இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பொதுக்கூட்டத்தை நடத்தி தேர்தல் குழுவை நியமிக்குமாறு ரஞ்சித் ரொட்றிகோ வேண்டுகோள்

Published By: Digital Desk 5

06 Mar, 2023 | 01:45 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (FFSL) நிறைவேற்றுச் சபை போதிய கோரத்தை இழந்துள்ளதால் அதன் நிருவாக சபை தொழல்நுட்பரீதியாக செயலிழந்துள்ளது. 

எனவே, புதிய தேர்தலுக்கு உடன் அழைப்பு விடுக்க வெண்டும் என விளையாட்டுத்துறை அபிவிருத்திக் திணைக்கள விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரியவை கடிதம் மூலம் நீர்கொழும்பு கால்பந்தாட்ட லீக் தலைவரும் FFSL முன்னாள் தலைவருமான ரஞ்சித் ரொட்றிகோ கோரியுள்ளார்.

FFSLஇன் சமகால தலைவர் ஜெயரட்னம் ஸ்ரீ ரங்காவின் தலைமையின்கீழ் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஆளுமை செயற்பாடுகளில் பல முறைகேடுகள் இடம்பெற்றுவருவதாகவும் பீபாவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு அவர் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதையும் எடுக்கத் தவறியுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் ரஞ்சித் ரொட்றிகோ சுட்டிக்காட்டியுள்ளார்.

அக் கடிதத்தில் மேலும் குறிப்படப்பட்டுள்ளதாவது,

'2023 ஜனவரி 14ஆம் திகதி FFSLஇன் தலைவராக  நிறைவேற்று குழுவின் ஏழு உறுப்பினர்களுடன் ஸ்ரீ ரங்கா தெரிவுசெய்யப்பட்டார். 1973இன் 25ஆம் இலக்க விளையாட்டுத்துறை சட்டத்தின் கீழ் உள்ள சட்ட விதிகளையும் ஒழுங்கு விதிகளையும் பின்பற்ற வேண்டியது அவர்களது பிரதான பணியாக இருந்தது.

'ஆனால், 2023 ஜனவரி 14ஆம் திகதி புதிய நியமனங்களுக்குப் பின்னர் FFSLஇல் எந்த ஒரு செயற்பாடும் நடைபெறுவதாக நாங்கள் காணவில்லை.  இது எங்களை ஆச்சரியப்பட வைக்கிறது. இதன் காரணமாக FFSL முகாமைத்துவம் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. 

வருடாந்தப் பொதுக் கூட்டத்துக்குப் பின்னர் நிலையியல் குழுக்களை நியமிப்பதற்கும் FFSL நிருவாகத்தை சரியான பாதையில் சீரமைப்பதற்கும் ஏனைய நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கும் நாட்டில் கால்பந்தாட்ட விடயங்களை நடாத்துவதற்கு குழுக்களிடம் பொறுப்புக்களை  ஒப்படைப்பதற்கும் FFSL இன் பேரவையைக் கூட்டுவதற்கு ரங்கா தவறிவிட்டார்.

'FFSL நிருவாக சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் உட்பட நான்கு  உத்தியோகத்தர்கள் சில தினங்களுக்கு முன்னர் தலைவர் மீதான நம்பிக்கையின்மையைக் காரணம் காட்டி தங்களது இராஜினாமாக்களை சமர்ப்பித்திருந்தனர். இதனால் FFSL முற்றாக செயலிழந்துள்ளது. 

FFSL  யாப்பு விதிகளுக்கு அமைய 11 நிருவாக சபை உத்தியோகத்தர்கள் இருக்கவேண்டும். ஆனால் தற்போது நான்கு (04) உத்தியோகத்தர்களே எஞ்சியுள்ளனர். உரிய கோரம் இல்லாததால் நிருவாக சபையின் செல்லுபடித்தன்மை தொழில்நுட்ப ரீதியாக இல்லாமல் போயுள்ளது.

'FFSLஇன் தற்போதைய நிலை முற்றிலும் குழம்பிப்போய் இருப்பதுடன் கால்பந்தாட்ட விளையாட்டுக்கு மேலும் பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு தங்களது உரிய தலையீடு அவசியம்' என விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகத்திடம் ரஞ்சித் ரொட்றிகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், FFSL இல் இடம்பெறும் முறையற்ற நிருவாக செயற்பாடுகள் எனக் குறிப்பிட்டு 18 விடயங்களை விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரியவின் கவனத்திற்கு கடிதம் மூலம் ரஞ்சித் ரொட்றிகோ கொண்டுவந்துள்ளார்.

'யாப்பு விதிகளை திருத்தி அமைக்குமாறும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தேர்தல் முறைமையை ஏற்படுத்துமாறும் FIFA மற்றும் AFC ஆகியன விடுத்த வேண்டுகோளை கடைப்பிடிக்கவும் நிறைவேற்றவும் முன்னைய FFSL நிருவாகம் தவறியுள்ள நிலையில், புதிதாக தெரிவுசெய்யப்பட்ட நிருவாகம் உடனடியாக அதன் வழிகாட்டித் திட்டத்தை விபரிப்பதற்கு FIFA மற்றும் AFCயை தொடர்புகொண்டதாகத் தெரியவில்லை.

'புதிய FFSL நிருவாகம் அதன் வழிகாட்டித் திட்டம் குறித்து FIFA மற்றும் AFC ஆகியவற்றுக்கு அறிவிக்கத் தவறியதால் புதிய நிருவாகம் தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு நாட்களுக்குப் பின்னர் 2023 ஜனவரி 22ஆம் திகதி அன்று, FIFA சில காரணங்களை முன்வைத்து  இலங்கையை அதன் அங்கத்துவத்திலிருந்து தடை செய்தது. 

இதுவரை, புதிய FFSL  நிருவாகம்  தடையை நீக்க எவ்வித அக்கறையோ அல்லது சரியான நடவடிக்கையோ எடுக்கவில்லை. இந்த நிலையை சமாளிப்பதற்கு பொதுச் சபை உறுப்பினர்களின் நிபுணத்துவம் மற்றும் கருத்துக்களைப் பெறுவதற்கு பொதுச் சபையைக் கூட்டி கலந்துரையாடல்களை நடத்தவோ அல்லது இணைந்து செயற்படவோ ரங்கா தலைமையிலான நிருவாகம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

'FFSL தலைவர் தனக்கு நன்கு தெரிந்த காரணங்களுக்காக தனது ஊழியர்களை வார்த்தைகளால் துஷ்பிரயோகம் செய்துள்ளார். மேலும் இது தொடர்ச்சியாக இடம்பெற்றதன் விளைவாக FFSLஇன் ஏழு (07) நிரந்தர மற்றும் சிரேஷ்ட ஊழியர்கள் தங்கள் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். இதனை, இலங்கையின் முன்னணி விளையாட்டு நிருவாக சபைக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாக நான் அவதானிக்கிறேன்.

'கால்பந்தாட்ட லீக்குகளின் பல அதிகாரிகளும் FFSLஇன் ஊழியர்களும் தற்போதைய FFSL தலைவரின் ஏச்சுப் பேச்சுக்கு ஆளாகியுள்ளனர், அவருடைய பதவிக்காலம் 2023 மே 31 அன்று முடிவடைகிறது. 

ஆனால், விளையாட்டுத்துறை அமைச்சரின் ஆசியுடன் இரண்டு (02) வருட காலம் தனது பதவி நீடிக்கப்படும் எனத் தெரிவித்து அவர்களை ஏசியுள்ளதுடன் அச்சுறுத்தியும் உள்ளார். இதனை உயர்மட்ட மற்றும் பொறுப்புள்ள அதிகாரியின் நெறிமுறையற்ற மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று கூறலாம்.

'தனது முன்னோடியின் முறைகேடுகளை கண்டறிந்து முன்னாள் நிருவாகம் மீது பழி சுமத்தி அவர்களை எதிர்காலத் தேர்தல்களில் போட்டியிட தகுதியற்றவர்களாக்கும் நோக்கத்துடன் ஆறு பேர் கொண்ட குழுவை நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சரிடம் செல்வாக்கு செலுத்திவருவதாக தற்போதைய FFSL தலைவர் பெருமை அடித்துக்கொள்வதாகவும் நம்பத்தகுந்தவகையில் அறியக் கிடைக்கிறது. இதுவும் தற்போதைய FFSL தலைவரின் பொறுப்பற்ற ஒரு செயலாகும்' என்பன தனது கடிதத்தில் ரஞ்சித் ரொட்றிகோ சுட்டிக்காட்டியுள்ள பிரதான விடயங்களாகும்.

முகாமைத்தவ கணக்கு அறிக்கைகள், வருடாந்த கணக்கு அறிக்கைகள் ஆகியன உறுப்பினர்களின் ஒப்புதலுக்காக பகிரப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள ரஞ்சித் ரொட்றிகோ, 2023ஆம் ஆண்டிற்கான வருடாந்த செயல் திட்டத்தையும் உறுப்பினர்களின் ஒப்புதலுக்காக ஸ்ரீ ரங்கா தலைமையிலான நிருவாகம் சமர்ப்பிக்கத் தவறிவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 14, 2023 அன்று ரங்கா FFSLஇன் தலைவராக தெரிவான பின்னர், இலங்கையில் கால்பந்தாட்டத்திற்கு பொறுப்பான அமைப்பினால் கால்பந்தாட்டம் தொடர்பான எந்தவொரு செயற்பாடும் நடைபெறவில்லை. கால்பந்தாட்ட லீக்குகள் மட்டுமே தங்களுக்கு தொடர்புடைய வேலைத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளன என்பதையும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

FFSLஇன் முன்னாள் தலைவர் மற்றும் நீர்கொழும்பு கால்பந்தாட்ட லீக்கின் சமகால தலைவர் என்ற முறையில், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள உண்மைகள் மற்றும் குறிப்புகளின் அடிப்படையில், ஸ்ரீ ரங்கா தெரிவுசெய்யப்பட்ட நாளிலிருந்து அவர் நடந்துகொண்ட முறை, செயற்படும் விதம் ஆகியவற்றை நோக்கும்போது அவருக்கு நிருவாகத் திறன்கள் மற்றும் மற்றவர்களுடனான நல்லுறவுகள் இல்லை என்பதை நிச்சயமாக கூற முடியும் என விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் ரஞ்சித் ரொட்றிகோ தெரிவித்துள்ளார்.

'FIFAவினால் FFSLக்கும் இலங்கைக்கும் விதிக்கப்பட்டுள்ள தடைக்கு மத்தியில் ஒரு விளையாட்டுத்துறை அமைப்பின் தலைவர் திறனற்ற முறையில் செயல்பட்டால், அது நாட்டின் நற்பெயரை ஒட்டுமொத்தமாக மேலும் பாதிக்கச் செய்யும். பதவி வகிக்கும் ஆர்வத்தைத் தவிர, கால்பந்தாட்ட வளர்ச்சிக்கான தூரநோக்கோ குறிக்கோளோ ஸ்ரீ ரங்காவுக்கு இல்லை என்பது தெளிவாகிறது.

'எனவே, முந்தைய நிருவாகத்தின் பதவிக்காலம் மற்றும் செயல்களை கவனத்தில்கொண்டு, 2023 மே 31ஆம் திகதியுடன் முடிவடையும் FFSL இன் தற்போதைய பதவிக் காலத்தை நீட்டிப்பதன் மூலம் இதுபோன்ற பேரழிவு மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்யுமாறு பொறுப்புணர்வுடன் கேட்டுக்கொள்கிறேன். 

எனவே FIFA மற்றும் AFC  ஆகியவற்றின் தேவைகளுக்கு கட்டுப்பட்டு இலங்கையின் நற்பெயரை மீண்டும் நிலைநிறுத்தி கால்பந்தாட்டத்தை அதன் சரியான பாதைக்கு கொண்டுவருவது தற்போதைய FFSL நிருவாகத்தினது பொறுப்பு என்பதை ஒப்புக்கொள்ளுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

'மேலும், 2023 மே 31ஆம் திகதியிலிருந்து குறைந்தது 2 மாதங்களுக்கு முன்னர் 2023 மார்ச் 20ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் விசேட பொதுக்கூட்டத்தைக் கூட்டி வேட்புமனுக்களை கோருவதற்கு ஒரு தேர்தல் குழுவை நியமிக்குமாறு பரிந்துரைக்கிறேன். 

அதன் மூலம் 2023 மே 31ஆம் திகதி முறையான தேர்தலை நடத்துமாறும் கேட்டுக்கோள்கிறேன். வீழ்ச்சி அடைந்துள்ள கால்பந்தாட்டத்தையும் FFSLஐயும் இதன் மூலம் காப்பாற்றலாம். 

அத்துடன் அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் அனைத்து மட்டங்களிலும் அதன் பங்குதாரர்களுக்கு உதவலாம் என்பதை தங்களின் கவனத்துக்கு கொண்டுவருகிறேன்' என அக் கடிதத்தில் ரஞ்சித் ரொட்றிகோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21