விமானத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மது அருந்திய விமானி விமானத்திலேயே மயங்கிவிழுந்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் கனடாவில் இடம்பெற்றுள்ளது.

கனடாவின் கால்கரி விமான நிலையத்தில்லிருந்து விமானம் ஒன்று கடந்த சனிக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் மெக்சிக்கோவுக்கு புறப்படத் தயாராக இருந்துள்ளது. இந்நிலையில் விமானம் புறப்படுவதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்னர், விமானத்தை இயக்கவிருந்த விமானி அளவுக்கு அதிகமான போதையால் விமானத்தின் உள்ளேயே மயங்கி விழுந்துள்ளார்.

விமானி மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து, அது குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு பயணிகள் தகவல் அளித்துள்ளனர். குறித்த விமானி அனுமதிக்கப்பட்ட அளவைவிட மூன்று மடங்கு அதிக மது அருந்தியிருந்தமை சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேறொரு விமானியின் உதவியுடன் விமானம் மெக்சிகோ பயணித்துள்ளது. மேலும் கடமை நேரத்தில் பொறுப்பில்லாமல் பணிக்கு வந்த அந்த விமானியை பாதுகாப்பு அதிகாரிகள் சிறையில் அடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.