குஜராத்துக்கு முதலாவது வெற்றி : பெங்களூரின் தோல்வி தொடர்கிறது

Published By: Digital Desk 5

09 Mar, 2023 | 04:32 PM
image

(என்.வீ.ஏ.)

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினால் நடத்தப்படும் அங்குரார்ப்பண மகளிர் பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் குஜராத் ஜயன்ட்ஸ் முதலாவது வெற்றியை ஈட்டியதுடன் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தோல்வி தொடர்ந்த வண்ணம் உள்ளது.

தத்தமது முதலாவது வெற்றியைக் குறிவைத்து குஜராத் ஜயன்ட்ஸ் அணியும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை, ப்றேபோர்ன் விளையாட்டரங்கில் புதன்கிழமை (08) இரவு மோதிய போட்டியில் குஜராத் ஜயன்ட்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில் இரண்டு அணிகளிலும் வெளிநாட்டு வீராங்கனைகள் துடுப்பாட்டத்தில் அசத்தியமை விசேட அம்சமாகும்.

சொஃபியா டன்க்லி, ஹார்லீன் டியோல் ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் ஏஷ்லி கார்ட்னரின் துல்லியமான பந்துவீச்சும் குஜராத் ஜயன்ட்ஸ் அணியின் முதலாவது வெற்றிக்கு வழிவகுத்தன.

குஜராத்தை வீழ்த்த சொஃபி  டிவைன், எலிஸ் பெரி, ஹீதர் நைட் ஆகியோர் எடுத்த முயற்சிகள் இறுதியில் பலன் தராமல் போயின.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த குஜராத் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றது.

சொஃபியா டன்க்லி, ஹார்லீன் டியோல் ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைச் சதங்கள் குவித்ததுடன் 2ஆவது விக்கெட்டில் 24 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

28 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட சொஃபியா டன்க்லி 11 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 65 ஓட்டங்களை விளாசினார்.

ஹார்லீன் டியோல் 45 பந்துகளில் 9 புவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 67 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்களை விட ஏஷ்லி கார்ட்னர் (19), தயாளன் ஹேமலதா (16), அனாபெல் சதர்லண்ட் (14) ஆகியோர் தங்களாலான அதிகப்பட்ச துடுப்பாட்ட பங்களிப்பை வழங்கினர்.

பந்துவீச்சில் ஹீதர் நைட் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷ்ரேயன்கா பட்டில் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

202 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 190 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

குஜராத் அணியில் போன்றே பெங்களூர் அணியிலும் வெளிநாட்டு வீராங்கனைகளே துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர்.

ஆரம்ப விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் அணித் தலைவி ஸ்ம்ரித்தி மந்தனா 18 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தொடர்ந்து 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த சொஃபி டிவைன், எலிஸ் பெரி ஆகிய இருவரும் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர்.

எலிஸ் பெரி 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த பின்னர் ரிச்சா கோஷ் (10) விரைவாக ஆட்டமிழந்தார்.

இந் நிலையில் சொஃபி டிவைனும் ஹீதர் நைட்டும் அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும் முயற்சியில் இறங்கினர்.

ஆனால், சொஃபி டிவைன் 17ஆவது ஓவரின் முதல் பந்தில் அடித்த சிக்ஸ் போன்று அடுத்த பந்திலும் சிக்ஸ் அடிக்க முயற்சித்து 66 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தடுமாற்றம் அடைந்தது. டிவைன் 45 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களை அடித்திருந்தார்.

தொடர்ந்து கனிக்கா அஹூஜா (10), ஷ்ரேயன்கா பட்டில் (11 ஆ.இ.) ஆகியோர் எடுத்து முயற்சிகளும் கைகூடாமல் போனது.

ஹீதர் டைந் 11 பந்துகளில் 5 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 30 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

பந்துவீச்சில் ஏஷ்லி கார்ட்னர் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அனாபெல் சதர்லண்ட் 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

மும்பை - டெல்ஹி மோதல் இன்று

மகளிர் பிறீமியர் லிக் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இதுவரை தோல்வி அடையாமல் அணிகள் நிலையில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும்  மும்பை இண்டியன்ஸ் அணியும் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியும் ஒன்றையொன்று இன்று வியாழக்கிழமை (09) இரவு எதிர்த்தாடவுள்ளன.

சகலதுறைகளிலும் பலம்வாய்ந்த இந்த இரண்டு அணிகளில் ஒன்று இன்றைய போட்டியுடன் தோல்வி அடையாத அணி என்ற பட்டியிலில் இருந்து நீக்கப்படவுள்ளது.

இரண்டு அணிகளிலும் அதிசிறந்த சர்வதேச வீராங்கனைகள் இடம்பெறுவதால் இந்தப் போட்டி கடைசிவரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது தடவையாக சம்பியனானது...

2025-03-16 14:24:50
news-image

இரண்டாவது மகளிர் ரி20யில் இலங்கையை வென்ற...

2025-03-16 12:15:58
news-image

சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு -...

2025-03-16 03:29:57
news-image

கண்டியை விட 265 ஓட்டங்கள் முன்னிலையில்...

2025-03-16 03:20:50
news-image

சிட்னி ட்ரக் க்ளசிக்: உலக மெய்வல்லுநர்...

2025-03-16 00:05:00
news-image

சென் தோமஸ் அணியை 4 விக்கெட்களால்...

2025-03-15 23:59:55
news-image

49ஆவது தேசிய விளையாட்டு விழா நகர்வல...

2025-03-15 20:54:13
news-image

ஓரளவு சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு...

2025-03-14 19:29:36
news-image

நிப்புனைத் தொடர்ந்து ரமேஷ் சதம் குவிப்பு;...

2025-03-14 21:49:45
news-image

நியூஸிலாந்தை மண்டியிடச் செய்த அறிமுக வீராங்கனை...

2025-03-14 17:33:10
news-image

நியூட்டனின் சகலதுறை ஆட்டத்தால் 2ஆம் அடுக்கு...

2025-03-14 14:08:12
news-image

அவிஷ்க, கவின், அசலன்க ஆகியோரின் அபார...

2025-03-13 19:45:02