வெற்றிமாறனின் 'விடுதலை-1' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

Published By: Nanthini

09 Mar, 2023 | 05:32 PM
image

மிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான சூரி, முதல் முறையாக கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'விடுதலை - பாகம் 1' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. 

இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்தியேக பிரம்மாண்டமான விழாவில், 'விடுதலை' படத்தின் இசையை இசைஞானி இளையராஜா வெளியிட, படக் குழுவினர் பெற்றுக்கொண்டனர்.

தமிழ் படைப்புலகில் முத்திரை பதித்த படைப்பாளிகளில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் தயாரான புதிய திரைப்படம் 'விடுதலை'. 

இரண்டு பாகங்களைக் கொண்டதாக தயாராகியிருக்கும் இந்த விடுதலை திரைப்படத்தின் முதல் பாகத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, நகைச்சுவை நடிகர் சூரி, கௌதம் வாசுதேவ் மேனன், தமிழ், சேத்தன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். 

நக்சல் பாரி இயக்கம் மற்றும் காவல்துறையின் அதிகாரம் ஆகியவற்றை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார். வி. மணிகண்டன் இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. முன்னோட்டத்தில் அடர்ந்த வனப் பகுதியின் ஊடாக மக்கள் படை எனும் மக்களுக்காக... மக்களின் உரிமைக்காக.. போராடும் நக்சல் பாரி இயக்கத்துக்கும், அதனை அடக்கி அவர்களை நல்வழிப்படுத்தும் காவல்துறையின் அதிகாரம் மற்றும் அணுகுமுறையும் இடம்பெற்றிருப்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. 

முன்னோட்டத்தின் இறுதியில் மக்கள் படை தலைவன் பெருமாளாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி பேசும் வசனங்கள் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

இதனிடையே இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்குபற்றிய இசைஞானி இளையராஜா பேசுகையில், 

''நான் இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறேன். நிறைய இயக்குநர்களிடமும் பணியாற்றியிருக்கிறேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன்.. 

'விடுதலை படத்தை இயக்கிய இயக்குநர் வெற்றிமாறன் வித்தியாசமான இயக்குநர். அவரது இந்தப் படம் தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தை பெறும். அவரது ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு வகையில் வித்தியாசமாக இருக்கிறது'' என்றார்.

இப்படத்தை பற்றி இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், 

''இசைஞானி இளையராஜாவுடன் பணியாற்றிய அனுபவம் மறக்க இயலாது. இந்தப் படத்தில் இடம்பெறவேண்டிய ஓர் உணர்வை நான் வார்த்தையாக இசைஞானியிடம் தெரிவித்தேன். அவர் அதனை துல்லியமாக உள்வாங்கிக்கொண்டு இசையாக, ஒலியாக, வெளிப்படுத்தி எம்மை ஆச்சரியப்படுத்தினார். 

நான் நினைத்ததை ஒலியாக உருவாக்கிய இசைஞானியின் திறனை வியந்து போற்றுகிறேன். பாடலாசிரியராக, பாடகராக, பின்னணி இசைக் கலைஞராக அவர் இந்த படத்துக்காக தன் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருக்கிறார். இதனை மறக்க இயலாது'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்