(இராஜதுரை ஹஷான்)
நாட்டு மக்கள் தேர்தலை கேட்கவில்லை என்பதை ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றிணைத்து ஜனாதிபதியால் குறிப்பிட முடியுமா, மக்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு.
தேசிய பாதுகாப்பின் பாதுகாவலன் என புகழப்பட்ட கோட்டபய ராஜபக்ஷ பாதுகாப்பிற்காக வெளிநாட்டில் தஞ்சம் புகுந்ததை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மறக்க கூடாது, மக்களின் வாக்குரிமையை மலினப்படுத்தாமல், தேர்தல் நடவடிக்கைக்கு இடையூறு விளைவிக்காமல் விலகிக் கொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கம்பஹா நகரில் திங்கட்கிழமை (13) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
தேர்தலை நடத்த நிதி இல்லை என்ற சம்பிரதாயம் தோற்றம் பெற்றால் எதிர்காலத்தில் எந்த தேர்தலும் நாட்டில் இடம்பெறாது.
பொருளாதார பாதிப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு எதிர்வரும் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை பிற்போட முடியும்.
நாட்டு மக்கள் தேர்தலை கேட்கவில்லை என ஆளும் தரப்பினர் பாராளுமன்றத்தில் குறிப்பிடுகிறார்கள். நாட்டு மக்களுக்கு தேர்தல் அவசியமில்லை என்பதை ஒட்டுமொத்த மக்களையும் கூட்டி ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் குறிப்பிட முடியுமா,நாட்டு மக்கள் கோரும் போது எல்லாம் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஒன்றும் கேலிக் கூத்து அல்ல,
தேர்தலை நடத்த நிதி இல்லை என்று ஜனாதிபதி குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது. தேர்தலுக்கு 1100 மில்லியன் ரூபா முற்பணத்தையே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கோருகிறது,ஆனால் அதற்கும் நிதி இல்லை என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.
ஆனால் ஜனாதிபதி செயலகத்தின் செலவுகளுக்காக 1800 மில்லியன் ரூபா நிதி ஒதுக்க குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே நிதி இல்லை என்பது பொய், அரசாங்கத்துக்கு வாக்கு இல்லை என்பதே உண்மை.
ராஜபக்ஷர்கள்,ரணில் மற்றும் பிரேமதாஷ யார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிந்துக் கொண்டுள்ளார்கள்.இதன் காரணமாகவே உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் முறையாகவும், முறையற்றதாகவும் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.
அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் இடம்பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அது தமக்கு எதிராக உள்ளதால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது அரசியலமைப்பை மீறி செயற்படுகிறார்.
அரசியலமைப்பின் ஏற்பாடுகள் தமக்கு சாதகமாக காணப்படும் போது அதனை ஏற்படும்,எதிராக காணப்படும் போது அதனை புறக்கணிப்பதும் ஜனாதிபதியின் அடிப்படை அரசியல் கொள்கையாக உள்ளது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வெற்றிப் பெறும் சாத்தியம் காணப்படுமாயின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மார்ச் மாதம் 09 ஆம் திகதி தேர்தலை நடத்தியிருப்பார், படுதோல்வியடைவது உறுதி என்பதால் தான் அவர் தேர்தலை காலவரையறையின்றி பிற்போட முயற்சிக்கிறார்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் பிரபுக்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் ஆரம்பத்தை தோற்றுவிக்கும் என்பதால் தான் ரணில்-ராஜபக்ஷர்கள் மக்களாணைக்கு இடமளிப்பதை தடுக்கிறார்கள்.நாட்டு மக்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை ஜனாதிபதி தெரிந்துக் கொள்ள வேண்டும்.
ராஜபக்ஷர்களின் ஆட்சியை 20 வருடத்திற்கு அசைக்க முடியாது என்று கோட்டபய ராஜபக்ஷவை சூழ்ந்நிருந்தவர்கள் புகழ்பாடினார்கள்.
இறுதியில் நேர்ந்தது என்ன? தேசிய பாதுகாப்புக்காக தலைவராக்கியவர் தனது சுய பாதுகாப்பிற்காக நாட்டை விட்டு தப்பித்து சென்றார்.
ஒட்டு மொத்த மக்களும் ஒன்றிணைந்து விரட்டியடித்தார்கள்.69 இலட்ச மக்களாணைக்கு அந்நிலைமை என்றால் 134 உறுப்பினர்களின் பிரதிநிதியான ஜனாதிபதியின் நிலை எவ்வாறு அமையும்,ஆகவே மக்களாணையை மலினப்படுத்துவதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM