3 வருடங்களின் பின் டெஸ்ட் சதம் குவித்தார் கோஹ்லி ; ஆஸிக்கு எதிரான 4 ஆவது டெஸ்டில் இந்தியா முன்னிலையில்

Published By: Digital Desk 5

13 Mar, 2023 | 10:04 AM
image

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் போர்டர் - காவஸ்கர் மற்றும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 4ஆவதும் கடைசியுமான போட்டியில் விராத் கோஹ்லி குவித்த அபார சதத்தின் உதவியுடன் இந்தியா முன்னிலையில் இருக்கிறது.

அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் பெற்ற 480 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிய இந்தியா 571 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை மிகவும் அபாராமாகத் துடுப்பெடுத்தாடிய விராத் கோஹ்லி டெஸ்ட் போட்டி ஒன்றில் 3 வருட இடைவெளியின் பின்னர் சதம் குவித்தார்.

தனது 108ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் விராத் கோஹ்லி 6 மணித்தியாலங்களுக்கு மேல் துடுப்பெடுத்தாடி 364 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகளுடன் 186 ஓட்டங்களைக் குவித்தார். இது அவரது 28ஆவது டெஸ்ட் சதமாகவும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 75ஆவது சதமாகவும் அமைந்தது.

பங்களாதேஷுக்கு எதிராக ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் 2019 நவம்பரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் குவித்த 136 ஓட்டங்களே அவர் கடைசியாக டெஸ்ட் போட்டியில் குவித்த சதமாகும்.

விராத் கோஹ்லி சதம் குவித்த அதேவேளை 3 பெறுமதியான இணைப்பாட்டங்களிலும் பங்காற்றியிருந்தார்.

ரவீந்த்ர ஜடேஜாவுடன் 4ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களையும் ஸ்ரீகர் பரத்துடன் 5ஆவது விக்கெட்டில் 84 ஓட்டங்களையும் அக்சார் பட்டேலுடன் 6ஆவது விக்கெட்டில் 162 ஓட்டங்களையும் விராத் கோஹ்லி பகிர்ந்தார்.

ஜடேஜா 28 ஓட்டங்களையும் பரத் 44 ஒட்டங்களையும் அக்சார் பட்டேல் 79 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்தியாவின்  மொத்த எண்ணிக்கை 571 ஓட்டங்களாக இருந்தபோது விராத் கோஹ்லி கடைசியாக ஆட்டமிழந்தார்.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 91 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த அவுஸ்திரேலியா 4ஆம் நாள் கடைசி நேர ஆட்டத்தில் 6 ஓவர்களைத் தாக்குப் பிடிக்கும் வகையில் ட்ரவிஸ் ஹெட்டுடன் இராக்காப்பாளன் மெத்யூ கியூன்மானை ஆரம்ப ஜோடியாக  களம் இறக்கியது.  அவர்கள் இருவரும் 6 ஓவர்களைத் தாக்குப்பிடிக்க, அவுஸ்திரேலியா 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் 2ஆவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 3 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இது இவ்வாறிருக்க, இந்தப் போட்டி பெரும்பாலும் வெற்றிதோல்வியற்ற முடிவை நோக்கி நகர்வதாகவே இப்போதைக்கு தெரிகிறது. ஆனால், 88 ஓட்டங்கள் முன்னிலையில் இருக்கும் இந்தியா, கடைசி நாளன்று மிகத் திறமையாக பந்துவீசி தேநீர் இடைவேளைக்கு முன்னர் அவுஸ்திரேலியாவை 200 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தினால் அதற்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. அப்படி வெற்றிபெற்றால் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதையும் இந்தியா உறதி செய்துகொள்ளும்.

எவ்வாறாயினும் இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி முடிவு இலங்கை நேரப்படி நண்பகலுக்கு முன்னர் கிடைத்துவிடும் என்பதால் அந்த முடிவுடன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதிபெறுமா இல்லையா என்பது தெரியவந்துவிடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்