நியூஸிலாந்தில் சாதிக்குமா இலங்கை? WTC முதல் டெஸ்ட் நாளை ஆரம்பம்

Published By: Vishnu

08 Mar, 2023 | 08:50 PM
image

(நெவில் அன்தனி)

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் (ICC WTC) இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்த்தாடவேண்டும் என்ற நிறைந்த ஆர்வத்துடன் நியூஸிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கிறைஸ்ட்சேர்ச், ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (09) ஆரம்பமாகும் முதலாவது போட்டியுடன் இலங்கை எதிர்கொள்ளவுள்ளது.

இலங்கை நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு இப் போட்டி ஆரம்பமாவுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் சுமார் 8 மாத இடைவெளிக்குப் பின்னர் இலங்கை தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளதால் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் கடும் சவாலை எதிர்கொள்ளும் என கருதப்படுகிறது.

மறுபுறத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய நியூஸிலாந்து, 2ஆவது போட்டியில் ஒரு ஓட்டத்தால் பரபரப்பான வெற்றியை ஈட்டியது. இந்த வெற்றியினால் உத்வேகம் அடைந்துள்ள நியூஸிலாந்து, இலங்கையுடனான தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ளது.

மற்றைய போட்டி முடிவு இலங்கையின் கட்டுப்பாட்டில் இல்லை

'ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடவேண்டும் என்ற விருப்பமும் ஆர்வமும் இலங்கை வீரர்கள் அனைவரிடமும் நிறையவே குடிகொண்டுள்ளது. ஆனால், மற்றைய டெஸ்ட் போட்டி முடிவு எமது கட்டுப்பாட்டில் இல்லை' என செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரட்ன தெரிவித்தார்.

ஏனெனில் இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 4ஆவதும் கடைசியுமான டெஸ்;ட் போட்டியும் இன்று ஆரம்பமாகவுள்ளது. ஏற்கனவே இறுதிப் போட்டியில் விளையாட அவுஸ்திரேலியா தகுதிபெற்றுவிட்ட நிலையில் இந்தியாவுக்கு இந்தப் போட்டி தீர்மானம் மிக்கதாக அமையவுள்ளது. அப் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் இறுதிப் போட்டியில் விளையாட இரண்டாவது அணிகயாக இந்தியா தகுதிபெறும்.

அவரது கருத்துப்படி இந்தத் தொடர் மிகவும் சவால் மிக்கதாக இலங்கைக்கு அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும்  இலங்கை வெற்றிகொண்டதே இல்லை. நியூஸிலாந்துக்கு எதிராக அங்கு விளையாடிய 19 டெஸ்ட் போட்டிகளில் 2இல் மாத்திரமே இலங்கை வெற்றிபெற்றுள்ளது. 1994/95இல் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட தொடரில் மாத்திரமே இலங்கை 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் வெற்றிபெற்றது. அதன் பின்னர் 2006/07 தொடரை 1 – 1 என சமப்படுத்திக்கொண்ட இலங்கை மற்றைய 5 தொடர்களில் தோல்வியையே சந்தித்தது.

இது இவ்வாறிருக்க, இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்று முடிந்துள்ள 36 டெஸ்ட் போட்டிகளில் 16 – 9 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து முன்னிலையில் இருக்கிறது. 11 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளன.

இந்த முடிவுகளின் அடிப்படையில் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை கடும் சவாலை எதிர்கொள்ளும் என்று கூறலாம்.

டெஸ்ட் அரங்கில் 8 மாதங்களின் பின்னர் இலங்கை

பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த வருடம் ஜுலை மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டிக்கு பின்னர் இலங்கை வீரர்கள் இப்போதுதான் டெஸ்ட் தொடர் ஒன்றை எதிர்கொள்ளவுள்ளனர்.

இதனிடையே உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மாத்திரமே இலங்கை வீரர்கள் விளையாடி வந்துள்ளனர். அண்மையில் நிறைவுபெற்ற தேசிய சுப்பர் லிக் 4 நாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் டெஸ்ட் குழாத்தில் இடம்பெறும் வீரர்கள் விளையாடியதுடன் அவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி இருந்தனர்.

அத்துடன் நியூஸிலாந்து சுவாத்தியத்தை ஒத்த ரதல்லை மைதானத்தில் இலங்கை வீரர்கள் பெற்ற பயற்சிகள் அவர்களுக்கு சிறந்த பலனைக் கொடுத்துள்ளதாக அறியக்கிடைக்கிறது.

எனவே இந்த அனுபவங்களுடன் நியூஸிலாந்து அணியை நம்பிக்கையுடன் இலங்கை அணி எதிர்கொள்ளவுளளது.

இந்தத் தொடருக்கு முன்னதாக ஏற்பாடாகியிருந்த 4 நாள் பயிற்சிப் போட்டியில் ஓஷத பெர்னாண்டோ (78 உபாதையினால் ஓய்வு), குசல் மெண்டிஸ் (95), ஏஞ்சலோ மெத்யூஸ் (38), தினேஷ் சந்திமால் (35) ஆகியோர் திறமையை வெளிப்படுத்தினர். ஆனால், அந்தப் போட்டி மழையினால் 2ஆம் நாள் ஆட்டத்துடன் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததால் ஏனையவர்களுக்கு துடுப்பெடுத்தாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இலங்கையின் துடுப்பாட்டம் 7ஆம் இலக்கம் வரை பலம்வாய்ந்ததாக இருக்கின்றபோதிலும் பந்துவீச்சில் போதிய அனுபவசாலிகள் இல்லாதது பெருங் குறையாகும்.

முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் (6,953 ஓட்டங்கள்), அணித் தலைவர் திமுத் கருணாரட்ன (6023), தினேஷ் சந்திமால் (4936), குசல் மெண்டிஸ் (3402), தனஞ்சய டி சில்வா (2815), நிரோஷன் திக்வெல்ல (2750) ஆகியோர் இலங்கையின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களாக விளங்குகின்றனர்.

கசுன் ராஜித்த, லஹிரு குமார, அசித்த பெர்னாண்டோ, விஷ்வா பெர்னாண்டோ, ப்ரபாத் ஜயசூரிய ஆகிய அனைவருமே குறைந்த எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளிலேயே விளையாடியுள்ளனர்.

ஆனால், சுழல்பந்துவீச்சாளர் ப்ரபாத் ஜயசூரிய 3 டெஸ்ட் போட்டிகளில் 29 விக்கெட்களைக் கைப்ப்ற்றி தான் திறமைசாலி என்பதை நிரூபித்துள்ளார். ஆனால், காலி விளையாட்டரங்கில் மாத்திரமே அவர் விளையாடியுள்ளார். நியூஸிலாந்து ஆடுகளங்களில் அவர் சாதிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அவரைவிட சகலதுறை வீரர் தனஞ்சய டி சில்வா 33 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். ஏஞ்சலோ மெத்யூஸும் 33 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ள போதிலும் அவர் தற்போது துடுப்பாட்ட வீரராக மாத்திரமே அணியில் இடம்பெறுகிறார். 

இதேவேளை, அங்குரார்ப்பண உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வெற்றிகொண்டு முதலாவது சம்பியனான நியூஸிலாந்து, இம்முறை பிரகாசிக்கத் தவறி அணிகள் நிலையில் பின்தள்ளப்பட்டுள்ளது. எனினும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை வெற்றிவாகையுடன் முடிக்கும் வகையில் இலங்கையை வீழ்த்த கடுமையாக முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

துடுப்பாட்டத்தைப் பொறுத்த மட்டில் இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சம அளவில் இருக்கின்ற போதிலும் பந்துவீச்சில் நியூஸிலாந்து சற்று பலம்வாய்ந்ததாக தென்படுகிறது. எனவே இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடுவது அவசியமாகும்.

அணிகள் விபரம் (பெரும்பாலும்)

இலங்கை: ஓஷத பெர்னாண்டோ, திமுத் கருணாரட்ன (தலைவர்), குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல, கசுன் ராஜித்த, விஷ்வா பெர்னாண்டோ, லஹிரு குமார அல்லது அசித்த பெர்னாண்டோ, ப்ரபாத் பெர்னாண்டோ.

நியூஸிலாந்து: டொம் லெதம், டெவன் கொன்வே, கேன் வில்லியம்சன், வில் யங், ஹென்றி நிக்கல்ஸ், டெரில் மிச்செல், டொம் ப்ளன்டெல், மைக்கல் ப்றேஸ்வெல், டிம் சௌதீ (தலைவர்), மெட் ஹென்றி, நீல் வெக்னர், ப்ளயார் டிக்னர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை...

2024-10-13 23:45:22
news-image

பரபரப்பான முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட்...

2024-10-14 00:15:30
news-image

மத்திய ஆசிய கரப்பந்தாட்டத்தில் இலங்கை ஐந்தாம்...

2024-10-13 17:01:19
news-image

சகலதுறைகளிலும் கேர் பிரகாசிப்பு: இலங்கையுடனான போட்டியில்...

2024-10-13 04:26:05
news-image

பங்களாதேஷுக்கு எதிரான மகளிர் ரி20 உலகக்...

2024-10-13 04:23:14
news-image

இலங்கை மகளிர் அணி மிக மோசமாக...

2024-10-12 15:11:16
news-image

பாகிஸ்தானை 9 விக்கெட்களால் வீழ்த்திய அவுஸ்திரேலியா...

2024-10-12 01:08:44
news-image

20 வயதின்கீழ் ஆண்களுக்கான மத்திய ஆசிய...

2024-10-11 19:39:38
news-image

பாகிஸ்தானை இன்னிங்ஸால் வென்றது இங்கிலாந்து; வரலாறு...

2024-10-11 15:36:18
news-image

பங்களாதேஷை பந்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 8...

2024-10-10 23:19:28
news-image

ப்றூக் முச்சதம், ரூட் இரட்டைச் சதம்;...

2024-10-10 22:41:38
news-image

பின்கள வீரர்களின் தவறுகளாலும் கோல்காப்பாளரின் கவனக்குறைவாலும்...

2024-10-10 19:17:14