வெற்றிகளை சாத்தியமாக்கும் நட்சத்திர குறியீடு

Published By: Ponmalar

11 Mar, 2023 | 03:35 PM
image

எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் நூறு சதவீதம் வெற்றி கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆனால் எம்முடைய கடினமான முயற்சிகள் பல.. குறைந்த அளவிலான வெற்றியை அளித்து எம்முடைய எதிர்பார்ப்பை பொய்யாக்குகிறது. இதன்போது ஜோதிட நிபுணர்களின் வழிகாட்டலை நாம் தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும். அவர்கள் பரிந்துரைக்கும் நட்சத்திரக் குறியீடுகளை தொடர்ந்து பாவித்தால்… எம்முடைய கடின முயற்சிகள் அனைத்தும் நூறு வீதம் வெற்றி தருவதை காணலாம்.

ஆனால் இதிலும் பல சூட்சுமங்கள் இருக்கிறது. உங்களுடைய ஜென்ம நட்சத்திர குறியீடுகளை தொடர்ச்சியாக பயன்படுத்துவதை விட.., உங்களுக்கு செல்வ வளத்தை அள்ளித் தரும் இரண்டாவது நட்சத்திரத்திற்குரிய குறியீடுகளையும், உங்களுக்கு பாக்கியத்தையும், லாபத்தையும், தெய்வீக அருளையும் அள்ளித்தரும் எட்டாவது நட்சத்திரத்திற்குரிய குறியீடுகளையும் தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது உங்களுடைய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

ஆனால் இதிலும் ஒரு நிபந்தனை உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். உங்களது இரண்டாவது நட்சத்திரத்தின் அதிபதி அல்லது எட்டாவது நட்சத்திரத்தின் அதிபதி உங்களுடைய ஜாதக கட்டத்தில் சுபத்தன்மையுடன் இருக்க வேண்டும். இப்படி ஒரு சூழலில் நீங்கள் உங்களுடைய இரண்டாவது நட்சத்திரத்தின் குறியீடுகளையும் எட்டாவது நட்சத்திரத்தின் குறியீடுகளையும் தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது உங்களது முயற்சிகளில் நூறு சதவீத வெற்றி கிட்டும்.

சிலருக்கு இரண்டாமிட  நட்சத்திரத்தின் அதிபதி மற்றும் எட்டாமிட நட்சத்திரத்தின் அதிபதிகள், சுபத் தன்மையுடன் இல்லாமல் பாவ கிரகங்களுடன் இணைவு பெற்றோ.. அல்லது பாதகாதிபதியாக இருந்தாலோ.. அல்லது அசுபராக இருந்தாலோ.. உங்களுடைய ஜென்ம நட்சத்திர குறியீடுகளையே நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

தற்போது ஒவ்வொரு நட்சத்திரத்திற்குரிய குறியீடுகளை காண்போம்.

அசுபதி, அஸ்வினி - குதிரை தலை உருவம்

பரணி-  மண் பாத்திரம் அல்லது மண் அடுப்பு அல்லது முக்கோண வடிவம்

கார்த்திகை - கத்தி, குறு வாள் அல்லது யாகத்தில் எழும் ஜோதியின் பிம்பம்

ரோகிணி - தேர், ஆலயம், ஆலமரம், சக்கரம்

மிருகசீரிஷம் - மான் தலை, தேங்காயில் இருக்கும் முக்கண்

திருவாதிரை - மனித தலை, வைரம், நீர்த்துளிகள்

புனர்பூசம் - வில், அம்பு கூடு

பூசம் - தாமரை மலர், அம்பு, பசுவின் மடி

ஆயில்யம் - நாகம் மற்றும் அம்மிக்கல்

மகம் - வீடு, பல்லக்கு, நுகம்

பூரம் - கட்டிலின் இரண்டு கால்கள், மெத்தை, வலம்புரி சங்கு, இடம்புரி சங்கு.

உத்திரம் - கட்டிலின் நான்கு கால்கள் மற்றும் மெத்தை

ஹஸ்தம் - வலது மற்றும் இடது கைகள் மற்றும் உள்ளங்கை

சித்திரை - முத்து மற்றும் ரத்தின கற்கள்.

சுவாதி - நுனிப்புல், காற்றின் அசையும் தீபச்சுடர்

விசாகம் - தோரணம், முறம், பானை செய்யும் சக்கரம்

அனுஷம் - குடை, மலர்ந்த  தாமரை பூ,  வளைந்த வில்

கேட்டை - குடை, குண்டலம், ஈட்டி

மூலம் - அங்குசம், சிங்கவால், யானையின் தும்பிக்கை

பூராடம் - பனைவிசிறி, முறம் மற்றும் கட்டிலின் கால்கள்

உத்திராடம் - யானை தந்தம், படுக்கை விரிப்பு, கட்டில் கால்கள்

திருவோணம் - காது, பாதச்சுவடு, அம்பு

அவிட்டம் - மிருதங்கம், உடுக்கை

சதயம் - பூங்கொத்து, வட்ட வடிவம்

பூரட்டாதி - கட்டிலின் இரண்டு கால்கள், இரு மனித முகங்கள், வாள்

உத்திரட்டாதி - கட்டில் கால்கள் மற்றும் இரட்டையர்கள்

ரேவதி - மீன் மற்றும் மத்தளம்.

உடனே எம்மில் பலரும் இத்தகைய வெற்றிக்கான குறியீடுகளை எங்கு பயன்படுத்த வேண்டும் என வினா எழுப்பவர்.

நீங்கள் வசிக்கும் இல்லம், பணியாற்றும் இடம், அணிந்திருக்கும் ஆடைகள், உங்களுடைய விற்பனை மற்றும் தொழிற்சாலை, உங்களது பெயர் பதவி முகவரி குறிக்கப்பட்ட பரிந்துரை கடிதத்திற்கான மேற்பகுதி... ஆகியவற்றில் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய குறியீடுகளை பயன்படுத்த வேண்டும்.  தகவல் : பாலசுப்பிரமணியன்

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்