உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மை முடிவுக்கு வரவேண்டியது அவசியம்

Published By: Nanthini

11 Mar, 2023 | 12:35 PM
image

ள்ளூராட்சி தேர்தல்களை ஒத்திவைப்பது தொடர்பிலான நிச்சயமற்ற தன்மை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

தற்போதைய தருணத்தில் அந்த தேர்தல்கள் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததாகவோ அல்லது தங்களுக்கு அனுகூலமானதாகவோ இருக்கப்போவதில்லை என்பதால் தேர்தல் நடத்தப்படக்கூடாது என்று அரசாங்கத்தின் போக்கினை, அரசு தரப்பு தலைவர்கள் வெளிப்படையாக பாராளுமன்றத்தில் ஆற்றும் உரைகளும் அங்கு நடைபெறும் விவாதங்களும் வெளிக்காட்டுகின்றன.

மார்ச் 9ஆம் திகதி நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலானது, தேவையான நிதியை விடுவிப்பதற்கு அரசாங்க திறைசேரி தவறியதால் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நிலைமை காணப்படுகிறது.

அரசியலமைப்பின் பிரகாரம், தேர்தல்கள் பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு அரசாங்க திணைக்களங்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பை வழங்கவேண்டியது முக்கியமானதாகும்.

உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கியத்துவம் வாய்ந்த இரு தீர்ப்புக்கள் தாமதமின்றி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற தெளிவான செய்தியை முழு நாட்டுக்கும் கூறியிருக்கின்றன.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகள் பாராளுமன்றத்தின் சிறப்புரிமையை மீறுவதாக அமைந்திருக்கின்றன என்ற காரணத்தின் அடிப்படையில் அவற்றை அலட்சியம் செய்யுமாறு அரசாங்க திணைக்களங்களுக்கு பாராளுமன்றத்துக்குள் இருந்து பகிரங்க அழைப்புகள் விடுக்கப்படுவதை கண்டு தேசிய சமாதானப் பேரவை கவலையடைகிறது.

ஜனநாயக செயன்முறைகளை பகிரங்கமாக கேள்விக்குள்ளாக்கி அவமதிக்கும் செயல்கள் சகல மட்டங்களிலும் அரசாங்க உறுப்பினர்களினால் முன்னெடுக்கப்படுகின்றன.  

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை போன்ற பழுத்த அனுபவமிக்க ஒரு பாராளுமன்றவாதியின் தலைமைத்துவத்தின் கீழ் இவ்வாறு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.

மக்களின் இறையாண்மை, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களின் மூலமாக அரசாங்கத்தின் சகல மட்டங்களிலும் தங்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கு மக்களுக்கு இருக்கும் உரிமை, நீதித்துறைக்கான மதிப்பு ஆகியவை ஜனநாயகத்தின் அத்திவாரங்களாக அமைகின்றன.

சட்டத்தின் ஆட்சியையும் ஆட்சிமுறையின் பல்வேறு நிறுவனங்களும் அவற்றின் அதிகாரங்களை முறையாக பிரயோகிப்பதை உறுதிசெய்யும் தடுப்புக்கள் மற்றும் சமப்படுத்தல் (Checks and Balances) முறைமையையும் பேணிப் பாதுகாக்க தவறுவது  ஜனநாயகத்தையும் நாட்டின் சர்வதேச நம்பகத்தன்மை மற்றும் தேசிய நலன்களையும் கடுமையாக மலினப்படுத்திவிடும்.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு மதிப்பளித்து தேர்தல் செயன்முறைகளை துரிதப்படுத்துமாறும் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்ட புதிய திகதியை (ஏப்ரல் 25) ஏற்றுக்கொள்ளுமாறும் தேசிய சமாதான பேரவை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கிறது. 

உரிய நேரத்தில் சுதந்திரமாகவும் நீதியாகவும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோட்பாட்டை பேணிப் பாதுகாப்பதற்கும், தேர்தல்களின் தேவை குறித்து அரசாங்கத்துக்கு நம்பிக்கையூட்டுவதற்கும் எதிரணி அரசியல் கட்சிகளை ஓர் அரங்குக்கு கொண்டுவருவதற்கு சிவில் சமூக அமைப்புக்களினால் முன்னெடுக்கப்படும் கூட்டுமுயற்சி தேசிய சமாதான பேரவைக்கு பெரு மகிழ்ச்சியை தருகிறது.

வாக்குரிமையை பாதுகாப்பதற்கான சிவில் சமூக கூட்டமைப்பினால் (Civil Society Collective for Protecting the Franchise) ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் ஒன்றில் 'வாக்களிக்கும் உரிமையை பாதுகாப்பதற்கு பொதுமக்கள் பிரதிநிதிகளின் சூளுரை'யில் கைச்சாத்திடுவதற்கு பிரதான எதிரணி அரசியல் கட்சிகள் சகலவற்றினதும் முன்னணி பிரதிநிதிகள் ஒன்றிணைந்திருக்கிறார்கள்.

அரசியல் கட்சிகள் வேறுபட்ட கோட்பாடுகளையும் இனச்சார்புகளையும் கொண்டிருக்கின்ற போதிலும், ஜனநாயக வாக்குரிமையை பேணிப் பாதுகாக்கும் விடயத்தில் எந்தவித பிளவுமின்றி அவை ஒன்றாக நிற்கின்றன.

வாக்குரிமையுடன் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் எதிரணி கட்சிகளினதும் சிவில் சமூக அமைப்புக்களினதும் குரலுக்கு  செவிமடுக்க வேண்டும் என்றும் தனிமைப்பட்டுப் போகாதிருக்குமாறும் நாம் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.

அவ்வாறு தனிமைப்படுவது, அரசாங்கம் நாட்டம் கொண்டிருக்கின்ற அரசியல் உறுதிப்பாட்டுக்கும் பொருளாதார மீட்சிக்கும் அனுகூலமாக அமையப்போவதில்லை. 

அரசாங்கத்தின் அபிவிருத்தி மூலோபாயங்களுக்கு அரசியல் சமுதாயத்தின் ஏனைய பிரிவினரின் மனமுவந்த ஒத்துழைப்பு அவசியமாகும். அரசியலமைப்பின் உத்தரவாதத்தின் பிரகாரம், உரிய நேரத்தில் தேர்தல்களை நடத்தாமல் அந்த ஒத்துழைப்பை பெறுவது சாத்தியமில்லை.

நீதித்துறையின் தீர்மானங்களுக்கும் சட்டத்தின் ஆட்சியுடன் தொடர்புடைய அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கும் அரசாங்கம் மதிப்பு கொடுக்கவேண்டியதும் அவசியமாகும். அது தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்க அத்தியாவசியமானதாகும். அது இல்லாமல், பொருளாதார மீட்சிக்கான வாய்ப்புக்கள் சாத்தியமில்லை!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13