WPL: பரபரப்பான போட்டியில் குஜராத்தை ஒரு பந்து மீதமிருக்க UP வொரியர்ஸ் வென்றது

Published By: Digital Desk 5

06 Mar, 2023 | 11:23 AM
image

(என்.வீ.ஏ.)

குஜராத் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிராக மும்பை, டி. வை. பட்டில் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (05) இரவு மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய மகளிர் பிறிமீயர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் UP வொரியர்ஸ் (உத்தர பிரதேஷ்) ஒரு பந்து மீதமிருக்க ஒரு விக்கெட்டால் வெற்றியீட்டியது.

குஜராத் ஜயன்ட்ஸ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 170 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய UP வொரியர்ஸ் அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

போட்டியின் கடைசி ஓவரில் UP வொரியர்ஸின் வெற்றிக்கு மேலும் 19 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் 2 வைட்களுடன் க்றேஸ் ஹெரிஸ் 2 சிக்ஸ்கள் அடங்கலாக 18 ஓட்டங்களைக் குவித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். 

UP வொரியர்ஸ் அணி 16ஆவது ஓவரில் 7ஆவது விக்கெட்டை இழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 105 ஓட்டங்களாக இருந்தது. அப்போது குஜராத் ஜயன்ட்ஸ் சிறப்பான நிலையில் இருந்ததால் அவ்வணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது.

ஆனால், க்றேஸ் ஹெரிஸ், சொஃபி எக்லஸ்டோன் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் 25 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து UP வொரியர்ஸ் அணிக்கு பரபரப்பான வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.

க்றேஸ் ஹெரிஸ் 26 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 59 ஓட்டங்களுடனும் சொஃபி எக்லஸ்டோன் 12 பந்துகளில் 21 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

அவர்களை விட கிரான் நவ்கிர் 5 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 53 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் கிம் காத் 36 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த குஜராத் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.

சபிமெனி மெகனா (24), சொஃபியா டன்க்லி (13) ஆகிய இருவரும் 3.5 ஓவர்களில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், 4 விக்கெட்கள் சீரான இடைவெளியில் விழ குஜராத் ஜயன்ட்ஸ் தடுமாற்றம் அடைந்தது.

இந் நிலையில் ஹாலின் டியொலும் ஏஷ்லி கார்ட்னரும் 29 பந்துகளில்  44 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.

ஹாலீன் டியொல் 7 பவுண்டறிகளுடன் 46 ஓட்டங்களையும் ஏஷ்லி கார்ட்னர் 25 ஓட்டங்களையும் பெற்றனர். தொடர்ந்து தயாலன் ஹேமலதா ஆட்டம் இழக்காமல் 21 ஓட்டங்களைப் பெற்று அணியின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்துக்கொடுத்திருந்தார்.

பந்துவீச்சில் சொஃபி எக்லஸ்டோன் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தீப்தி ஷர்மா 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

மும்பை இண்டியன்ஸ் அணிக்கும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் இடையிலான போட்டி மும்பை, ப்றேபோன் விளையாட்டரங்கில் இன்று (06) இரவு நடைபெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்