கர்மாவைக் குறைக்குமா குரு தட்சிணாமூர்த்தி வழிபாடு…?

Published By: Ponmalar

08 Mar, 2023 | 05:44 PM
image

தற்போது நாம் வாழும் இந்த பிறவியில் நாம் எம்முடைய பெற்றோர்களை நாம் தெரிவு செய்யவில்லை. பெற்றோர்களை மட்டுமல்ல... சில ரத்த உறவுகளையும் நாம் தெரிவு செய்ய இயலாது. ஏன் நமக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்த போதும்.. நல்ல நட்புகளையும் எம்மால் தெரிவு செய்து, தொடர முடிவதில்லை. சோதிடத்தின் துணையுடன்... பெற்றோர்களின் ஆசியுடன் வாழ்க்கைத் துணையை தெரிவு செய்யும் பாக்கியம் சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. பல தருணங்களில் நாம் நினைத்தது ஒன்று. நடப்பது வேறொன்றாகவே இருக்கிறது. இவை அனைத்திற்கும் காரணம் கர்மாவும், பல ஜென்மங்களாக எம்மைத் தொடரும் கர்ம வினைகளும்தான்.

கடந்த ஜென்மத்தில் செய்த பாவ புண்ணிய செயல்களின் அடிப்படையில் இந்த பிறவியில் அதனை அனுபவிப்பதற்காக பிறந்திருக்கிறோம். இதனை ஆன்மீக பெரியோர்கள், 'சஞ்சித கர்மா', 'பிராரப்த கர்மா', 'ஆகாமிய கர்மா' என பல்வேறு கர்மாவாக வகைப்படுத்தி இருக்கிறார்கள். எத்தனை பிரிவுகளாக வரையறை செய்திருந்தாலும், இந்த பிறவியில் கர்ம வினைகளை அதற்குரிய வீரியத்துடனும், அடர்த்தியுடனும் கடந்து செல்வது தவிர்க்க இயலாது. இதற்கு நிதானமும், பொறுமையும் அவசியம் தேவை. இதனை காலம் நமக்கு கற்பிக்கும். கர்ம வினைகளைப் பற்றி கதைப்பதை விட, அதனை களைவதற்கான வழிகளை விளக்கலாமே..! என சிலர் தொடர்ந்து வாசிக்கும் போது மனதில் எண்ணுவர்.

அனைத்திற்கும் அதாவது கர்ம வினைகளை களைவதற்கும், குறைப்பதற்கும், அதற்காக விதிக்கப்பட்ட தண்டனையின் அளவை குறைப்பதற்கும் தட்சிணாமூர்த்தி வழிபாடு தான் சிறந்தது. தட்சிணாமூர்த்தி சிவ அம்சம் என்றாலும், சிவபிரானுக்கும், பிரம்மாவிற்கும், முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும் வேதத்தை விளக்கியவர். இதனாலேயே இவர் குருவாகிறார். குருவை சரணடைந்தால் உங்களுடைய பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்பது ஆன்மீக பெரியோர்களின் வாக்கு. அதனால் குருவாக இருக்கும் தட்சிணாமூர்த்தியை வணங்கினால் கர்ம வினைகள் நீங்கும்.

மேலும் தட்சிணாமூர்த்தியை பிறைசூடிய தெய்வம் என்றும், ஞானத்தை அள்ளி வழங்கும் ஞானகுரு என்றும் ஆன்மீக பெரியோர்கள் குறிப்பிடுகிறார்கள். அதிலும் தென் திசையை நோக்கி அருளாசி வழங்குபவராக இருப்பதால் இவரை வணங்கினால் ஞானம் கிட்டும். அதாவது நீங்கள் யார்? என்பதை உணர்ந்து கொள்வதற்கான பாதையை காட்டுபவர். அதில் பயணிப்பதற்கான துணிவையும், அருளையும், ஆசியையும் வழங்குபவர். இவரை இவருக்கான மந்திரங்களுடன் ஒரு முகமாக தியானித்து உச்சரித்தால் அவரது அருள் கிடைக்கும். உங்களது கோரிக்கை நிறைவேறும். குறிப்பாக உங்களது கர்ம வினைகளை களைய, ' ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தையே மஹ்யம் மேதாம் ப்ரஞ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா ' எனும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மேலும் இந்த மந்திரத்தை சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்தியின் சன்னதியின் முன் அமர்ந்து, வியாழக்கிழமைகளில் குரு ஓரை தருணத்தில், 108 முறை ஜெபிக்க வேண்டும். இதனை இல்லத்திலும்.., உங்களுக்கு எப்போதெல்லாம் ஓய்வு கிடைக்கிறதோ அப்போதெல்லாம்.. மனதில் தட்சிணாமூர்த்தியை நிறுத்தி இந்த மந்திரத்தை 21, 27, 54, 108 என்ற எண்ணிக்கையில் ஜெபித்தால் நமது கர்ம வினைகள் நீங்கி இந்த பிறவியில் எமக்கு கிடைக்க வேண்டிய அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்