பதை மறந்து சமூக விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இறுதிவரை ஒருவரது பிரச்சினை என்னவென்பதே அவரை சார்ந்தோருக்கு தெரியவருவதில்லை. காரணம் தம்மை சுற்றியுள்ளவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம் தான் அது. அதேபோன்று வாழ்க்கை குறித்த போதிய விழிப்புணர்வு, மனப்பக்குவம் இல்லாமையும் மற்றொரு காரணமாகும். 

பிரச்சினைகளை கண்டு எளிதில் துவண்டு விடுகிறார்கள். பிரச்சினைக்குரிய தீர்வை தேடுவதற்கு மாறாக உயிரை மாய்த்துக்கொள்ள விளைகிறார்கள். இன்னும் சிலர் வறுமை, தொழிலின்மை, குடும்பத்தில் முரண்பாடு போன்ற காரணங்களால் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். 

உலகில் பிரச்சினை இல்லாத நபர்களே இங்கு கிடையாது. பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதைவிடுத்து தற்கொலை எனும் முடிவை தேடிக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதிலும் தமது குடும்பத்தாரையும் உயிரை மாய்த்துக்கொள்ள தூண்டுவதென்பது கொலை செய்வதற்கு சமமாகும்.

குடும்ப ரீதியாக ஏற்படக்கூடிய பிரச்சினைகளை நோக்கும்போது, குடும்ப தலைமைகளுக்கே பொருளாதார நெருக்கடி என்பது பாரிய சவாலாக அமைந்துள்ளது. அதிலும் இலங்கையில் கொவிட் வைரஸ்  தொற்றுக்கு பின்னரான காலப்பகுதி பெரும் சவால்மிக்கது. 

குறிப்பாக ஆண் துணை யின்றி குடும்பங்களை பராமரிக்கின்ற பெண்களும் இரண்டாவது வாழ்க்கை துணையை தேடியவர்களும் உரிய பாதுகாப்பின்றி தனியாக வாழ்பவர்களுமே இதுபோன்ற தற்கொலை முயற்சிகளை மேற்கொள்வது ஒப்பிட்டளவில் அதிகம்.

காரணம் அதிக மன உளைச்சல், புரிந்துணர்வு இல்லாமை, பிரச்சினை களை தனியாக எதிர்நோக்குகின்றபோது சமூகத்தில் ஏற்படக்கூடிய எதிர்ப்பு மற்றும் விமர்சனங்கள் போன்றவற்றால் ஒருக்கட்டத்தில் வாழ்க்கை குறித்த வெறுப்பும் எதிர்காலம் பற்றிய ஒருவித பயமும் இத்தகையோரை தற்கொலைக்கு தூண்டுகிறது.

கேள்வி, மன அழுத்தத்தில் இருந்து விடுபட வழி என்ன?

பதில், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பின்வரும் மூன்று கட்டங்களூடாக வெளிவர முடியும். அதாவது, முதலாவதாக போதிய விழிப்புணர்வை பெற்றுக்கொள்ளல்,இரண்டாவது சுயமாக அல்லது பிறரின் உதவியுடன் தீர்வைப் பெற்றுக்கொள்ளல், மூன்றாவதாக மருத்துவ ரீதியிலான உதவியை பெற்றுக்கொள்ளல் என்பனவாகும். மன அழுத்தத்தின் உச்சக்கட்டம், ஒருவரின் உயிரை மாய்த்துக்கொள்ள தூண்டும் அதேவேளை கொலையாளியாகக்கூட மாற்றிவிடுகிறது.

எனவே பிரச்சினைகள் ஏற்படும்போது தம்மை சார்ந்தோருக்கு அல்லது சார்ந்திருப்போருக்கு முதலில் அறியப்படுத்த வேண்டும். மாறாக, மனதுக்குள்ளேயே புதைத்து வைக்கும் படசத்தில் அதன் விளைவு விபரீதமாக அமைந்து விடுகிறது. அதேபோன்று தனிமையில் உள்ளவர்கள் இயன்றவரை அதிலிருந்து வெளிவர முயற்சிக்க வேண்டும். 

யோகாசனம், உடற்பயிற்சி என்பன இதற்கு மிகச்சிறந்த வழிகள். இவற்றின் ஊடாக மனதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். விபரீத முடிவுகள் தொடர்பான விழிப்புணர்வுகளை பாடசாலை மட்டத்திலிருந்தே செயற்படுத்தும் வகையில் பாடத்திட்டங்களில் உள்வாங்குவது சிறப்பான பலனைத் தரவல்லதாகும். தோல்வியை சகிக்த்துக் கொள்ளும் பக்குவத்தை பிள்ளைப் பருவத்திலிருந்தே கற்றுக்கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

கேள்வி, உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூற விளைவது?

பதில், இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டுமாயின் குடும்ப மட்டத்திலிருந்து விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

இங்கு பலருக்கு பிரச்சினைகளை எதிர்த்துப் போராட தெரிவதில்லை. பிரச்சினைகளை அணுகக்கூடிய மனப்பக்குவம் மக்கள் மத்தியில் மிகக்குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. சுகாதாரத்தரப்பினர் என்ற ரீதியில் நாம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். உளவியல் ரீதியில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு துரித அழைப்பு இலக்கங்கள் கூட பயன்பாட்டில் உள்ளன.

ஆனால் எம்மில் பலருக்கு இது தொடர்பில் தெளிவில்லை. யாரேனும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தால் அல்லது வைத்திய ஆலோசனை தேவைப்படுமாக இருந்தால் 1925 என்ற துரித அழைப்பேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொள்ள முடியும்.

மேலும் சுமித்ரேயோ என்ற அமைப்பு இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க 0112682535 அல்லது 0112682570 ஆகிய தொலைபேசி இலக்கங்களையும் 1333 என்ற துரித இலக்கத்தையும் அறிவித்துள்ளது. அதேபோன்று 1926 என்ற தேசிய மனநல உதவி துரித அழைப்பு எண்ணும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது என்றார்.

இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜயசுந்தர பண்டார கூறுகையில்,

வைத்தியர் ஜயசுந்தர பண்டார

கடந்த ஒருவாரகாலமாக பதிவாகி வருகின்ற தற்கொலை சம்பவங்கள் கவலையளிக்கின்றன. மக்கள் மத்தியில் போதுமான விழிப்புணர்வின்மையே இதற்கு பிரதான காரணம். வறுமை, நிதி நெருக்கடியென்பது எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் அவற்றை கடந்துவர முயற்சிக்க வேண்டும். 

மன அழுத்தம், நெருக்கடிகளுக்குள்ளானவர்களை அதிலிருந்து வெளிக் கொணர்வதற்கு சமூக ஆர்வலர்கள் உட்பட சமூகத்தில் பொறுப்பு வாய்ந்த சகல தரப்பினரும் முன்வர வேண்டும். அதற்கு பொதுமக்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. குடும்பமட்டத்திலிருந்து உளவியல் ரீதியில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். 

சமூக ஊடகங்களுக்கு இந்த விடயத்தில் பாரிய பொறுப்பு உள்ளது. வெறுமனே செய்திகளை பதிவிடாமல் இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த ஊடகங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும். 

பல்வேறு விழிப்புணர்வு செயற்றிட்டங்களை ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அதேவேளை பாடசாலை மட்டத்திலிருந்து இதுபோன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இது தொடர்பில் கல்வி அமைச்சும் கரிசனைக் கொள்ள

வேண்டும் என்றார். எனவே குடும்பத் தகராறுகளை காரணம் காட்டி உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சிப்பது ஏற்கத்தகாதது. குறிப்பாக தம்மை சார்ந்தோரையும் இதற்கு தூண்டுவதென்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04